Juanita Nathan, former Chair and current York Region District School Board (YRDSB) trustee, is seeking to become the next Councillor for Ward 7 in the City of Markham.
முன்னாள் யோர்க் பிராந்திய கல்விச்சபைத் தலைவர் யூவனீட்டா நாதன் மார்க்கம் நகரத்தின் ஏழாம் வட்டாரத்தில்பிரதிநிதித்துவத்தைக் கொண்டுவர முயற்சி
தற்போதைய யோர்க் பிராந்திய கல்விச்சபையின் முன்னாள் தலைவரும் (YRDSB) மற்றும் தற்போதைய அறங்காவலரும் தமிழ் பேசும் சமூகசேவையாளருமான யூவனீட்டா நாதன் அவர்கள், மார்க்கம் நகரின் ஏழாம் வட்டாரத்துக்கான அடுத்த நகரசபை உறுப்பினராக ஆவதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கிறார்.
“எனது குடும்பம், நண்பர்கள் மற்றும் சமூக உறுப்பினர்களோடு கலந்தாலோசித்த பிறகு, நகர அளவில் உள்ளூர் பிரச்சினைகளுக்கான எனது நிலைப்பாட்டை முன்னெடுக்க, 2022 ஒக்ரோபரில் நடைபெற உள்ள மார்க்கம் மாநகராட்சித் தேர்தலில் ஏழாம் வட்டாரத்துக்கான நகரசபை உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட முடிவு செய்துள்ளேன்” என்று யூவனீட்டா நாதன் தனது விருப்பத்தை அறிவித்துள்ளார்.
“ஏழாம் வட்டாரத்தில் நீண்டகாலமாக வசிப்பவள் என்ற முறையில், இந்த வட்டாரத்தில் வசிப்பவர்களுக்கு வழங்கப்படும் சேவைகள் சமமானதாகவும், நிதி ரீதியாக நிறைவாகவும் இருப்பதை உறுதி செய்வதன் மூலம் வலுவானதாகவும், பாதுகாப்பானதாகவும், அனைத்துச் சமூகங்களையும் உள்ளடக்கியதாகவும் அமைக்க நான் உறுதிபூண்டுள்ளேன்” என்று யூவனீட்டா நாதன் மேலும் கூறியுள்ளார்.
யூவனீட்டாவுக்கு மார்க்கத்தில் வசிப்பவர்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பொதுச் சேவையில் ஒருதசாப்தத்திற்கும் மேலான அனுபவம் உள்ளது. யூவனீட்டா 2010 ஆம் ஆண்டு முதல் YRDSB அறங்காவலராக இருந்து வருகிறார். அவரது பதவிக்காலத்தில் YRDSB இன் துணைத் தலைவராகவும், தலைவராகவும் பணியாற்றியுள்ளார். அவர் ஒரு அறங்காவலராகப் பணியாற்றுவதோடு, யோர்க் பிராந்தியத்தில் உள்ள சமூக சேவை நிறுவனத்தில் சமூக ஆதரவுப் பணியாளராகவும் குடும்ப ஆலோசகராகவும் உள்ளார்.
Brock பல்கலைக்கழக பட்டதாரியான இவர், சமூக சேவைக்கான மகாராணியின் வைரவிழாப் பதக்கத்தையும் பெற்றவர். யூவனீட்டா சமூக மாற்றத்துக்கான செயற்பாட்டாளர். கனடிய உளநல சங்கம் – யோர்க் & சிம்கோ, மார்க்கம் தமிழ் அமைப்பு உட்பட பல்வேறு சமூக அமைப்புகளின் இயக்குநர் சபைகளில் பங்கெடுத்து ஆற்றிய சமூக சேவைகளுக்காக நன்கு அறியப்பட்டவர்.
“எங்கள் சமூகத்திற்கு மூன்று தடவைகள் அறங்காவலராகச் சேவையாற்றும் பெருமையும் பாக்கியமும் எனக்குக் கிடைத்துள்ளது. இந்த ஆண்டுகளில், நான் பல குடியிருப்பாளர்களைச் சந்தித்து அவர்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் பரந்த அளவிலான உள்ளூர் விடயங்களில் அவர்களின் எண்ணங்களைக் கேட்டிருக்கிறேன்”, என்று யூவனீட்டா நாதன் கூறியிருந்தார்.
“வரவிருக்கும் மாதங்களில், ஏழாம் வட்டாரத்தில் வசிப்பவர்களுடன் இணைந்து பணியாற்றும் சூழலை எதிர்பார்க்கின்றேன். மற்றும் எங்கள் சமூகங்களுக்கான மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உள்ளூர்ப் பிரச்சினைகளில் கவனம் செலுத்த ஆவலொடு இருக்கிறேன்” என்று கூறி முடித்தார் யூவனீட்டா நாதன்.
மேலதிக விபரங்களுக்கு 416 857 6308