கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அடுத்துள்ள பி & டி காலனியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு செல்லும் இவர் தனது வீட்டு அருகே இளைஞர்களுக்கு வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார்.
அதிலுள்ள ஓர் வீட்டில் பனியன் தொழிற்சாலைக்கு வேலைக்கு செல்லும் திருநெல்வேலியைச் சேர்ந்த சிவா என்ற இளைஞன் தங்கியுள்ளான்.
சனிக்கிழமை தனது பிறந்தநாளைக் கொண்டாடிய சிவா நண்பர்களை வீட்டுக்கு அழைத்துள்ளான். திருநெல்வேலியைச் சேர்ந்த ஹரிஹரன், முத்துவேல், சங்கர், ராஜா, முருகன் ஆகியோர் சிவா வீட்டிற்கு வந்து இரவு முழுவதும் மது அருந்தியும், கஞ்சா பயன்படுத்திக் கொண்டும் போதையில் கத்தியபடியும் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை வீட்டின் உரிமையாளர் சண்முகசுந்தரம் கண்டித்துள்ளார். காலை சிவா திருநெல்வேலிக்கு சென்ற நிலையில் போதை மயக்கத்திலிருந்த அவனது நண்பர்கள் 5 பேரும் அரிவாள், கத்தி கம்புகளுடன் சண்முகசுந்தரம் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.
சண்முகசுந்தரத்தையும், அவரது மனைவி பூர்ணிமாவையும் கண்மூடித்தனமாகத் தாக்கியதில் அவர்கள் படுகாயம் அடைந்தனர். ஆத்திரம் தீராத போதை கும்பல், அவர்களது வீட்டையும் சூறையாடியது. ஜன்னல் கண்ணாடிகள், இருசக்கர வாகனங்கள், கார் என அனைத்தையும் அடித்து நொறுக்கியுள்ளனர். சப்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், இளைஞர்களை கண்டித்துள்ளனர்.
ஆத்திரம் தலைக்கு ஏறவே, சண்முகசுந்தரத்தின் வீட்டிலிருந்து வெளியே வந்த கும்பல், ஆண், பெண் என்ற பேதமின்றி கண்ணில் பட்டவர்களை எல்லாம் தாக்கத் தொடங்கியுள்ளனர். அவர்கள் கையில் ஆயுதங்களை வைத்திருந்ததால் அருகில் செல்லவே பலரும் தயங்கினர்.
போதை கும்பல் தாக்கியதில் 8 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து போலீசார் வரவே, போதை கும்பல் அருகிலிருந்த தென்னந்தோப்புக்குள் சென்று ஒளிந்துகொண்டது.
வெகுண்டெழுந்த அப்பகுதிவாசிகள் திரளானோர் ஒன்று சேர்ந்து தோப்பைச் சுற்றி வளைத்து போதைக் கும்பலைச் சேர்ந்த ஒவ்வொருவரையும் மடக்கிப் பிடித்து சரமாரியாகத் தாக்கினர்.
அதுவரை ஆயுதங்களை வைத்துக் கொண்டு ஆட்டம் காட்டிய 5 பேரும் அடி தாங்க முடியாமல் அய்யோ, அம்மா என அலறித் துடித்தனர்.
ஆத்திரத்தின் உச்சத்தில் தாக்குதலில் ஈடுபட்டவர்களிடமிருந்து இளைஞர்கள் 5 பேரையும் போலீசார் போராடி மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
கஞ்சா புழக்கத்தைக் கட்டுப்படுத்தாமல் இத்தகைய சம்பவங்களைத் தடுக்க முடியாது என்று கூறும் கோவை மக்கள், உடனடியாகவும் தீவிரமாகவும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என காவல்துறைக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.