(மன்னார் நிருபர்)
(30-04-2022)
மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஒன்றிணைந்து இன்று சனிக்கிழமை(30) காலை 10.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
குறித்த போராட்டமானது கடந்த கடந்த 23-03-2022 அன்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மீது அரச படையினர் மேற்கொண்ட அராஜகத்தை எதிர்த்து இடம் பெற்றது.
-குறித்த போராட்டத்தில் மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்,மனித உரிமை செயற்பாட்டாளர்கள்,உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
-இதன் போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரச காணாமல் ‘ஆக்கப்பட்டோருக்கு பதில் சொல்,காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எங்கே?,சர்வதேச விசாரணை வேண்டும்,ராணுவத்தின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகள் எங்கே?,20 ஆம் திருத்தத்தை நீக்கு,உள்ளிட்ட பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்ட மை குறிப்பிடத்தக்கது.
இதன் போது கருத்து தெரிவித்த மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா,,,,,
நாங்கள் இன்று நேற்று இந்த போராட்டத்தில் ஈடுபடவில்லை. கடந்த 12 வருடங்களுக்கும் மேலாக உறவுகளை தொலைத்த தாய்மார்கள் வீதிகளில் நின்று போராடிக் கொண்டிருக்கிறோம்.
இந்த அரசாங்கம் இது வரையில் எமக்கான நல்ல ஒரு முடிவை கூறவில்லை . அதனால் இலங்கை அரசில் நம்பிக்கை இல்லாமல் சர்வதேசம் எமக்கான நீதியை பெற்றுத்தர வேண்டும் என்று கேட்கின்றோம்.
ஆனால் இந்த சர்வதேசமும் கண்விழித்து பார்க்கவில்லை. இப்படியாக இருக்கும் சூழ்நிலையில் நாங்கள் யாரிடம் போய் நீதியை கேட்பது?
இந்த அரசாங்கத்துடன் சேர்ந்து நின்று சர்வதேசமும் வேடிக்கை பார்க்கிறது? எனும் கேள்வி எழுகிறது.
கண்முன்னே கைகளால் ஒப்படைத்த உறவுகளை தொலைத்துவிட்டு இன்று நாங்கள் தேடிக்கொண்டிருக்கிறோம் ஆனால் இலங்கை அரசோடு சேர்ந்து இந்த சர்வதேசமும் வேடிக்கை பார்க்கிறது
உறவுகளை கொன்று குவித்த அரசாங்கத்திடம் தான் நாங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த அரசாங்கத்தில் இருக்கும் ஜனாதிபதிக்கு காது மந்தம் ஏனென்று சொன்னால் நாங்களும் நீதியை கேட்டு கேட்டு களைத்து போய் விட்டோம். ஆனால் காது மந்தமாகி கற்களைப் போல ஜனாதிபதியும் பிரதமரும் இருக்கிறார்கள்.
ஆனால் எமது உயிர் உள்ளவரை வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடிக் கொண்டு இருப்போம் என அவர் தெரிவித்தார்.