வி.தேவராஜ் – மூத்த ஊடகவியலாளர்.
- ‘ கோத்தா கோ கம‘ கருத்தியல் வடகிழக்கு மலையக முஸ்லிம் இளைஞர் யுவதிகளின் கண்களைத் திறக்குமா?
- தமிழ் முஸ்லிம் தலைமைகளால் ஏமாற்றப்பட்டு திசையறியாது இருக்கும் வடக்கு கிழக்கு மலையக முஸ்லிம் இளைஞர் யுவதிகளின் கண்களை இந்த ‘கோத்தா கோ கம‘ கருத்தியல் கண் திறக்குமா?
கொழும்பு காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இளைஞர் யுவதிகளினால் ஆரம்பிக்கப்பட்ட அகிம்சை வழிப் போராட்டமானது 8 ஆம் திகதி மே மாதத்துடன் ஒரு மாதத்தை பூர்த்தி செய்தது.
இந்தப் போராட்டம் ‘சலசலப்புடன் கடந்து போய்விடும்‘ என்பதே அரசியல்வாதிகளின் எண்ணப்பாடாக போராட்டம் ஆரம்பித்ததில் இருந்தே கருக் கொண்டிருந்தது. இதுவும் இலகுவில் கடந்துபோய்விடும் என்பதில் குறிப்பாக அதீத நம்பிக்கை கொண்டவர்களாக ராஜபக்ஷ குடும்பமும் அவர்களுடன் இணைந்த அரசியல் கூட்டாளிகளும் இருந்தனர். மே 8 ஆம் திகதிவரை ‘இதுவும் இலகுவில் கடந்துபோயவிடும்‘ என்ற நிலைப்பாட்டில் மண் விழும் என மறுநாள் மே 9 ஆம் திகதி வரை அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. எனவேதான் மே 9இல் விஷப் பரீட்சையில் இறங்கினர்.
அலரி மாளிகையில் மஹிந்த ராஜபக்ஷ தனது ஆதரவாளர்கள் சகிதம் கூட்டங்களை நடத்துவது ஒன்றும் புதிதில்லை. இன்றைய நெருக்கடி காலகட்டத்தில் குறிப்பாக ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலகுவதுடன் ராஜபக்ஷ குடும்பமே அரசியலில் இருந்து விலக வேண்டும்; கொள்ளையடித்த பணத்தை திருப்பி நாட்டுக்கே வழங்க வேண்டும் என ஜனாதிபதி செயலகத்தில் இருந்து ஒலித்த குரல்கள் நாடு முழுவதும் ஒலிக்கத் தொடங்கியதை அடுத்து அடிக்கடி தனது ஆதரவாளர்களைச் சந்திக்கத் தொடங்கினாhர். அதன் தொடர்ச்சியாகத்தான் மே 9ஆம் திகதியும் தனது ஆதரவாளர்களைச் சந்தித்தார்.
இந்தச் சந்திப்பு சற்று வித்தியாசமானதாக அமைந்தது. வழமைபோன்று பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ஷ அவர்களை விலக வேண்டாமென கோருவது மாத்திரமல்ல கூட்ட முடிவில் அலரி மாளிகையை விட்டு வெளியேறி பொலிசாரினதும் இராணுவத்தினதும் ஒத்துழைப்புடன் ஜனாதிபதி செயலகத்திற்கு முன் 31 நாட்களாக இயங்கிவரும் ‘ கோத்தா கோ கமவை‘ துவம் செய்து துடைத்து அழித்து போராட்டத்திற்க முற்றுப் புள்ளி வைப்பது என்ற நிகழ்ச்சி நிரலும் இருந்தது. இதன் எதிரொலிதான் ‘கோதா கோ கம‘ மீது நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல்களாகும்.
இந்தத் தாக்குதல்கள் பூமரங்காய் போன்று ராஜபக்ஷக்களையும் அவருடன் இணைந்த ஆளும் வர்க்கத்தினரையும் நாடு பூராவும் தாக்கத் தொடங்கியது.
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பான ‘கோ கோத்தா கம‘ அலரி மாளிகைக்கு முன்பான ‘மைனா கம‘ மற்றும் நாடுபூராவும் உருவாகியுள்ள மேற் கூறிய கிராமங்கள் ரா{பக்ஷ குடும்பமும் அவர்கள் சார்ந்த ஆளும் வர்க்கமும் நினைப்பது போல் ‘இதுவும் இலகுவில் கடந்துபோய்விடும்‘ என்ற சாமான்ய விடயமல்ல என்பதை உணர்த்தி விட்டது.
இதனை வேறு வார்த்தையில் கூறுவதாயின் ‘கோ கோத்தா கமவின்‘ கருத்தியல் வெறுமனே ‘ தேநீர் கோப்பை சூறாவளி‘ அல்ல உண்மையான சூறாவளி என்பதை உணர்த்திவிட்டது. இந்த சூறாவளி மகிந்த ராஜபக்ஷவின் இராஜினாமாவுடன் மாத்திரமல்ல ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷவின்; இராஜினாமாவுடன் வீறு கொண்டெழுவதுடன் ஊழல்வாதிகளுக்கு சாவுமணி அடிக்கும்வரை ஓயப் போவதில்லை என்பது உண்மையாகும்.
உண்மையில் ‘கோத்தா கோ கம‘ இளைஞர் யுவதிகளைப் பாராட்டியாக வேண்டும். தம்மை நோக்கி குண்டர்கள் பொல்லுகளுடன் வரும் பொழுது
‘ திருப்பித் தாக்கமாட்டோம் ‘ எனக் கூறி இடியென விழுந்த அடிகளை தாங்கி நின்றனர். இந்த மன உறுதியே நாட்டு மக்களை கிளர்ந்தெழ வைத்தது. இந்த மன உறுதி உள்; நாட்டில் மாத்திரமல்ல வெளி உலகத்திலும் அவர்களை உயர்த்தியுள்ளது.
மக்களுக்காக மாற்றத்தை ஏற்படுத்த முயன்றவர்கள் இந்த இளைஞர் யுவதிகள்.
தென்னிலங்கையில் ஆயுதம் ஏந்திய பரம்பரை இன்று அகிம்iஷ வழியில்
தென்னிலங்கையை அரசியல் சமூக வேறுபாடுகளுக்குப்பால் ஓரணியில் திரட்டியுள்ளனர். அதில் வெற்றியும் கண்டுள்ளனர்.
இந்த இளைஞர்களின் பின்னால் அணி திரள தென்னிலங்கை தயாராகிவிட்டது.
ராஜபக்ஜக்களினதும் அவர்கள் சார்ந்த அடிவருடிகளினதும் ஊழல் மோசடிகள் குறித்து பொது மக்களை சிந்திக்க வைத்தது மாத்திரமல்ல பொது வெளியிலும் பேச வைத்துள்ளனர்.
இன்று மக்கள் கூடும் பொது வெளியிலும் பயணம் செய்யும் போதும் ஒருவரை ஒருவர் தனிப்பட்ட ரீதியில் சந்திக்கும் போதும் ராஜபக்ஷ குடும்பம் அவர்களுடன் இணைந்த ஊழல் மோசடி கும்பல்கள் பற்றியும் நாட்டின் எதிர் காலம் குறித்தும் இந்த இளைஞர் குழாம் பேச வைத்துள்ளது.
குறுகிய ஒரு மாத காலத்திற்குள் மக்களின் சிந்தனையில் பாரிய மாற்றத்தை; ‘கோ கோத்தா கம‘ போராட்டக்கள இளைஞர்களும் யுவதிகளும் உருவாக்கியுள்ளனர் என்பதை இங்கு பதிவு செய்தாக வேண்டும்.
ராஜபக்ஷ குடும்பத்திடம் இருந்து விடுதலை பெற்ற ஒரு நல்லாட்சியை உருவாக்க நினைத்த தென்னிலங்கை மக்கள்; அரசியல்வாதிகளினால் தோற்கடிக்கப்பட்டனர்.
இந்தத் தோல்வி தந்த வலியுடன் இருந்தவர்களை உயிர்த்த ஞாயிறு படுகொலையுடன் சிங்கள மக்களின் உணர்வுகளுடன் விளையாடி நாட்டைப் பாதுகாப்பதாக ராஜபக்ஷக்கள் மீண்டும் இலங்கை அரசியலில் உயிர்த்தெழுந்தனர். கடந்த இரண்டரை வருடங்களில் ராஜபக்ஷ குடும்பமும் அவர்கள் சார்ந்த ஆளும் வர்க்கமும் நடத்திய ஊழல் மோசடிகளினால் நாடு வங்குரோத்து நிலையை அடைந்தது.
ராஜபக்ஷக்கள் இல்லாத ஊழல் மோசடிகள் அற்ற நாட்டை உருவாக்கவே இளைஞர் யுவதிகள் முயல்கின்றனர்.
தென்னிலங்கை குண்டர்களும் படைத்தரப்பும் தமிழர்களின் உயிர்களைப் பறித்ததையும் உடமைகளை நூலகத்தை எரித்ததையுமே நாம் பார்த்துள்ளோம். ஆனால் இன்று இனவாதிகளின் சொத்துக்கள் எரிக்கப்படுவதை முதன் முதலாகப் பார்க்கின்றோம்.
இதற்குப் பிறகும் இனவாதிகளும் ஊழல் மோசடிக்காரர்களும் தலை நிமிர்ந்து தென்னிலங்கை அரசியலில் இறங்க முன்வருவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தென்னிலங்கை அரசியலில் ராஜபக்ஷ குடும்பத்தில் எஞ்சி இருப்பவர் ஜனாதிபதி கோத்தபாய மாத்திரமே.இது ‘கோ கோதாகம ‘ இளைஞர் யுவதிகளுக்குக் கிடைத்த வெற்றியே.
தமிழ் முஸ்லிம் தலைமைகளால் ஏமாற்றப்பட்டு திசையறியாது இருக்கும் வடக்கு கிழக்கு மலையக முஸ்லிம் இளைஞர் யுவதிகளின் கண்களை இந்த ‘கோத்தா கோ கம‘ கருத்தியல் கண் திறக்குமா?
11 மே 2022