தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் செம்பசுமை மேதினம், நேற்று ஞாயிற்றுக்கிழமை (01.05.2022) நல்லூர் இளங்கலைஞர் மன்ற கலா மண்டபத்தில் வெகு சிறப்பாக நிகழ்ந்தேறியது. தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இம் மேதினப் பொதுக்கூட்டத்தில் சமூகச் செயற்பாட்டாளர் திரு. ம. செல்வின் இரேனியஸ், அரசியல் ஆய்வாளர் திரு நிலாந்தன், தென்னிலங்கையைச் சேர்ந்த மனித உரிமைச் செயற்பாட்டாளர் திரு. றுக்கி பென்னாண்டோ ஆகியோர் உரையாற்றினார்கள்.
பெருமளவிலானோர் கலந்துகொண்டிருந்த இச்செம்பசுமை மேதினக்கூட்டத்தில் வரவேற்புரையை திரு. க. ரவிக்குமார் அவர்களும், நன்றியுரையை திரு. சண். தயாளன் அவர்களும் ஆற்றியிருந்தார்கள்.
ஒவ்வொரு தேசிய இனமும் அதன் தேசியச் சூழலை நல்லாட்சி செய்யும் அரசியல் அதிகாரங்களைக் கொண்டிருந்தாலே சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். அவ்வாறு சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்போது மாத்திரமே உழைப்புக்கான உத்தரவாதமும் கிடைக்கும். என்ற கருத்தை முன்னிறுத்தித் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் சர்வதேச உழைப்பாளர் தினத்தை ஆண்டுதோறும் செம்பசுமை மேதினமாகக் கொண்டாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.