21-04-2022 வியாழக்கிழமை அன்று 6 மணிக்கு சென்னை பல்லவபுரம் விதுர் மண்டபத்தில் பாசறைப் பாணர் தேனிசைச் செல்லப்பா அவர்களின் 81ஆவது பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது.
கடந்த 50ஆண்டு காலத்திற்கும் மேலாக தன்னுடைய இசைத் திறமையை தமிழ், தமிழர் எழுச்சிக்காக ஒப்படைத்துக்கொண்டு மக்களை மகிழ்ச்சிப் பெருக்கிலும், உணர்ச்சி வெள்ளத்திலும் ஆற்றிய பெருமைக்குரிய தேனிசைச் செல்லப்பாவிற்கு உலகத் தமிழர் பேரமைப்பின் சார்பில் ‘பாசறைப் பாணர்’ என்ற விருது வழங்கப்பட்டது.

உலகம் முழுவதிலும் தமிழர் வாழும் நாடுகளுக்குச் சென்று தன்னுடைய இன்னிசையால் அனைவருக்கும் உணர்ச்சியும் எழுச்சியும் ஊட்டிய பெருமை அவருக்குரியது. பாவேந்தர் பாரதிதாசனின் பாடல்கள், உணர்ச்சிக் கவிஞர் காசிஆனந்தனின் தமிழீழ விடுதலை கீதங்கள் ஆகியவற்றை மட்டுமே மேடைதோறும் பாடிய ஒரேயொரு தமிழ் இசைவாணர் இவர் மட்டுமே. இவரின் பாடல்கள் அடங்கிய ஒலிப்பேழைகளும், குறுந்தகடுகளும் உலகத் தமிழர்களின் இல்லங்களில் இன்றும் எதிரொலிக்கின்றன.

81ஆவது அகவையை எட்டியுள்ள பாசறைப் பாணர் தேனிசைச் செல்லப்பா மற்றும் அவரது துணைவியார் ஆகியோருக்கு உலகத் தமிழர்களின் சார்பில் பல்லாண்டு! பல்லாண்டு!! கூறுவதில் நாம் பெருமிதம் கொள்கிறோம்.
இவ்விழாவினையொட்டி உலகத் தமிழர் பேரமைப்புக்கு அவரின் மகன் இளங்கோ செல்லப்பா மற்றும் குடும்பத்தினர் ரூ. 5,000/-நன்கொடை வழங்கினர்.
























