மன்னார் நிருபர்
(5-05-2022)
பொதுவாக புதுப்பிக்க கூடிய சக்தி வளங்களில் காற்றாலை மின் செயற்திட்டம் முக்கியமானதாகும் காற்று என்பது எமது பிரதேசத்தில் இலவசமாகவும் அதே நேரம் தொடர்ச்சியாக கிடைக்க கூடிய இயற்கையின் மூலப்பொருளாக காணப்படுகின்றது.
ஆகவே காற்றை பயன்படுத்தி மேற்கொள்ளும் மின்சார செயற்பாடுகள் ஏனைய முறையிலான மின்சார செயற்பாடுகளுடன் ஒப்பிடுகின்ற போது குறைவான அளவு சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தும் அதே நேரம் பொருளாதார ரீதியாக அதிக அளவு நன்மை பயக்கும் செயல்திட்டமாக காணப்படுகின்றது.
நீர் மின் உற்பத்தி,நிலக்கரி மின் உற்பத்தி போன்றவற்றுடன் ஒப்பிடும் போது காற்றாலை செயற்திட்டத்தினால் சூழலுக்கு பாதிப்பு குறைவாக காணப்படுகின்ற போதும் முற்றாக சூழலுக்கும் சூழலை நம்பி வாழும் பறவைகள் மிருகங்கள் உட்பட மனிதர்களுக்கும் தீமை இல்லை என நாம் கடந்து செல்ல முடியாது.
இவ் காற்றாலை செயற்றிட்டம் மன்னாரில் நடை முறைப் படுத்தப்படுவதால் மாவட்ட ரீதியாக பல பாதிப்புகள் அண்மைகாலமாக உணரப்பட்டு வருகின்றது.
மன்னார் முதல் நடுகுடா வரையிலான 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு அடி சக்தி பரிமாற்ற அமைப்புடனான இந்த மின் உற்பத்தி நிலையத்தின் ஊடாக நடுகுடா முதல் அநுராதபுரம் வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் உள்ளிட்ட முழு மின் கட்டமைப்புக்கும் 103.5 மெகாவாட் திறன் இணைக்கப்படவுள்ளதாக இச் செயற்திட்டத்தின் ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது.
மன்னார் கடற்கரையில் 13 கிலோமீற்றர் தூரத்திற்கு, 150 ஹெக்டேயர் நிலப்பரப்பை கையகப்படுத்தி இந்த மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டிற்கு 400 மில்லியன் மின் அலகுகளை உற்பத்தி செய்ய எதிர்பார்க்கப்பட்டது.
மன்னாரின் தென் கடல் பகுதியில் மக்கள் வசிக்கும் அதே நேரம் மீன்பிடியை மேற்கொள்ளும் பகுதிகளான நடுக்குடா தொடக்கம் தாழ்வுபாடு வரையிலாக அமைக்கப்பட்டுள்ள காற்றாலை செயற்திட்டமானது நாட்டுக்கு பண ரீதியாக பல நன்மைகளை ஏற்படுத்தினாலும் மன்னார் மாவட்ட மக்களுக்கு பெரும்பாலும் நன்மையை ஏற்படுத்த போவதில்லை என்பதுடன் எதிர்பார்காத அளவுக்கு பாரிய ஆபத்தை ஏற்படுத்தப்போவதை ஆறியாமலே மன்னார் மக்கள் இருப்பதே மிகவும் கவலைக்குறிய விடயமாகும்.
அண்மை காலமாக மன்னார் தீவக பகுதிக்குள் கரைவலை தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் தங்கள் மீன்பிடி நடவடிக்கை பெரிதும் பாதிக்கப்பட்டதாக தெரிவித்திருந்தனர். அதற்கு பெரும்பாலும் காற்றாலை மினுற்பத்தி செயற்திட்டம் காரணமாக அமைந்திருக்களாம் என் குற்றம் சுமத்தியிருந்தனர்.
ஆனாலும் அது ஆதாரபூர்வமற்ற குற்ற சாட்டு என அரச தரப்பால் தெரிவிக்கப்பட்டது . ஆனாலும் அவ் குற்ற சாட்டை சாதாரணமாக கடந்து விட முடியாத நிலையில் குறித்த விடயத்தின் உண்மை தன்மை தொடர்பாக ஆராய்ந்த நிலையில்,
காற்றாலைகள் ஊடாக ஏற்படும் சத்தம் கடற்கரைகளை நோக்கி வரும் மீன்களை கலைப்பதாகவும் தொடர்சியான இச் சத்ததின் காரணமாக கரையை நோக்கி வரும் மீன்கள் வேறு பகுதிகளை நோக்கி நிரந்தரமாக செல்வதற்கான வாய்புக்கள் அதிகமாக உள்ளதாகவும் உறுதிப்படுத்தியுள்ளார் யாழ்ப்பாண புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா.
காற்றாலை தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் காற்றாலை செயற்றிட்டம் நாடளாவிய ரீதியில் நன்மைகளை ஏற்படுத்தினாலும் மாவட்ட ரீதியாக நன்மையை விட அதிகளவான பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்தார்.
குறுங்கால பாதிப்பு மாத்திரம் இல்லாமல் மாவட்டம் நீண்ட கால பல பாதிப்புகளை எதிர்கொள்ள இந்த காற்றாலை வழியை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக காற்றாலை செயற்றிட்டம் காரணமாக ஆவியுயிர்ப்பு ,ஆவியாக்கல் செயற்பாடு அதிகமாக இடம் பெறுவதால் குறித்த காற்றாலைகளை சூழ உள்ள நிலத்தடி நீர் விரைவில் ஆவியாகுவதற்கான வாய்ப்பு காணப்படுவதாகவும் இதன் காரணமாக காற்றாலைகளை சூழ உள்ள நீர் மூலகங்களில் விரைவில் பாதிப்பு ஏற்படுவதுடன் விவசாய செய்கையும் பாரிய அளவில் பாதிக்கப்படும் என தெரிவிக்கிறார்.
அதே நேரம் காற்றாலை செயற்திட்டம் காரணமாகவும் அதனால் ஏற்படும் கதிர்வீச்சு காரணமாகவும் ஏற்படும் பாதிப்பு காரணமாக வெளிநாடுகளில் இருந்து எமது நாட்டுக்கு வரும் பறவைகளின் பயணப்பாதை பாதிக்கப்படுவதாகவும் இவ்வாறு தொடரும் பட்சத்தில் வெளிநாட்டு பறவைகளின் வருகை மன்னார் மாவட்டத்திற்குள் இல்லாமல் போய்விடும் என்பதுடன் இவ்வாறான பறவைகளை பார்பதற்கும் புகைப்படங்கள் எடுப்பதற்கும் மன்னார் நோக்கி வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயனிகளின் வருகை குறைவடையும் இதனால் மாவட்டத்திற்கு கிடைக்கும் வருமானமும் பாரிய அளவில் குறைவதற்கான வாய்ப்பு காணப்படுவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
அத்துடன் இரவு நேரங்களில் காற்றாலைகள் ஏற்படுத்தும் சத்தம் காரணமாக காற்றாலைகளை சூழ உள்ள மக்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் காற்றாலை இலங்கையின் கற்பிட்டி மற்றும் புத்தளம் போன்ற பகுதிகளில் அமைக்கப்பட்ட போதிலும் அவ்வாறான பகுதிகள் பெரிதும் மக்கள் வசிப்பிடங்கள் இல்லாத பகுதிகளாக காணப்படுவதாகவும் அவ்வாறான பகுதிகள் மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடாத பகுதிகள் எனவும் சுட்டி காட்டியுள்ளானர்.
ஆனாலும் மன்னார் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட காற்றாலைகள் மக்கள் வசிக்கும் பகுதிகள் என்பதுடன் மக்கள் மீண்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடு பகுதி எனவும் அவர் தெரிவித்துள்ளானர்.
கடந்த பல வருடங்களாக மன்னார் மாவட்டத்தில் கல நிலையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் மன்னார் மாவட்டத்தில் மழை வீழ்ச்சி அதிகரித்திருந்தாலும் மழை நாட்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.
இவற்றை விட ஆபத்தாக காற்றாலையினால் ஏற்படும் சத்தம் காரணமாக கர்பிணி தாய்மார்கள் மன அழுத்ததால் பாதிக்கப்படும் பட்சத்தில் அவர்களின் வயிற்றில் வளரும் சிசுக்களும் பாதிக்கப்பட கூடிய வாய்ப்புக்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
இவ்வாறான இயற்கை விரோத திட்டமிடாத அபிவிருத்தி எனும் போர்வையில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் மன்னார் மாவட்டத்தில் தொடரும் பட்சத்தில் விரைவில் மன்னார் தீவு வளங்கள் அற்ற கைவிடப்பட்ட ஒரு தீவகவே மாறும் என்பதே நிதர்சனம்.
இவ்வாறான நிலையில் பொது மக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து பல எதிர்ப்பு போராட்டங்கள் மேற்கொண்ட போதிலும் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் இவ் செயற்திட்டத்திற்கு தடை ஏற்படுத்தப்பட்ட போதிலும் அரசாங்கத்தினால் பூநகரி தொடக்கம் மன்னார் வரை இவ் திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான முன்னெடுப்புக்கள் மும்மூறமாக இடம் பெறுவதை அவதானிக்க கூடியதாக உள்ளது.
அதே நேரம் புதிய காற்றாலைகளை அமைப்பதற்காக கடற்கரை ஓரங்களில் காணிகளை கையகப்படுத்தும் நடவடிக்கைகளும் அதே நேரம் தனியார் காணிகளை கொள்வனவு செய்யும் செயற்பாடும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடற்றொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவிடம் குறித்த பிரச்சினை தொடர்பாக வினவிய போது மக்களால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் குற்றசாட்டுக்கள் ஆதார பூர்வமாக நிருபிக்கபடவில்லை எனவும் இது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அதன் பின்னர் மக்களின் விருப்பத்திற்கு ஏற்பவே இவ் செயற்திட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் மற்றும் அவ் ஆய்வுகளின் உண்மை தன்மை என்பது எப்போது மக்கள் மத்தியில் திருப்தியை ஏற்படுத்த போவதில்லை என்பதுடன் அவ்வாறான ஆய்வுகளின் முடிவுகள் கிடைக்கப்பெறுவதற்கு முன்னரே மாவட்ட ரீதியான சூழல் பாதிப்புக்கள் நிறுத்த முடியாத நிலை பெற்றுவிடும் என்பதே பெரும்பாலான மக்களின் கருத்தாகும்.
மக்களின் விருப்பத்திற்கு ஏற்பவே இச் செயற்திட்டம் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தெரிவித்தாலும் ,மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தாலும், கோட்டபாஜ ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கம் மன்னார் மக்களின் விருப்பத்திற்கு முரணாக இவ் செயற்திட்டத்தை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதுடன் காற்றாலை திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான ஒப்பந்த நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர் அதே நேரம் அரச தரப்புக்கள் பிரதிநிதிகள் ஊடாக மக்களை சமரசபடுத்தும் முயற்சிகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
அபிவிருத்தி எனும் போர்வையிம் முன்னெடுக்கப்பட்டும் இவ்வாறான இயற்கை விரோத மக்கள் விரோத செயற்திட்டங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்பதுடன் இவ்வாறான செயற்திட்டங்களால் ஏற்படும் பாதிப்புக்கள் நம் சந்ததியோடு நிற்க போவதில்லை என்பதுடன் எமக்கு பின்னால் வரும் சந்ததியினரின் எதிர்காலத்தையும் இருப்பையும் கேள்வி குறியாக்கும் என்பது உறுதி.
இவ்வாறான இயற்கை விரோத திட்டமிடாத அபிவிருத்தி எனும் போர்வையில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் மன்னார் மாவட்டத்தில் தொடரும் பட்சத்தில் விரைவில் மன்னார் தீவு வளங்கள் அற்ற கைவிடப்பட்ட ஒரு தீவகவே மாறும் என்பதே நிதர்சனம்.
எனவே அரசாங்கம் பெரும்பாலும் மக்கள் வசிக்காத மக்கள் பாவனையற்ற பகுதிகளை அடையாளப்படுத்தி மக்களின் விருப்பு வெறுப்புக்களை அறிந்து அவ்வாறான பகுதிகளில் இவ்வாறான செயற்திட்டங்களை முன்னெடுக்க முன்வர வேண்டும் என பொது அமைப்புக்கள் கோரிக்கை விடுப்பதுடன் காற்றாலை செயற்திட்டத்தின் விரிவுபடுத்தலை ஒரு போதும் மன்னார் மக்கள் ஏற்க போவதில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.