ஏற்றுக்கொள்ளப்பட்ட இராஜதந்திர நடைமுறைகளுக்கு மாறாக யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய தூதரக அதிகாரிகள் இலங்கை அரசின் கடும் கெடுபிடிகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
மிகவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அரசியல் நெருக்கடிகளில் சிக்கியுள்ள இலங்கைக்கு தொடர்ச்சியாக உதவிகளைச் செய்துவரும் இந்திய அரசின் உயரதிகாரிகள் வடக்கே குடாநாட்டிலுள்ள தீவுகளுக்கு பயணிக்க முற்பட்ட போது, அவர்கள் பாதுகாப்பு அமைச்சகத்தின் அனுமதியைக் கோரி பெற்ற பிறகே அங்கு பயணிக்க முடியும் என்று கடற்படை கூறியது இராஜதந்திர முறுகலுக்கு இட்டுச் செல்லும் என்று கூறப்படுகிறது.
இந்த விஷயம் கொழும்பு மூலம் இந்தியத் தலைமையகத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக டில்லியிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கைக்கான இந்தியத் தூதர் மூலம் இது இலங்கை ஆட்சியாளர்கள் நேரடி பார்வைக்கு எடுத்துச் சென்ற பிறகே அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
யாழ் குடாநாட்டிலுள்ள நைனாதீவு, நெடுந்தீவு, அனலைதீவு ஆகிய 3 தீவுகளிலும் மின் உற்பத்தி நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டு அந்த திட்டம் கடந்த ஆண்டு சீனாவிடம் கையளிக்கப்பட்டது. எனினும், சீனாவிடம் அந்த திட்டம் கையளிக்கப்பட்டால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் எனச் சுட்டிக்காட்டிய இந்தியா அந்த திட்டங்கள் சீனாவிடம் அளிக்கப்படுவதை கடுமையாக எதிர்த்தது.
இதனையடுத்து எழுந்த அரசியல் அழுத்தம் காரணமாக தீவுகப் பகுதிக்கான மின் உற்பத்தி நிலைய அமைப்புத் திட்டம் தற்போது இந்தியாவிடம் கையளிக்கப்பட்தையடுத்து யாழில் உள்ள இந்தியத் துணைத் தூதுவர் மற்றும் வேலணை, நெடுந்தீவு, ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர்கள் நேரில் சென்று திட்டம் அமையவுள்ள இடங்களைப் பார்வையிட திட்டமிட்டனர்.
யாழில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் அதிகாரிகள் யாழ்ப்பாணக் குடாநாட்டின் ஆளுகைக்கு உட்பட்ட 3 தீவுகளிற்குச் செல்வதற்காக முறைப்படி இலங்கை கடற்பணையினரிடம் விண்ணப்பித்திருந்தனர்.
ஆனால், எவ்விதமான கேள்விகளுமின்றி, சீன அதிகாரிகளை ஏற்றிச் செல்லும் இலங்கை கடற்படை இந்திய அதிகாரிகளிடம் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப்பெறுமாறு வலியுறுத்தியது.
அந்த தீவுகளிற்கான பயண ஏற்பாடுகளை மேற்கொள்வதாயின் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை பெற்றுவருமாறு யாழ்ப்பாணம் மாவட்ட கடற்படைத் தளபதி இந்திய துணைத்தூதரக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இதன் பின்பு பாதுகாப்பு அமைச்சிற்கு விண்ணப்பித்து அங்கிருந்து கிடைத்த அனுமதியை கடற்படையினரிடம் சமர்ப்பித்தே யாழில் உள்ள இந்ந்தியத் துணைத் தூதுவர் அந்த மூன்று தீவுகளிற்கும் பயணித்துள்ளார்.
இது தொடர்பில் யாழில் உள்ள இந்தியத் துணைத் தூதுவர் தமது அதிருப்பியினையும் இலங்கை பாதுகாப்பு அமைச்சிற்கு தெரிவித்ததோடு சாதாரண சுற்றுலாப் பயணிகளே சென்றுவரும் இடத்திற்கு எம்மிடம் பாதுகாப்பு அமைச்சு அனுமதி கோரியிருக்க கூடாது எனத் தெரிவித்துள்ளார்
இந்தியத் துணைத் தூதுவர் தெரிவித்த அதிருப்தி தொடர்பில் பதிலளித்துள்ள கடற்படையினர் சாதாரண சுற்றுலாப் பயணிகள் சாதாரண பயணிகள் படகில் சென்று வருகின்றனர் இருந்தபோதும் இந்திய அதிகாரிகள் இலங்கை கடற்படையினரின் படகில் சென்று வருவதற்கே பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கோரப்படுகின்றது என பதிலளித்துள்ளனர்.
அவ்வாறான அனுமதியைப் பெற்ற பிறகு இந்திய துணைத்தூதர் ராகேஷ் நடராஜன், தமது அதிகாரிகளுடன் நைனாதீவு, அனலைதீவு, நெடுநீவு ஆகிய இடங்களுக்குச் சென்று பார்வையிட்டார். அவருடன் அந்தப் பகுதிக்கான பிரதேச செயலாளர்கள் உட்பட இலங்கை அரசின் உயரதிகாரிகளும் உடன் சென்றனர். இந்திய அரசு குடாநாட்டு மின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அங்கு சூரிய சக்தி மற்றும் காற்றாலை மூலம் மின் நிலையங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.
”மூன்றாம் தரப்பு ஒன்று” பாதுகாப்பு குறித்து கவலைகளை எழுப்பியதை அடுத்து, இந்த திட்டங்களை தாங்கள் கைவிடுவதாக கடந்த ஆண்டு சீனா அறிவித்தது.
சீனாவிடம் கையளிக்கப்பட்ட திட்டங்களை ரத்து செய்து, அதை இந்திய அரசு செய்ய இலங்கையை ஒப்புக்கொள்ளச் செய்தது, இந்தியாவிற்கு கேந்திர ரீதியான ராஜதந்திர வெற்றி என்று, இந்த ஒப்பந்தம் கையெழுத்தான சமயத்தில் பாதுகாப்பு ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர்.
இந்திய அரசின் உதவியுடன் அமையவுள்ள இந்த மூன்று தீவுகளும் பூகோள ரீதியாக இந்தியாவிற்கு அருகிலுள்ளது. மேலும் நீண்டகால அடிப்படையில் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அந்த தீவுகள் ஒரு தளமாக அமையக்கூடும் என்று பாதுகாப்பு ஆய்வாளர் கூறுகின்றனர்.