சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன்
“நரிக்கு இடம் கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்குமாம்” என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அதாவது நாட்டை ஆளும் சிங்கம் நரிக்கும் இடம் கொடுத்தால், அது கிடைக்கு (ஒவ்வொரு வேளை உணவிற்கும்) இரண்டு ஆடு கேட்குமாம். அது தான் இலங்கையில் வியாழன் (12) மாலை அரங்கேறியிருக்கும் அவலம் தொடர்பில் எனக்கு உடனடியாக நினைவிற்கு வந்தது.
இலங்கைத் தீவு பல அவலங்களை, அநாகரீகமான செயல்களை, அடாவடிகளை, அராஜகங்களை, அருவருக்கத்தக்க விஷயங்களை பல தசாப்தங்களாகச் சந்தித்து வந்துள்ளது. இவை எல்லாவற்றையும் அங்கு வாழும் மூவின மக்களும் பல சொல்லொணா துன்பங்களுக்கு அப்பாற்பட்டு சகித்துக் கொண்டு 74 ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர்.
சுமார் இருநூறு ஆண்டு காலமாக, இந்தியாவிலிருந்து `கூலிகளாக` பஞ்சம் பிழைக்க வந்த மக்கள் இன்னும் நவகாலனித்துவ அடிமைகளாக எவ்விதமான முன்னேற்றமும் இல்லாமல், நாட்டிலேயே மிகவும் வறிய மக்களாக வாழ்ந்து வருகின்றனர். வடக்கு கிழக்கு பகுதியிலுள்ள மக்களோ நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து இரண்டாம்தர குடிமக்களாக உரிமைகள் பறிக்கப்பட்டு, ஆயுதம் ஏந்தி போராடும் நிலைக்கு தள்ளப்பட்டு, அந்தப் போராட்டம் பன்னாட்டு உதவியுடன் தோற்கடிக்கப்பட்டு அதனால் ஏற்பட்ட வலிகளை இன்னும் சுமந்து கொண்டு வாழ்கின்றனர். அரச கணக்கின்படி 80,000 தமிழ்ப் பெண்கள் போரில் தமது கணவரை இழந்துள்ளனர், ஆயிரக்கணக்கானவர்கள் உடல் உறுப்புகளை இழந்து இன்றும் நடைப்பிணமாக வாழ்கின்றனர். முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரை அவர்களின் சார்புநிலை குறித்து பல கேள்விகள் இருந்தாலும், அண்மைய காலங்களில் அவர்களும் பல இடைஞ்சலுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்தது. அதேவேளை நாட்டில் சிங்கள மக்கள் மட்டும் சுகமாக வாழ்ந்துவிடவில்லை. அரசியல் பலமும் அதிகாரமும் கொண்டவர்களும் அவர்களைச் சுற்றியிருந்த சிங்கள மக்களுமே காலங்காலமாகப் பயனடைந்தனர்.
இதற்குச் சிறந்த உதாரணம், தற்போது அரசிற்கு எதிராக காலிமுகத் திடலில் போராடுபவர்கள் பெரும்பாலும் ராஜபக்சகளுக்கு வாக்களித்த சிங்கள மக்களே. யாரின் வாக்கு மூலம் ராஜபக்சக்கள் ஆட்சிக்கு வந்தார்களோ, அவர்களாலேயே இன்று ஆட்சியிலிருந்து அகற்றப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால், ஜனநாயகத்தை கேலிக்கூத்தாகும் வகையில் இன்று (12) மாலை அரங்கேறியது போன்ற ஒரு அவலத்தை இதுவரை நான் கண்டதுமில்லை கேட்டதுமில்லை. உலகில் எங்கும் இல்லாதபடி, நாடாளுமன்றத்தில் ஒரே ஒரு உறுப்பிரைக் கொண்ட ஒரு கட்சியின் தலைவர், அதுவும் நேரடித் தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டு, தேசியப் பட்டியலில் ஆறுமாத இழுப்படிப்பிற்கு பிறகு தன்னைத்தானே கட்சியின் சார்பில் நியமித்துக் கொண்டவர் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதாவது, அவர் நாட்டின் பிரதமராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். இது சத்தியம் என்கிற வார்த்தைக்கே இழுக்கு போன்றது. அவர் பிரதமராக நியமிக்கப்பட்டதும், நாடாளுமன்றத்தில் தான் ஒருவர் மட்டுமே உறுப்பினராக இருக்கும் நிலையில் அந்த பொறுப்பை ஏற்பது தார்மீக ரீதியாக சரியா என்பதற்கு அப்பாற்பட்டு ஏராளமான கேள்விகள் உள்ளன.
அவர் பிரதமராகப் பதவியேற்றவுடன் வந்த முதல் வாழ்த்து முன்னாள் பிரதமர் மற்றும் ஜனாதிபதியான மகிந்த ராஜபக்சவிடமிருந்து. தனது டிவிட்டரில் அவர் விரைவில் நாட்டை சிக்கலிலிருந்து மீட்க புதிய பிரதமருக்கு பழைய பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார். உடனடியாக இதற்கு சமூக ஊடகங்களில் எதிர்வினையும் தோன்றியது.
காலிமுகத் திடலில் ராஜபக்ச அரசிற்கு எதிராகப் போராடியவர்கள், உடனடியாக “ரணில்கோகம” ரணில் வீட்டிற்கு போங்கள் என்ற கோஷத்தை தொடங்கிவிட்டனர். அவர் பிரதமராக நியமிக்கப்படவுள்ளார் என்று செய்திகள் கசிந்த நிலையில், அவரது நியமனம் முறையற்றது மற்றும் சட்டவிரோதமானது என்று இலங்கை கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர் கர்தினால் மால்கம் ரஞ்சித் மற்றும் வண. கலாநிதி ஓமல்பே சோபித தேரர், ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்தனர். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இல்லாத ஒருவரை எப்படி ஜனாதிபதி பிரதமராக நியமிக்கலாம் என்று அந்த இருவரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அந்த கேள்வியை அவர் மட்டுமல்ல, ஊடகவியலாளர்கள், சமூக ஊடகப் பயன்பாட்டாளர்கள், சிவில் சமூகத்தினர், கல்விமான்கள், அரசு ஊழியர்கள், தொழிற்சங்கவாதிகள், காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள், சட்ட வல்லுநர்கள் என பலதரப்பினரும் கேட்டுள்ளனர், அதுவும் அவர் பதவியேற்பதற்கு முன்னதாகவே!
எனினும், இவை அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு, பதவியேற்றவுடன் கொழும்பு பௌத்த விகாரை ஒன்றிற்கு சென்று வழிபட்டு ஆசிபெற்று திரும்பிய ஒற்றை நாடாளுமன்ற உறுப்பினர் கட்சியின் தலைவரும் ஆறாவது முறையாக பிரதமர் பதவியை ஏற்றுள்ள ரணில் விக்ரமசிஙவிடம் செய்தியாளர்கள் அதன் நியாயத்தன்மை குறித்து கேட்டதற்கு அவர் பிரிட்டனில் பிரதமராக இருந்த சர் வின்ஸ்டன் சர்ச்சில் 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இருந்த கட்சியின் தலைவராக இருந்த போது எப்படிப் பதவியேற்றாரோ அதேபோல் தான் தானும் என்று கூறியுள்ளார், அவர் இலங்கை சரித்திரத்தை மட்டுமல்ல அவர்களின் எஜமானர்களாக இருந்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் சரித்திரத்தையும் சரியாகப் படிக்கவில்லை என்பது தெரிகிறது.
இதனிடையே மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸநாயக்க வண். ஓமல்பே சோபித தேரரை வியாழன் மாலை சந்தித்த பிறகு, “ரணில் எப்போதுமே ராஜபக்சகளின் இரட்சகராகவே இருந்துள்ளார், அவர் மக்களின் விருப்பத்திற்கு எதிராகவே பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்” என்று கூறியுள்ளார்.
இப்படி பலதுறையினரின் எதிர்ப்பையும் மீறி சுயலாபத்திற்காக மட்டுமே அவர் பிரதமர் பொறுப்பை ஏற்றுள்ளார் என்கிற விமர்சனம் தொடருகிறது. அதற்கான பதில் இன்னும் அவரிடமிருந்து வெளியாகவில்லை அது வெளியாகவும் செய்யாது.
சரியோ, பிழையோ அவர் இன்றளவில் நாட்டின் பிரதமர். அவர் இன்று நாடு சந்திக்கும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியிலிருந்து அதை மீட்டெடுப்பார் என்று கருதப்படுவதில் தொடர்பில், சில நியாயமான கேள்விகள் எழுவதை தவிர்க்க முடியவில்லை.
சீனாவிற்கு கொழும்பு துறைமுக நகரை 99 ஆண்டுக்கால குத்தகைக்குக் கொடுத்தது யார்? அதுவே இந்தியாவிற்கும் இலங்கைக்கும் ஒரு உரசலை ஏற்படுத்தியது. அந்த துறைமுக திட்டம் எப்படி இலங்கை அரசின் பொருளாதாரத்தை சீர்குலைத்தது என்பதை உலகமே அறியும். மைத்திரிபால சிறிசேனவுடன் அவர் அமைத்த கூட்டாட்சியில் இடம்பெற்ற குழப்பங்களைப் பட்டியலிட்டால் அது தொடர்கதை போல இருக்கும்.மாற்று கட்சியைச் சேர்ந்த ஜனாதிபதியுடன் இப்போது எப்படி இணைந்து செயல்படுவார்?
அவரை பதவியிலிருந்து விலக்கி மஹிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா இப்போது என்ன செய்யப் போகிறார்? ரணில் அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை ஆதரிப்பாரா? அல்லது ரணில் மைத்திரியிடம் தன்னை ஆதரிக்கும்படி கோரி நிற்பாரா?
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை மற்றும் பயங்கரவாத தடைச் சட்டத்தை கொண்டுவந்தது இவரது அரசியல் ஆசான் மற்றும் மாமாவான ஜெ ஆர் ஜெயவர்தன என்பதை இலங்கை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். அப்படியான கட்சிக்குத் தலைமையேற்று அதன் சார்பில் தான் ஒருவர் மட்டுமே நாடாளுமன்றத்தில் தேசியப் பட்டியல் உறுப்பினராக இருக்கும் ஒருவரால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்க முடியுமா? அதுவும் தன்னை பிரதமராக்கிய கோத்தாபய ராஜபக்சவிற்கு எதிராக அவரது அதிகாரங்களைக் குறைக்கும் வகையில் 19 ஆவது சட்டத் திருத்தத்தை மீண்டும் கொண்டுவர இதய சுத்தியுடன் நடவடிக்கை எடுப்பாரா?
எல்லா அரசியல்வாதிகளைப் போன்று அவருக்கும் கறைபடிந்த ஒரு பின்புலம் உள்ளது. தமிழ் மக்களின் போராட்டத்தின் போது இடம்பெற்ற படுகொலைகள், கடத்தல்,காணாமல் ஆக்கப்பட்ட ஆயிரக்கக்ணகான சம்பவங்களில் ஆட்சியிலிருந்த அனைவருக்கும் தொடர்பும் பொறுப்பும் உள்ளது. அதை யாரும் மறுக்க முடியாது.
1998 ஆம் ஆண்டின் ஜனாதிபதி ஆணைக் குழுவொன்று பதலந்த (Batalanda) வீட்டுவசதி திட்டத்தின் வீடுகளில் சட்டவிரோதமாக ஆட்களைத் தடுத்துவைத்து சித்திரவதை செய்யும் மையங்களை ரணில் நிர்வகித்து வந்தார் என்று கண்டறிந்தது. இது தொடர்பில் அவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட படங்களை சமூக ஊடக செயல்பாட்டாளர்கள் தேடி எடுத்து தூசிதட்டி பதிவிட்டுள்ளனர்.
”ரணில் ஆரம்பம் முதலே இந்த நாடாளுமன்றத்தில் நியாயத்தன்மை இல்லாமலேயே இருந்தார், அவர் தனது சொந்த தொகுதியில் கூட வெல்லவில்லை, அதேவேளை ஜனாதிபதியும் முற்றாக தான் பதவியில் இருப்பதற்கான நியாயத்தன்மையை இழந்துவிட்டார், மக்கள் அவர் வீட்டிற்கு போக வேண்டும் என்று விரும்புகின்றனர், விரைவில் அது தொடர்பான தீர்மானம் நாடாளுமன்றம் வாக்களிக்கவுள்ளது” என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளரும் சட்டத்தரணியுமான சுமந்திரன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அவரை ஆதரிக்கப் போவதில்லை என்பது தெளிவாகியுள்ளது. அதே போன்று முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் அவர்கள் பதவிக்காக எந்த பக்கமும் சாய்வார்கள் என்பதும் காலத்தின் கண்ணாடியாகவுள்ளது.
தற்போது பிரதமராகப் பதவியேற்றுள்ள ரணிலுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் கட்சி தாவல் தடைச் சட்டம் இல்லாத நிலையில், நாடாளுமன்ற வாக்கெடுப்பில் யார் எந்தப் பக்கம் நிற்பார்கள் என்பதும், ரணில் உறுதியாக நாடாளுமன்ற வாக்கெடுப்பில் வெற்றி பெறுவாரா என்பதை ஊகிக்க முடியாமல் உள்ளது.
அவர் உறுதி கூறியுள்ளபடி நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி மீதான நம்பிக்கையிலா தீர்மானம் கொண்டுவரப்படும் போது, மக்கள் பிரதிநிதிகள் எந்தப்பக்கம் நிற்கிறார் என்பது தெளிவாகிவிடும். அது இம்மாதம்17 ஆம் திகதி அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்துவரும் நாட்களில் அவர் தமிழ் மக்கள் தொடர்பில் எப்படியான நிலைப்பாட்டை எடுப்பார் என்பது தெரியவரும். விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்தவர்களின் நினைவை அனுசரிக்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு, அவரது தலைமையிலான அரசு அனுமதியளிக்குமா அல்லது அவரைப் பிரதமராக்கிய கோத்தாபயவின் கடும்போக்கு நிலைப்பாட்டின் பக்கம் அவர் நிற்பாரா?
காணாமல் போனவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஆகியோரின் குடும்பத்தாருக்கு அவர் என்ன பதில் சொல்லப் போகிறார்? அடுத்த சில மாதங்களில் ஐ நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான வாக்கெடுப்பும் நடைபெறவுள்ள நிலையில், அதை எப்படிக் கையாள்வார் ஒரு உறுப்பினர் கட்சியின் தலைவராக இருந்து பிரதமராகியுள்ள ரணில் விக்ரமசிங்க.
அனைத்திலும் முக்கியமாக காலிமுகத் திடலில் போராட்டத்தை தொடர்பவர்களின் முக்கிய கோரிக்கையான ராஜபக்சக்கள் மீதான விசாரணைகளை ரணில் முன்னெடுப்பரா, இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுனன் மகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா இப்படி ஓராயிரம் கேள்விகள் அவர் முன்னே உள்ளன.
இப்போது நடந்துள்ளது என்னவென்றால் 72 வயதான ஜனாதிபதி, 76 வயதான பிரதமர் பதவி விலகியுள்ளதை அடுத்து 73 வயதான ஒருவரைப் பிரதமராக நியமித்துள்ளது மட்டுமே.
2018 இல் மக்களின் விருப்பத்திற்கு எதிராக ரணில் விக்ரமசிங பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார், ஆனால் 2022 இல் அதே ரணில் விக்ரமசிங்க மக்களின் விருப்பத்திற்கு எதிரான பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். காலம் கொடியது!