நம்பிக்கையில்லாத்தீர்மானத்தைக்கொண்டுவந்து ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்பவேண்டும் அரசாங்கத்தை கலைக்கவேண்டும் என்ற வேகத்துடன் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் ஏனை எதிர்க்கட்சிகளும் முனைப்புடன் செயற்பட்டுவருகிறது. இதனடிப்படையில் கடந்த செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்துக்கு எதிரான இரண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் ஐக்கிய மக்கள் சக்தியினால் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மறுபுறம் ஜனாதி கோத்தபாய ராஜபக்ஷவை தொடர்ந்து பதவியில் தக்கவைக்கும் ராஜதந்திரங்களுடன் இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைக்கும் முயற்சிகள் வேகப்படுத்தப்பட்டு வருகிறது. ஆதற்கு ஏற்ற காய் நகர்த்தல்களும் இடம் பெற்றுவருவதாக கூறப்படுகிறது.
ஜனாதிபதிவீட்டுக்க செல்லவேண்டும் அரசாங்கம் பதவி விலகவேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து காலி முகத்திடலை தலைமைக் களமாகக்கொண்டு நாடு தழுவிய போராட்டங்கள் கடந்த பல வாரங்களாக தொடர்ந்து இடம் பெற்றுவரும் நிலையில் நம்பிக்கையில்லாப் பிரேரணை அல்லது குற்றப்பிரேரணைகொண்டுவந்து ஜனாதிபதியையும், அரசாங்கத்தையும் பதவி இழக்க செய்யும் ஜனநாயக முயற்சிகளும், ஏற்பாடுகளும் மறுபுறம் இடம் பெற்றுக்கொண்டிருக்கிறது.
இந்த இரு முயற்சிகளும் ஒன்றுக்கொன்று முரண்தன்மை கொண்டது என்பதைவிட மிக நுணுக்கமான அரசியல் விடயங்கள் தொடர்பில் மக்கள் சக்தியை மோதவிடும் விடயமாக காணப்படுகிறது.
இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைக்க எடுக்கப்படும் முயற்சி பற்றி முதலில் சுருக்கமாகப்பார்ப்பின் பாராளுமன்றில் அங்கம் பெறும் சகல கட்சிகளையும் ஒன்று இணைத்து அரசாங்கம் ஒன்றை அமைக்கும் யோசனையே இடைக்கால அரசாங்கம் என்று கூறப்படுகிறது. இந்த யோசனைக்கு பொதுஜனபெரமுன முன்னணி மற்றும் சுயாதீன அணி என்பன உடன்பட்டிருப்பதாகவும் அதன் அடிப்படையில் பாராளுமன்றில் அங்கம் பெறும் சகல கட்சிகளுடனும் பேச்சவார்த்தை நடத்த ஜனாதிபதி உடன்பட்டிருப்பதாகம் அவர் தலைமையில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுமென்றும் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் எந்தவொரு நிலையிலும் தாம் இதற்கு உடன்படப்போவதில்லையென பிரதான எதிர்க்கட்சியின் தலைவர்
சஜித்பிரேமதாஸ பகிரங்கமாக மேடைகளில் கூறிவருகிறார்.
இது ஒருபுறமிருக்க ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிராகவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாப்பிரேரணைகளை ஒரே நேரத்தில் கொண்டுவந்து ஆட்சி மாற்றத்தை உருவாக்குவோமென எதிர்க்கட்சியனர் சூளுரைத்து கொண்டிருக்கிறார்கள். மக்கள் விடுதலை முன்னணியும் இந்நிலைப்பாடு கொண்டதாகவே காணப்படுகிறது.
நம்பிக்கையில்லாப்பிரேரணை தொடர்பாக வேண்டிய ஏற்பாடுகளை கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய சுமந்திரன் மேற்கொண்டதாகவும் இந்த முயற்சிக்கு ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கியதேசியக்கட்சி, மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய பிரதான கட்சிகள் ஆதரவு தர இருப்பதாகவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப்பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவரவுள்ளதாகவும், ஜனாதிபதிக்கெதிரான நம்பிக்கையில்லாப்பிரேரணையை தான் தயாரிப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.மேற்படி இரு பிரேரணைகளும் தனி நபர் பிரேரணைகளாக ஒரே நேரத்தில் சமர்பிக்கப்படுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தபோதும். கடந்த செவ்வாய்க்கிழமை பிரேரணை சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்படும்போது அவர் உடனிருக்கவில்லை.
சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப்பிரேணைகளானது இரு விடயங்களை மையப்படுத்தி கொண்டுவரப்படவுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை பதவி இழக்கப்பண்ணுவது. இரண்டாவது விடயம் நிறைவேற்று அதிகாரங்களை தன்னகத்தே வைத்துக்கொண்டு பாராளுமன்றை பலவீனப்படுத்தி சர்வாதிகார ஆட்சி நடத்தும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்புவது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பத்தில் தன் பதவி விலகப்போவதில்லை தற்போதைய அரசியல் நெருக்கடிகளுக்கு தான் எவ்வகையிலும் பொறுப்பில்லை. மக்களின் போராட்டம் தன்னால் உருவாகியதல்ல, என்று கூறியதுடன் இடைக்கால அரசு அமைக்கப்பட்டால் அது தனது தலைமையிலையே அமைக்கப்படவேண்டுமென்று கடுந்தன்மையுடன் கூறி வருவதுடன் எந்தவொரு அழுத்தத்துக்கும் அடி பணிந்து நான் பிரதமர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை. யார் 113 என்ற பெரும்பான்மையை காட்டுகிறார்களோ அப்போது யான் பதவி விலகத்தயாரக இருக்கிறேன். அதற்கு முன் பதவி விலகினால் நாட்டில் பல்வேறு அரசியல் நெருக்கடிகள் வந்துவிடுமென்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மஹிந்தவுக்கு எதிராக நல்லாட்சி அரசாங்கத்தில் நம்பிக்கையில்லாப்பிரேரணை கொண்டுவரப்பட்டபோதும் அவர் விடாக்கண்டனாகவே நடந்து கொண்டார். அவர் இவ்வாறு நடந்து கொள்வது புத்pதான ஒருவிடயமல்ல. நல்லாட்சி அரசாங்கத்தில் 2018 ஆம் ஆண்டு பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க இரவோடு இரவாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பதவி நீக்கம் செய்யப்பட்டு மஹிந்த (26.10.2018) பிரதமர் ஆக்கப்பட்டார்.
இந்த நியமனம் அரசியல் அமைப்புக்கு முரணானது என எதிர்க்கட்சிகள் மஹிந்தமீது நவம்பர் 2018 நம்பிக்கையில்லாத்தீர்மானத்தை கொண்டுவந்தார்கள். 122 வாக்குக்களால் பிரேரணை வெற்றி கொள்ளப்பட்டது. இந்த பிரேரணையால் பிரதமரும் அவரது மந்திரி சபையும் பெரும்பான்மையை இழந்திருப்பதாக சபாநாயகர் சபையில் அறிவித்தார். அவ்வாறு வெற்றி கொள்ளப்பட்டபோதும் ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேனவினால் ; பிரதமர் மஹிந்த பதவியிலிருந்து இறக்கப்படவில்லை. ஜனநாயகம் இங்கு நிறைவேற்றப்படவில்லை. ஜனாதிபதி இந்த வாக்கெடுப்பு பற்றி குறிப்பிடுகையில் “அரசியல் அமைப்பின்படி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவில்லை என்பதனால் மேற்படி வாக்கெடுப்பை நிராகரிக்கிறேன்” என்று கூறியிருந்தார். மீண்டும் நவம்பர் மாதம் (2018) பிரதமர் மஹந்தவுக்கு எதிராக மற்றொரு நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது பிரேரணை 122 வாக்குக்களால் நிறைவேற்றப்பட்டது. இரண்டுதரம் நிறைவேற்றப்பட்டபோதும் பிரதமர் மஹிந்த பதவியிலிருந்து கொண்டிருந்தார். இவ்வாறனதொரு நிலை மீண்டும் வர முடியாது என்று எவராலும் உத்தரவாதம் அளிக்க முடியாது.
அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப்பிரேரணை வெற்றி பெறவேண்டுமாயின் ஏற்ற சந்தர்ப்பங்கள் உருவாகவேண்டும்.அல்லது உருவாக்கப்படவேண்டும். ஒன்று நம்பிக்கையில்லாப்பிரேரணை பாராளுமன்றில் வெற்றிபெற அறுதிப்பெரும்பான்மை நிரூபிக்கப்படவேண்டும். அவ்வாறு இல்லையாயின் அது நீர்த்துப்போய் எதிரிகளுக்கு சதாகமான நிலையை உருவாக்கிவிடும்.எல்லாமே பாரளுமன்ற பலத்தில்தான் தங்கியுள்ளது.
நம்பிக்கையில்லாப்பிரேரணையை சமர்ப்பித்துள்ள எதிர்க்கட்சியினர் தங்களுக்கு 120 உறுப்பினர்கள் ஆதரவாகவுள்ளனர் என்று தெரிவித்துள்ளனர். சில சமயங்களில் இன்னும் அதிகமாகலாமென்றும் நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது. ஆனால் பிரேரணை சமர்ப்பிக்கப்படும்போது 50 உறுப்பினர்களே கையெழுத்திட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பாரளுமன்றில் வாக்கெடுப்ப ஒன்று நடத்தப்படுமானால் பொதுஜனபெரமுன அரசாங்கம் வெற்றி கொள்ளுமா ? அன்றி ஐக்கியமக்கள் சக்தியோடு சேர்ந்த எதிர் தரப்பினர் வெற்றிபெறுவார்களா ? என்பது வெறும் கணக்கியல் தத்துவமாக பார்க்க முடியாது.
பொதுஜன பெரமுன 2020 ஆம் ஆண்டு ஆட்சி அமைக்கும்போது தனது 145 ஆசனங்களுடன் ஏனை கட்சிகளின் ஐந்து உறுப்பினர்கள் உட்பட 150 ஆசனங்களை பலமாகக்கொண்டு ஆட்சியை அமைத்தது. 20 ஆவது திருத்தம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டபோது 150 உறுப்பினர்களுடன் முஸ்லீம் காங்கரஸ் உறுப்பினர் 4 அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 2 டயனகமஹே 1 புத்தளம் அலிசப்ரி 1 அரவிந்தகுமார் 1 என 10 ஆசனங்கள் ஆதரவளித்த நிலையில் 20 ஆவது திருத்தத்துக்கு 160 வாக்குக்களால் நிறைவேற்றப்பட்டது. இதனால் ஆட்சியாளர்கள் “மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துக்கு மேலாக ஆட்சி நாம் அமைத்துள்ளோம்” என இறுமாப்புக்கொண்டிருந்தார்கள்.
நம்பிக்கையில்லாப்பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்படுமாயின் ஆளும் கட்சியாகிய பொதுஜன பெரமுனவிடம் 120 உறுப்பினர்கள் எஞ்சி நிற்பதாக கூறப்படுகிறது. ஏலவே 40 உறுப்பினர்கள் சுயாதினமாக பாரளுமன்றில் இயங்கப்போவதாக ஒதுங்கிப்போயுள்னர். ஆளும் தரப்பு கூறியதுபோல் 120 உறுப்பினர்கள் உள்ளதாக எடுத்துக்கொண்டாலும் அதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஷை சேர்ந்த இருவர் இலங்கை முஸ்லீம் காங்கரஸ் 3. ஆகில இலங்கைமக்கள் காங்கிரஸ் 2 என 7 பேர் அரசுக்கு கொடுத்த ஆதரவை தாம் விலத்திக் கொண்டுவிட்டதாக கூறியிருக்கிறார்கள். இந்நிலையில் 113 ஆசனங்களே ஆளும் தரப்புக்கு எஞ்சியிருக்கும்பொதும் அத்தரப்பை சேர்ந்த டலஸ் அழகப்பெரும மற்றும் சரித் ஹேரத் ஆகிய இருவரும் இடைக்கால அரசாங்கம் அமைக்கும் பட்சத்திலையே அரசுக்கு ஆதரவு நல்குவோம் இல்லையாயின் எதிரணியை சார்ந்துவிடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் ஆளும் தரப்பு பலம் 111 ஆகவே காணப்படுகிறது. நம்பிக்கையில்லப்பிரேரணைக்கு வாக்கெடுப்பு நடத்தப்படும் போது மேற்படி 111 உறுப்பினர் மாத்திரம் வாக்களித்து எதிர்த்தரப்பில் 114 பேர் வாக்களிப்பார்களானால் ; அரசாங்கம் கவிண்டு போகும்.
ஆனால் நம்பிக்கையில்லாப்பிரேரணைக்கு வாக்களிப்பதற்கு 114 பேரை உடன்பட வைக்க முடியமுh ? என்பது ஒருகேள்வி. துற்போது ஆதரவு தருவதாக சில தரப்பினர் கூறினாலும் இறுதி நேரத்தில் பலர் விலைபோகக்கூடிய சூழ்நிலையும் காணப்படலாம்.
தமிழ்த்தரப்பை பொறுத்தவரை தமிழ்த்தேசிய முன்னணி பிரேரணைக்கு ஆதரவாக கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பாரளுமன்றில் நம்பிக்கையில்லாப்பிரேரணை கொண்டுவரப்படும்போது பார்த்துக்கொள்வோமென்று போக்கு சொல்லியுள்ளனர். மற்றத்தமிழ்த்தரப்பினர் நடுநிலையாக நின்று கொள்ளப்பார்க்கிறார்கள்.இவ்வாறானதொரு நிலையில் தமிழ்த்தரப்பினரின் நிலைப்பாடு எப்படி இருக்கப்போகிறதென்பது பொறுத்திருந்து பார்க்கப்படவேண்டிய விடயம்.
அரசாங்க பக்கம் திரும்பி பார்ப்போமானால் தாம் தனித்து நின்று இயங்கப்;போவதாக கூறிக்கொண்டிருக்கும் சுயாதீன அணியினர் 40 பேரும் உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வார்களா என்று அறுதியிட்டு கூறமுடியாது. இவர்கள் ஜனாதிபதியுடன் இரகசிய தொடர்பை பேணிவருவதாக ஒரு குற்றச்சாட்டும் இருக்கிறது. அதாவது அவர் தலைமையில் இடைக்கால அரசாங்கத்தை அமைக்க விருப்பம் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே மீண்டும் பழையபடி வேதாளம்போல் இவர்கள் அரசாங்கத் தரப்புக்கு மாறலாம். குத்துக்கரணம் அடிக்கலாம், என்ற அவநம்பிக்கையும் தெரிவிக்கப்படுகிறது.
அதேபோல்தான் ஏலவே அரசாங்கத்துடன் முரண்பட்டும் வெளியேற்றப்பட்டவர்களான முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச உதய கம்மன்பில உட்பட்ட 11 பேரும் மஹிந்தவை அரசைவிட்டு வெளியேற்றிவிட்டு ஜனாதிபதியோடு சேர்ந்து இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் நப்பாசையில் அடிக்கடி ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருப்பதால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பலிக்கடாவாக்கிவிட்டு கோத்தா ஆட்சியை கொண்டு செல்வதற்காக புதியதொரு தொழில் நுட்பத்தை கையாளப்பார்க்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
ஏலவே இந்நாட்டு அரசியலில் இவர்கள் தமிழ் விரோத செயற்பாட்டாளர்களாக இயங்கி பல நெட்டூரங்களை செய்ய உடந்தையாக இருந்தவர்கள் என்பது ஜீரணிப்படமுடியாத உண்மைகள். இவர்களை நம்பி நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்ற முயற்சி செய்வது எந்தளவுக்கு வெற்றியளிக்கும் என்பதை திட்டவட்டமாக கூறமுடிடியாது. ஊதய கம்மன்பில நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவரும்படி பல தடவைகள் பிரதான எதிர்க்கட்சியாகிய ஐக்கிய மக்கள் சக்தியை வலியுறுத்தி வந்தாலும் அவரின் நிலைப்பாட்டில் ஒரு திடமன உறுதியை நம்புவது முடியாத காரியம். எனவேதான் எதிர்கட்சியினால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப்பிரேரணை வெற்றி பெறுவதற்குரிய வாய்ப்பு வெறும் எதிர்க்கட்சி தரப்பினரிடம் மட்டுமன்றி இன்றைய சூழலில் இருதரப்பிரிடமும் நம்பியிருக்கவேண்டிய தேவையும் அவசியமும் உள்ளது.
ஜனாதிபதிக்கெதிராக குற்றப்பிரேரணையொன்றை கொண்டுவரவேண்டுமென பல தரப்பினராலும் ஆவேசமான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டாலும் மேற்படி குற்றப்பிரேரணையை பாரளுமன்றில் நிறைவேற்றக்கூடிய பலம் எதிர்த்தரப்பினர்க்கு உண்டா ? என்பது ஆராயப்பட வேண்டிய விடயம். இப்பிரேரணை வெல்லப்படவேண்டுமாயின் பிரேரணைக்கு ஆதரவாக பாராளுமன்றில் 150 உறுப்பினர்கள் வாக்களிக்கவேண்டும் ஒன்று குறைந்தாலும் அப்பிரேரணை தோற்கடிக்கப்பட்டதாகவே கருதப்படும். முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர் ஜெவர்த்தனா உருவாக்கிய 1978 ஆம் ஆண்டு அரசியல் சாசனத்தின் பலமே இதில்தான் தங்கியுள்ளது. இதை மாற்றியமைக்கவே 19 ஆவது திருத்தத்தை நல்லாட்சி அரசாங்கத்தில் கொண்டுவந்தார்கள் . அதை இரத்து செய்யும் முகமாகவே மீண்டும் 20 ஆவது திருத்தத்தை பொதுஜன பெரமுன கொண்டுவந்தது. இத்திருத்தத்தின் காரணமாக ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் மீண்டும் மீள் நிரப்பு செய்யப்பட்டது. இத்திருத்தத்துக்கு 160 பேர் ஆதரவாக வாக்களித்திருந்தார்கள். இதையே தற்பொழுது 21 சீர்திருத்தத்தின் மூலம் இல்லாது ஆக்கவேண்டுமென பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது.
மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டே ஜனாதிபதி மீதான குற்றப்பிரேரணையை வெற்றி பெற வைக்கமுடியும் என்பதனால் தற்போதைய சூழ்நிலையில் குற்றப்பிரேரணையை கொண்டுவருவது உசிதமற்றது என்ற யதார்த்தம் கருதியே மாற்றீடாக ஜனாதிபதி மீது நம்பிக்கையில்லப்பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது.
ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கை இல்லாப்பிரேரணை சாதாரண பெரும்பான்மையினால் (113) நிறைவேற்ற முடியும் என்பதனால் இவ்வழி பின்பற்றப்பட்டிருக்கிறது. இலங்கை அரசியல் சாசனத்தினபடி ஜனாதிபதிக்கெதிராக நம்பிக்கையில்லாப்பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டு அவரை பதவி இறக்க முடியமா ? என்பதை சட்ட அறிஞர்களே வியாக்கியானப்படுத்த முடியும்.
ஏனெனில் ஜனாதிபதி பிரேமதாஸ காலத்தில் ஐக்கிய தேசியக்கட்சியை சேர்ந்த அதிருப்திக்குழுவொன்று ஜனாதிபதி பிரேமதாஸவுக்கு எதிராக குற்றப்பிரேரணையொன்றை கொண்டு வருவதற்கு இரகசியமான முறையில் ஏற்பாடுகளை மேற்கொண்டபோது அந்த விடயம் முதல் நாள் இரவே கசிந்து குற்றப்பிரேரணையை கொண்டுவரமுடியாத சந்தர்ப்பங்களும் இலங்கையில் இடம் பெற்றுள்ளது.
ஆளும் தரப்புக்குள் இருந்து கொண்டு ஆளும் அரசாங்கத்தையே சத்p மூலம் கவிழ்த்த சந்தர்ப்பங்களும் இலங்கை அரசியலில் கற்றுக்கொண்ட பாடங்களாக காணப்படுகிறது. ஆகையால் அரசாங்கத்தை கவிழ்க்கவோ அன்றி ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்பவோ அவர்களது சகாக்களே உடந்தையாக இருக்கமாட்டார்கள் என்று கூறமுடியாது. 1964 திருமதி ஸ்ரீமாவோ பண்டார நாயக்க பிரமராக பதவி வகித்த காலத்தில் சிம்மாசனப்பிரசங்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது பிரதமர் ஸ்ரீமாவின் நம்பிக்குரியவராக இருந்த சீ.பி.டி சில்வா தன்னுடைய சகாக்கள் 14 பேரையும் சேர்த்து சிம்மாசனப்பிரசங்க உரைக்கு (1964.12.3.) எதிர்த்து வாக்களித்ததன் காரணமாக அரசாங்கம் கவிழ நேர்ந்தது. அதுபோன்று மேற்படி 40 சுயாதீனக்குழுக்களும் மற்றும் 11 எதிரணியினரும் அரசாங்கத்துக்கு எதிராக வாக்களிக்க முற்படலாம். எதையுமே திட்டவட்டமாக கூறமுடியாது.
தற்போதைய அரசாங்கத்துக்கெதிரான நம்பிக்கையில்லாப்பிரேரணை பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டால் ஜனாதிபதிக்கெதரான நம்பிக்கையில்லாப்பிரேரணையும் வெற்றிபெற வாய்ப்புண்டு என்ற நம்பிக்கையின்பேரிலையே எதிhக்கட்சியினர் இரு பிரேரணைகளையும் பாரளுமன்றில் சமர்ப்பித்துள்ளனர். கொண்டுவரப்பட்டிருக்கலாம். எப்படியிருப்பினும் அரசாங்கத்துக்கெதிரான பிரேரணை தோற்கடிக்கப்பட்டால் ஜனாதிபதிக் கெதிரான பிரேரணையும் ; தோற்கடிக்கப்படும் என்பதற்கு மறுதலிப்பு கூறமுடியாது.
அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப்பிரேரணை தோற்கடிக்கப்பட்டு ஜனாதிபதிகெதிரான பிரேரணை தோற்கடிக்கப்படாத நிலையொன்று ஏற்படுமாயின் ஜனாதிபதி தனது அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்தும் அதிகாரம் கொண்டவராக மாறிவிடுவார்.
மறு தலையாக ஜனாதிபதிக்கெதிரான பிரேரணை நிறைவேற்றப்பட்டு அரசாங்கத்துக்க எதிரானது பிரேரணை நிறைவேற்றப்படவில்லையாயின். ஏன்ன நிகழும் என்பது தர்க்க முறையாக ஆராயப்படவேண்டிய விடயம்.
ஒரு நிலையில் அரசாங்கத்துக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதிக்கெதிரான பிரேரணை தோல்வியுறுமாயின் ஜனாதிபதி தனக்கு உடந்தையான விசுவாசமான அரசாங்கத்தையும் மந்திரிசபையைமே அமைக்கவே முயற்சிப்பார். பாராளுமன்றுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் எப்பொழுதும் பிணக்கு இருந்து கொண்டேயிருக்கும் . இதற்கு சிறந்த உதாரணம் திருமதி சந்திரிக்கா அம்மையார் காலத்தில் 2001 ஆம் ஆண்டு ரணில் தலைமையிலான ஐக்கியதேசிய முன்னணி ஆட்சி அமைத்த நிலையில் 2006 ஆம் ஆண்டுவரை பதவிக்காலம் ரணிலுக்கு இருந்தபோதும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் விடுதலைப்புலிக்கு மிடையில் ஏற்படுத்தப்பட்ட சமாதான உடன்படிக்கையானது தேசியரீதியில் பாதகத்தை உண்டாக்கும் என்பதை காரணம் காட்டி 2004 ல் ரணில் தலைமையிலான பாராளுமன்றை அம்மையார் கலைத்தார்.
இதே போன்றே 2018 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையே ஏற்பட்ட பனிப்போர் காரணமாக ஓக்டோபர் 26ல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவை பதவியிலிருந்து நீக்கிவிட்டு எதிர்க்கட்சியிலிருந்த மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் ஆக்கிய விவகாரமானது நாட்டில் பல குழப்ப நிலைகளை உருவாக்கியிருந்தது. இத்தகைய சவால் நிறைந்த சூழ் நிலையில் எந்த அழுத்தம் காரணமாகவும் யான் பதவி விலகப்போவதில்லை என பிரதமரும் இன்றைய நெருக்கடி நிலைக்கு புலம் பெயர் அமைப்புக்கள் மூல காரணமென்றும,; அரசியல் சாசனத்தின் பிரகாரம் பதவியை விட்டுப்போகமாட்டேன் என ஜனாதிபதியும் கூறிக்கொள்ளும் அழுங்கு நிலைக்கு போராட்டங்களும் பிரேரணைகளும் பதில் கூறுமா என்பது விரைவில் தெரிந்துவிடும்.