ஒன்ராறியோ மாநிலம் ஸ்காபுரோ நகரில் எழுந்தருளி எல்லா ஜீவராசிகளுக்கும் அன்னையாக அருள்பாலித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு ஆதிபராசக்தி திருத்தலத்திற்குக் கடந்த செவ்வாய்க்கிழமை (10.05.2022) காலை அம்பாள் தரிசனம் காண எனக்கொரு அழைப்புக் கிடைத்தது. எந்தவொரு முன்கூட்டிய எண்ணமோ, விருப்போ இன்றி அருமை நண்பர் உதயன் பத்திரிகை ஆசிரியர் திரு.லோகேந்திரலிங்கம் என்னைக் கூட்டிச்சென்றார்.
“வாருங்கள். ஆதிபராசக்தி கோயிலுக்குப் போவோம். இன்று செவ்வாய். அம்பாளுக்கு விசேட நாள்”.
நானும் இதுவரை இந்த ஆலயத்துக்குச் செல்லாத படியால் மிகுந்த மகிழ்ச்சியுடன் அவருடன் புறப்பட்டேன்.
அம்பாள் என்றால் சக்தி வடிவம் தானே! மனதில் மகாகவி பாரதியின் வரிகள் உற்சாகம் தந்தன.
“ஓம்சக்தி சக்தி சக்தியென்று சொல்லு – கெட்ட
சஞ்சலங்கள் யாவினையும் கொல்லு;
சக்தி சக்தியென்று சொல்லி – அவள்
சந்நிதியிலே தொழுது நில்லு.
ஓம்சக்தி மிசை பாடல் பல பாடு – ஓம்
சக்தி சக்தி என்று தாளம் போடு
சக்தி தருஞ் செய்கை நிலந்தனிலே – சிவ
சக்தி வெறி கொண்டு களித்தாடு!”
என் மனம் ஆனந்தக் கூத்தாடியது!
மே ஆறாம் நாள் (06.05.2022) வெள்ளி அன்று தான் ஆலய புனாரவர்த்தன ஜீர்ணோத்தாரண ஸ்வர்ண பந்தன அஷட பந்தன கும்பாபிஷேகம் நடைபெற்றதாக அறிந்தேன்.
ஆக, அம்பாள் முகத்தில் அளப்பரிய ஆனந்தம். அருள் நிறை தேஜஸ்.பிரகாசமாகயிருந்தாள் பராசக்தி.
அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகி அல்லவா! ஆலய பிரதம சிவாச்சாரியாருக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தார் நண்பர் லோகன்.
ஐயா என்னைக் கண்டதும் ‘ இவர் எனக்கு முன்பே தெரிந்தவர்’ என்றார் புன்முறுவலுடன்.
“உங்களுக்குத் தெரியுமோ! இந்த ஆலயத்தில் அமைந்துள்ள எல்லா விக்கிரங்களும் பூரணமாக கருங்கற்களால் வடிக்கப்பட்ட தெய்வாம்சம் பொருந்திய விக்கிரங்கள் என்பது சிறப்பிற்குரியது. மேலும், வட அமெரிக்காவில் எந்தவொரு ஆலயத்திலும் இல்லாத வகையில் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள தெய்வாம்சம் பொருந்திய விக்கிரங்களை தரிசித்த நாம் பெரும் பேறு பெற்றது போன்று உணர்ந்தோம் என்றே சொல்ல வேண்டும்.
“அன்னை பராசக்தியின் கர்பக்கிருக அடித்தளத்தில் ‘சுவர்ணபந்’ என்று சொல்லக் கூடிய நவபாஷாணங்கள் மேல் அன்னை எழுந்தருளியிருக்கிறாள்.
இதில் விசேடம் என்னவென்றால், அன்னையின் பாதாரவிந்தங்களிலுரந்து மேலெழும் அருள் சக்தி ஐம்பெரும் பூதங்களின் செயற்பாடுகளினால் விரயமாகாமல், அடியார்களுக்கே போய் அருள் பாலிக்கும் சக்தியாக விளங்குகிறது.
அவ்வளவு பெரும் சக்தி வாய்ந்தவள். அன்னை பராசக்தி இங்கு அருள்மிகு ஆதிபராசக்தியாகக் கோயில் கொண்டிருப்பது நாம் செய்த புண்ணியமேயாகும்.
கனடியத்தாயையும் அவளது குடிமக்களாகிய நம்மையும் அன்னை ஆதிபராசக்தி காத்து வருகிறாள் என்பது சத்திய வாக்காகும்.
– வீணைமைந்தன்