சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன்
தொழிற்சங்கங்களை அரசியல்வாதிகள் கைப்பற்றும் போது, தொழிலாளர்கள் பகடை காய்களாகின்றனர். அவர்கள் அரசியல் சார்பற்று தமது உரிமைகளுக்காகப் போராடும் போது ஒற்றுமை ஓங்கியிருந்தது. ஆனால் காலம் செல்லச் செல்ல தொழிற்சங்கம் என்ற கட்டமைப்பு `கழுதை தேய்ந்து கட்டெறும்பான` கதையாயிற்று. இது வளர்முக நாடுகள் அனைத்திற்கும் பொருந்தும். இதற்கு இந்திய, இலங்கை போன்ற நாடுகளும் விதிவிலக்கல்ல.
பொதுவாக மே மாதம் முதலாம் திகதி, இலங்கையிலுள்ள அரசியல் கட்சிகள் தமது பலத்தை நிரூபிக்கும் பொருட்டு, தொழிலாளர் தின பேரணிகளை நடத்துவதும், அதன் மூலம் ஏராளமான வசூலில் இறங்குவதும், இதன் போது அடிதடிகள் நடைபெறுவதும் காலத்திற்குக் காலம் நடைபெற்று வந்துள்ளது. இதிலும் குறிப்பாக தென்னிலங்கையில் கொழும்பிலும், மலையகப் பகுதிகளிலும் மே தின ஊர்வலம் என்பது கூர்ந்து கவனிக்கப்பட்டன. ஊர்வலத்திற்கு வரும் கூட்டங்களை தங்களது ஆதரவாளர்கள் என்று காட்டுவதற்கு அதன் மூலம் `சந்தா அரசியல்` செய்வதற்கும் மே 1 ஆம் திகதி ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. சர்வதேச தொழிலாளர் தினமாக அனுசரிக்கப்படும் மே 1 ஆம் திகதி, தொழிலாளர்களுக்கு உதவியதோ இல்லையோ, தொழிற்சங்கங்களும் அதன் தலைவர்களும் தம்மை வளர்த்துக்கொள்ளப் பெரிதும் உதவின.
இதில் மிகவும் இலாபம் அடைந்தவை மலையகத்தில் இலங்கை தொண்டமான்காங்கிரஸ் என்று சமூக ஊடகங்களில் நையாண்டியாக விமர்சிக்கப்படும்இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தென்னிலங்கையில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி. எனினும், இலங்கையில் இடதுசாரி இயக்கங்களும் அந்த கொள்கைகளைக் கொண்டிருந்த இலங்கை கம்யூனிஸக் கட்சி, நவ சமசமாஜ கட்சி, லங்கா சமசமாஜ கட்சி போன்ற பல கட்சிகள் காலவோட்டத்தில் நீர்த்துப் போயின.
ஆனால், இன்று இலங்கையில் அரசிற்கு எதிராகத் தொடரும் போராட்டங்களில் சிறிதும் பெரிதுமாகப் பல தொழிற்சங்கங்கள் ஈடுபட்டு தமது ஆதரவைத் தெரிவித்து வருகின்றன. அவர்களுக்கு ஆங்காங்கே அரச உத்தியோகத்தர்கள் மட்டுமின்றி, தனியார் துறையில் பணியாற்றுபவர்கள் மத்தியிலும் கணிசமான ஆதரவுள்ளதை அவதானிக்க முடிகிறது. பல்கலைக்கழகங்களில் கற்றலில் ஈடுபட்டுள்ள இளம்பிக்குகளும் அரசிற்கு எதிரான இந்த போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை இன்று- 6 மே 2022 -இலங்கையின் தொழிற்சங்கங்கள், சிவில் சமூகம் மற்றும் தொழில்சார் வல்லுநர்கள் நாடு தழுவிய முழு அடைப்பிற்கான அழைப்பை விடுத்துள்ளனர். “கோட்டா வீட்டிற்குச் செல்லுங்கள்” போராட்டத்திற்கான ஆதரவாக இந்த அறைகூவல் -ஹர்த்தால்-விடுக்கப்பட்டுள்ளது என்றுதொழிற்சங்க தலைவர்களில் ஒருவரான ரவி குமுதேஷ் சமூக ஊடகச் செய்தி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
“எமக்கு 11 ஆம் திகதிக்கு முன்னதாக சாதகமான பதிலொன்று கிடைக்கவில்லையென்றால், இந்த அடையாள போராட்டம் தொடரும் போராட்டமாகவும் பொது வேலை நிறுத்தமாகவும் முன்னெடுக்கப்படும்” என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆனால், இலங்கையில் தொழிற்சங்க கட்டமைப்பை ஏற்படுத்தி அதை வலுப்படுத்திய இருவர் இன்று பெரும்பாலும் மறக்கப்பட்டுள்ளனர். இந்த பேரணிகளில் தொண்டமான்களும், ராஜபக்சக்களும் புகழப்படும் அளவிற்கு இல்லையென்றாலும், சம்பிரதாய ரீதியில் கூட இந்த இருவரும் நினைவுகொள்ளப்படுவதில்லை என்பது மிகவும் கசப்பான உண்மை.
ஒருவர் ஏ இ குணசிங்க மற்றொருவர் தமிழகத்தின் தஞ்சை மாவட்டத்தில் பிறந்து மலையகத்திற்கு சென்று அங்கு தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடிய கோதண்டராம நடேச ஐயர். இவர்கள் இருவரும் இணைந்து தொடங்கிய `சிலோன் லேபர் யூனியன்` இலங்கையின் முதலாவது தொழிற்சங்கமாகும். நடேச ஐயர் சில காலம் சென்னையில் எழுத்தராக (குமாஸ்தா) பணியாற்றியபின் நூறாண்டுகளுக்கு முன்னர் `தேச நேசன்` எனும் இதழிற்கு ஆசிரியராகச் சென்றார். சிலோனீஸ் தேசிய காங்கிரஸ் அமைப்பில் இருந்த அருணாசலம் மற்றும் இ வி ரட்ணம் ஆகியோர் அந்த பத்திரிகையை நடத்திவந்தனர். `சிலோன் லேபர் யூனியனில்` துணைத்தலைவராகவும் செயல்பட்ட நடேச ஐயர் பின்னர் அந்த அமைப்பில் தமிழ் மற்றும் சிங்கள உறுப்பினர்களிடையே ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக, அதிலிருந்து விலகினார். நாட்டின் அனைத்து பிரச்சனைகள் மற்றும் துன்பங்களுக்கும் இந்திய வம்சாவளி தமிழர்களே காரணம் என்று ஏ இ குணசிங்க குற்றஞ்சாட்டியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, அந்த அமைப்பிலிருந்து வெளியேறி மலையகத்தின் தனியாக- அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சம்மேளனத்தை- தோற்றுவித்து அதை தான் காலமாகும்வரை வெற்றிகரமாகவும் நடத்திக்காட்டினார். பின்னர் இலங்கை அரசியல் சபைக்கு ஹட்டன் நகரிலிருந்து 1936 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டு 1947 வரை அதில் ஆக்கபூர்வமாகச் செயல்பட்டார். அதேவேளை ஆங்கிலத்தில் ”தி இண்டியன் எஸ்டேட் லேபரர்” என்ற சஞ்சிகையையும் நடத்தினார்.
இன்று இலங்கையில் குறைந்தபட்ச ஊதியம் என்ற கோட்பாடு சட்டரீதியாக திகழ்வதற்கு நடேச ஐயரின் முயற்சியும் முன்னெடுப்பும் மிகவும் அளப்பரியது. அந்த சட்டத்தின்படி 10 வயதிற்கு கீழேயுள்ள எவரையும் பெருந்தோட்டங்களில் அறிந்தோ அறியாமலோ பணிக்கு அமர்த்த முடியாது. அதேபோன்று தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்பவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ஒன்று நிர்ணயிக்கப்பட்டதும் அவரின் முயற்சியே.
இதே போன்று தென்னிலங்கையில் இன்று நடைபெறும் போராட்டங்களைப் போன்று ஆங்கில அரசிற்கு எதிரான ஒரு பாரிய முன்னெடுப்பு 1929 ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்போது இலங்கையில் பிரதான போக்குவரத்து கட்டமைப்பாக இருந்தது டிராம் கார்கள் (tram car). லண்டனின் புறநகரில் தனது தலைமை அலுவலகத்தைக் கொண்டிருந்த பௌஸ்டெட் கம்பெனி அந்த டிராம் சேவையை நடத்தி வந்தது. அந்த அலுவலகம் இருந்த இடம் இடத்தில் இன்று பெரிய வணிக வளாகம் செயல்படுகிறது. பல நாடுகளில் போக்குவரத்து சேவைகளை நடத்திய பல பிரிட்டிஷ் நிறுவனங்களைப் போலவே பௌஸ்டெட் கம்பெனியும் கொழும்பு டிராம் சேவை மூலம் கொள்ளை இலாபம் ஈட்டியது. ஆனால் அதன் ஊழியர்களின் தேவைகள் மற்றும் குறைகளைத் தொடர்ந்து புறந்தள்ளியது. பேச்சுவார்த்தைகள் இனி பலனளிக்காது என்ற நிலையில் ஏ இ குணசிங்க தலைமையில் வேலை நிறுத்தப் போராட்டம் வெடித்தது. கொழும்பு நகரம் ஸ்தம்பித்தது. வர்த்தகமும் பொருளாதாரமும் முடங்கியது. மக்கள் டிராம் சேவைகளை புறக்கணித்தனர்.
மனித உரிமைகள் என்ற வார்த்தை அகராதியில் இல்லாத நிலையில், பிரிட்டிஷ் அரசு அந்த போராட்டத்தை ஒடுக்க எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தன. அவர்கள் எடுத்த ஒவ்வொரு முயற்சியையும் தனது தலைமைத்துவம் மற்றும் ஆற்றல் காரணமாக முறியடித்தார் குணசிங்க. காலனித்துவ அரசின் பொலிசாரின் அடக்குமுறைக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டிப் போராடி ஆங்கிலேய அரசிற்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார் குணசிங்க.
அந்த டிராம்வே வேலை நிறுத்தம் இலங்கையின் அரசியல் மற்றும் தொழிற்சங்க சரித்திரத்தில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. இந்த போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திக்காட்டிய குணசிங்க இலங்கை தொழிற்சங்கத்தின் தந்தை என்று போற்றப்பட்டார். நிறம் சற்று கருப்பாக இருந்தாலும் ஒரு கதாநாயகனுக்கு உரிய உடல்வாகை அவர் கொண்டிருந்தார். அவரது உடலமைப்பு அவரது ஆளுமைக்கு மிகவும் பக்கபலமாக இருந்தது. அவரது இருந்த சட்ட அறிவும் சட்டத்தரணிகளின் நட்பும், சரளமாக ஆங்கிலம் பேசும் நாவன்மையும் அவருக்கு பெரிதும் உதவின. அச்சம் என்பதை அறியாத குணசிங்கவை கண்டு ஆங்கிலேயர்கள் அச்சுறும் காலம் ஏற்பட்டது. அவரை இரகசிய பொலிசார் தொடர்ந்து கண்காணித்தாலும், அவருக்கு உள் தகவல்களுக்குப் பஞ்சமில்லாமல் இருந்ததால், பொல்லும் துவக்கும் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை.
ஆங்கில அரசின் ஆதிக்கம் எங்கும் நிலைத்திருந்த நிலையில், இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த ஆன்னி பெசண்ட் அம்மையார், கண்டி தர்மராஜா கல்லூரியில் ஆற்றிய உரை குணசிங்க மீது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஏகாதிபத்தியத்திற்கு எதிரான உணர்வை அம்மையாரின் பேச்சு அவருள் தட்டியெழுப்பியது. அத்தோடு வண. அன்காரிக தர்மபாலவின் ஆளுமையாலும் பேச்சாலும் குணசிங்க ஈர்க்கப்பட்டார். 1915 இல் கண்டியில் நடைபெற்ற சிங்கள-முஸ்லிம் மோதல்களின் போது கைதாகி 50 நாட்களுக்கும் மேல் சிறையில் இருந்த பிறகு விடுதலையான குணசிங்க கொழும்பு வந்த போது தர்மபாலவின் நட்பும் பேச்சும் அவரது தொழிற்சங்க உணர்வுகளை ஊட்டி வளர்த்தது.
தீவிர தொழிற்சங்க செயல்பாட்டிற்கு வருவதற்கு முன்னர் ஏ இ குணசிங் இலங்கை இளையோர் லீக் என்ற அமைப்பை ஏற்படுத்தினார். ஏகாதிபத்திய சிந்தனைகளுக்கு எதிராக இருந்த இளைஞர்களை அந்த அமைப்பு ஈர்த்தது. தேசிய உணர்ச்சியை ஒரு அமைப்பின் மூலம் ஒருமுகப்படுத்தும் போது நாட்டின் விடுதலை சாத்தியமாகும் என்று அவர் தொடர்ந்து வலியுறுத்தி பிரச்சாரம் செய்து வந்தார். இலங்கையில் விடுதலைப் போராட்டம் என்பது பெரியளவில் இல்லாத போது தொழிற்சங்கங்களே அந்த விடுதலை உணர்வை மக்களிடையே ஊட்டி வளர்த்தன.
ஆங்கிலேய அரசு அறிமுகப்படுத்திய ”தலைக்கட்டு வரி” – போல் டாக்ஸ்-நாட்டின் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதன்படி 21 வயதிற்கு மேலானவர்கள் ஆண்டுதோறும் அரசிற்கு இரண்டு ரூபாய் வரியாக கட்ட வேண்டும், அல்லது ஆறு நாட்கள் சாலைகளில் கடூழியம் செய்ய வேண்டும். இதற்கு எதிரான குணசிங்க தலைமையிலான இளையோர் லீக் பிரச்சாரப் போராட்டங்களை முன்னெடுத்தது. இது அவரை மேலும் பிரபலமாக்கியது. இந்த வரிகொடா இயக்கத்தின் ஒரு பகுதியாக குணசிங்க சாலையில் கல் உடைக்கும் செயல்பாட்டை முன்னெடுத்தார். அவருடன் நான்காயிரம் பேர் அதில் இணைய ஆங்கிலேய அரசால் அவர்களுக்கு கற்களை உடைக்க சுத்தியலை அளிக்க முடியவில்லை; பின்னர் அந்த ”தலைக்கட்டு வரி” ஒழிக்கப்பட்டது.
அனைத்திலும் பார்க்க அனைவருக்கும் வாக்குரிமை என்ற இயக்கத்தை அவரும் நடேச ஐயரும் இணைந்து முன்னெடுத்தனர். படித்தவர்கள், வருமான வரி கட்டுபவர்கள் என்று நாட்டின் மக்கள் தொலையில் சுமார் 4 % மக்களுக்கே வாக்குரிமை இருந்ததை 21 வயதான அனைவருக்கும் அளிக்க வேண்டும் என்று போராடியவர்களில் ஏ இ குணசிங்வும் நடேச ஐயரும் முன்னோடிகளாக இருந்தனர். அதற்கான நடந்த போராட்டங்களில் மக்களைத் திரட்டுவதில் இவர்கள் இருவரின் ஆளுமையும் தமிழ், ஆங்கிலம் மற்றும் சிங்களத்தில் பேசும் வல்லமையும் லட்சக்கணக்கான மக்களை போராட்டத்தில் பங்குபெற வைத்தது. இருவரும் தமது தொழிற்சங்க உறுப்பினர்களுடன் டோனமோர் ஆணையத்திடம் சென்று வாதிட்டனர். இறுதியில் வெற்றியும் பெற்றனர். அந்த போராட்டத்தின் விளைவாக ஆசியாவிலேயே அனைவருக்கும் வாக்குரிமை என்ற பெருமையை இலங்கை பெற்றது. இன்று அந்த வாக்குரிமையின் பலனைக் கொண்டே சேனநாயக்க, பண்டாரநாயக்க முதல் ராஜபக்சக்கள் வரை ஆட்சியில் அமர முடிந்தது.
ஏ இ குணசிங்க மற்றும் நடேச ஐயர் இருவரும் பின்னாளில் கொள்ளை முரண்பாடு காரணமாகப் பிரிந்து சென்றாலும், தொழிலாளர்களின் நலன்களில் அவர்கள் ஒரு நாளும் விட்டுக்கொடுப்பு செய்தது கிடையாது. அதேவேளை மக்களுக்கான விடுதலை என்பது பரந்துபட்ட அளவில் சமூக மற்றும் பொருளாதார மாற்றங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பதில் இருவரும் உறுதியாக இருந்தனர்.
அந்த இருவரும் சமூக ஜனநாயகம் என்ற கொள்கையில் நீங்கா பற்று வைத்திருந்தனர். ஆனால் துரதிஷ்டவசமாக இன்று இந்த இருவரைப் போல தேசத்தின் மீது உழைக்கும் மக்கள் மீதும் மாறாத பற்றும் அவர்களுக்காக உழைக்க வேண்டும் என்கிற கொள்கையும் கொண்ட தலைவர்களைக் காண்பது மிகவும் அரிதாகிவிட்டது. இலங்கை சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளை நெருங்கும் நிலையில், நாட்டின் சொத்துக்களை கொள்ளையடித்தும், தொழிலாளர்களை சுரண்டியும், பிரிவினைவாதம் பேசியும், இன முரண்பாடுகளை ஏற்படுத்து சுயலாபம் அடைந்தவர்களுமே இன்று இலங்கையில் தலைவர்களாகப் பார்க்கப்படுகின்றனர்.”