பல வருடங்களுக்கு முன்னர் நான் ஒரு கவிதையை சந்தித்தேன். அப்பொழுது மிகவும் பிரபலமானது.
இலஞ்சம்
அந்தப் பதவிக்கு
அவர்கள் கேட்டிருந்த
ஆகக் குறைவான உயரம் எனக்கில்லை.
வந்திருந்த நண்பன் வழிசொல்ல
ஐயாயிரம் ரூபாய் பணக்கட்டு
ஒன்றின்மேல்
ஏறி நின்ற வண்ணம்
என்னை அளக்க விட்டேன்
உயரம் அப்போது சரியாக இருந்தது.
அதன் பின்னர்தான் கவிதை எழுதியவரை சந்தித்தேன். மலையகத்தில் பிறந்த அவருடைய புனைபெயர் ’மலையன்பன்’ என்றார். அவர் வேறு யாருமல்லல. கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர் பத்திரிகையாளரான ஆர்.என். லோகேந்திரலிங்கம் அவர்கள்தான்.
இவர் கனடாவில் 25 வருடங்களாக தொடர்ந்து ’உதயன்’ பத்திரிகையை நடத்தி வருகிறார். வாரம் ஒன்று என வருடத்தில் 52 இதழ்கள், அப்படியே தொடர்ந்து 25 வருடங்கள். மிகப் பெரிய சாதனை. பத்திரிகை மட்டும் நடத்தாமல் சிறுகதை போட்டிகள் வைத்து பல சிறுகதையாளர்களையும், நாவலாசிரியர்களையும் உருவாக்கிய பெருமை இவரையே சேரும். அத்துடன் இலங்கையிலிருந்தும், ,இந்தியாவிலிருந்தும் எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், அறிஞர்கள் ஆகியோரை வரவழைத்து கனடாவின் அறிவியக்கம் வளர பங்களித்தவர்.
இவரை சந்திக்கும்போது பத்திரிகை துறையில் ஏற்படும் சிக்கல்கள் பற்றி பேசுவார். அவருடைய வெற்றிக்கு காரணம் ’தடைகள் என்பவை மாறுவேடத்தில் வரும் வாய்ப்புகள்’ என்று உணர்ந்து தக்க நடவடிக்கை எடுத்து அவற்றை தாண்டிச் செல்லும் இவரது மதிநுட்பம்தான்.
திரு லோகேந்திரலிங்கம் அவர்கள் முன்னெடுக்கும் ’உதயன் இலங்கைச் சிறப்பிதழுக்கு’ என் மனமார்ந்த வாழ்த்துகள்.
அ.முத்துலிங்கம்
எழுத்தாளார், கனடா