யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்
ரனில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்ட பொழுது அவர் ஆளுங்கட்சியின் பிரதமராகவும் இருக்கவில்லை, எதிர்க்கட்சிகளின் பிரதமராகவும் இருக்கவில்லை. ஜனநாயக நாடாளுமன்ற வழமைகளின்படி ஆளும் கட்சிக்குள் அதிகம் ஆதரவைப்பெற்றவர் பிரதமராக வரலாம். ஆனால் ரணில் விக்ரமசிங்க ஆளுங்கட்சி உறுப்பினர் அல்ல. அதே சமயம் அவர் எதிர்க்கட்சியும் அல்ல. எதிர்க்கட்சியாக இருப்பது அவருடைய கட்சிக்குள் முன்பு இருந்து அவரை எதிர்த்து வெளியேறிச் சென்ற அணியாகும். எனவே அவர் எதிர்க்கட்சியின் பிரதமரும் அல்ல. அவருடைய கட்சிக்கு நாடாளுமன்றத்தில் ஒரே ஒரு ஆசனம் தான் உண்டு. அதுவும் தேசியப்பட்டியல் ஆசனம். உலகிலேயே ஒரே ஒரு ஆசனத்தை கொண்ட கட்சியின் தலைவர் பிரதமராக நியமிக்கப்பட்டமை என்பது இலங்கைத்தீவில் தான் நடந்திருக்கிறது. கடந்த சில வாரங்களாக இலங்கைத்தீவில் நடந்துவரும் நூதனமான காட்சிகளில் அதுவும் ஒன்று.
அதனால் தான், அவர் யாருடைய பிரதமர் என்ற கேள்வி. எழுந்தது. அவர் கோத்தபாயவின் பிரதமரா ? அல்லது ஆளுங்கட்சியின் பிரதமரா ? அல்லது எதிர்க்கட்சிகளின் பிரதமரா? ஒரு சிலர் அவரை அமெரிக்காவின் பிரதமர் என்று சொன்னார்கள். மேற்கத்திய நிதி முகவர் அமைப்புக்களின் பிரதமர் என்று சொன்னார்கள். காலி முகத்திடலில் போராடும் புதிய தலைமுறை அவரை டீல்களின் பிரதமர் என்று சொன்னது. முன்னிலை சோசலிசக்கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் அவரை கிழட்டுக்கோழி என்று சொன்னார்.
ஆனால் ஒரே ஒரு ஆளாக உள்ளே வந்தவர் இப்பொழுது பெரும்பாலானவர்களின் தவிர்க்கப்பட முடியாத தெரிவாக மாறியுள்ளார். நாட்டின் நிதிநெருக்கடியும் அதன் விளைவாக ஏற்பட்ட அரசியல் நெருக்கடியும் அவரை தவிர்க்க முடியாதவராக மாற்றி உள்ளனவா?
அவர் மந்திரவாதி அல்ல. மந்திர தந்திரங்களில் நாட்டமுடையவரும் அல்ல. ராஜபக்ச குடும்பத்தை போல ஞானாக்காக்களின் பின் செய்பவரோ, அல்லது மந்திரித் தாயத்துக்களை கைகளில் அணிந்திருப்பவரோ வைத்திருப்பவரோ அல்ல. அவர் மந்திரத்தைவிடவும் தந்திரத்தை நம்புபவர்.
அவர் பிரதமராக தெரிவு செய்யப்பட்டதும் பங்குச்சந்தை மாற்றத்தை காட்டத் தொடங்கியது. டொலரின் பெறுமதி குறைந்தது. மேற்குநாடுகள் உதவிகளை அள்ளி வழங்கின. இதனால் ஒரு திடீர் எதிர்பார்ப்பு அவரை நோக்கி உருவாகியது. அதன் விளைவாக உள்ளூர் சந்தைகளில் பதுக்கப்பட்டிருந்த பொருட்கள் வெளிவந்தன. மூடப்பட்டிருந்த எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் வெளிப்படத் தொடங்கியது. முகநூலில் ஒரு நண்பர் எழுதியது போல “எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் ஊற்றெடுக்க தொடங்கியது”. மூவாயிரம் ரூபாய் வரை விற்கப்பட்ட சீமெந்து திடீரென்று 1200ரூபாய்க்கு இறங்கியது. இவ்வாறு பதுக்கப்பட்ட பொருட்கள் வெளிப்படத் தொடங்கியதும் அவர் மீதான நம்பிக்கை மேலும் அதிகரித்தது.
நாடாளுமன்றத்தில் அவர் தெரிவு செய்யப்பட்ட விதத்தை, அவருடைய தெரிவை எதிர்த்தகட்சிகள் பெரும்பாலானவை படிப்படியாக அவரை எதிர்ப்பதில்லை என்ற முடிவை எடுக்கத்தொடங்கின. ஏனென்றால் ரணிலுக்கு எதிராக வாக்களித்தால் மக்களின் எதிர்ப்பை வாங்கிக்கட்ட வேண்டியிருக்கும் என்ற பயம் அவர்களுக்கு. கடந்த 9 ஆம் திகதியும் 10 ஆம் திகதியும் மக்களின் கோபம் எப்படியிருக்கும் என்பதை அனுபவித்தவர்கள் அவர்கள். இலங்கைத்தீவின் நவீன வரலாற்றில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேசசபைத் தலைவரும் மக்களால் அடித்துக்கொல்லப்படும் அளவுக்கு நிலைமைகள் பயங்கரமாக இருந்த நாட்கள் அவை. எனவே முதலில் பத்திரமாக சொந்த தேர்தல் தொகுதிக்குப் போக வேண்டுமென்றால் இப்போதைக்கு ரணிலை எதிர்ப்பதில்லை என்று பெரும்பாலான சிங்கள கட்சிகள் முடிவெடுத்தன. எனினும் பிரதி சபாநாயகர் தெரிவில் ரணிலுக்குள்ளவரையறைகளை ஆளுங்கட்சி உணர்த்தியிருக்கிறது.
ரணில் பிரதமராக நியமிக்கப்பட்டதை பேராயர் மல்கம் ரஞ்சித் ஏற்றுக்கொள்ளவில்லை. மகாநாயக்கர்களின் கருத்தும் அதுதான் என்று அவர் சொன்னார். சகல மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சகல மக்களுக்கும் நம்பிக்கை ஊட்டக்கூடிய ஒருவரை பிரதமராக நியமிக்க வேண்டும் என்று பேராயர் போர்க்கொடி எழுப்பினார். அப்படி ஒருவரை நாடாளுமன்றத்தில் கண்டுபிடிப்பது கடினம் என்று பேராயருக்கும் தெரியும். தவிர நாடாளுமன்றத்துக்கு வெளியே அப்படிப்பட்ட ஒருவரை தேட பேராயராலும் முடியவில்லை. மகாநாயக்கர்களாலும் முடியவில்லை. இந்த வெற்றிடத்தை தந்திரமாகப் பயன்படுத்தி ரணிலை கோத்தபாய தெரிவுசெய்தார்.
யாப்பின் பிரகாரம் தனக்குள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி கோத்தாபய ரணிலைத் தெரிவு செய்தார். அதாவது யாப்பின்படி ரணில் தெரிவு செய்யப்பட்டார். இந்த இடத்தில் ஒரு முக்கியமான விடயத்தை நாம் கவனிக்கவேண்டும். கோட்டாவை வீட்டுக்குப்போ என்று கேட்டு ஒரு புதிய தலைமுறை போராடுகிறது. ஆனால் யாப்பின்படி அவரை வெளியே அனுப்ப முடியாதுள்ளது. யாப்புக்கு வெளியே சென்றால் அது முடியும். அதாவது யாப்பை மீறும் துணிச்சல் தேவை. தெருக்களில் மற்றும் காலிமுகத்திடலில் போராடிக்கொண்டிருக்கும் மக்கள் அந்தத் துணிச்சலை வழங்கினார்கள். ஆனால் அவர்களுக்கு தலைமை தாங்க எந்த ஒரு சிங்களக் கட்சியாலும் முடியவில்லை. சஜித்பிரேமதாசவும் ஜேவிபியும் போராடும் தரப்புகளின் கோஷங்களை ஏற்றுக்கொள்வதன் மூலம் தாங்கள் அவர்களின் பக்கம் என்று காட்டினார்கள். ஆனால் போராடும் மக்களுக்கு தலைமை தாங்க அவர்களால் முடியவில்லை. இதுதான் அடிப்படைப் பிரச்சினை. யாப்பை மீறிச் செல்ல துணிச்சலற்ற எதிர்கட்சிகளின் மத்தியில் யாப்பின் பிரகாரம் ஜனாதிபதி ரணிலைத் தெரிவு செய்தார்.
இதை இன்னும் சரியான வார்த்தைகளில் சொன்னால் காலி முகத்திடலில் போராடும் புதிய தலைமுறையும் தெருக்களில் இறங்கி அரசியல்வாதிகளுக்கு பாடம் படிப்பித்த மக்களும், எதிர்க்கட்சிகளும் போராடியதால் கிடைத்தகனிகளை ரணில் விக்கிரமசிங்க சுவீகரித்துவிட்டார் என்றும் சொல்லலாம்.
மிகப் பலவீனமான, உலகின் மிக நூதனமான ஒரு பிரதமராக அவர் தொடக்கத்தில் தோன்றினார். ஆனால் படிப்படியாக தன்னை பலப்படுத்திவருகிறார். அவர் கடைசியாக இரண்டு தடவைகள் பதவியில் இருந்த போதும் கூட நிலைமை அப்படித்தான் இருந்தது. அவர் உள்நாட்டில் மிகப்பலவீனமான தலைவராகவும் வெளியுலகில் மிகப்பலமான ஒரு தலைவராகவும் காணப்பட்டார்.
கடந்த செவ்வாய்க்கிழமை அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை ஒப்பீட்டளவில் வெளிப்படையானது. அவர் மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்க தயார் இல்லை என்று தெரிகிறது. “நான் மக்களுக்கு விடயங்களை மறைத்து பொய் சொல்வதற்கு எந்தவகையிலும் விரும்பவில்லை. பயங்கரமாக இருந்தாலும் அசிங்கமாக இருந்தாலும் இதுதான் உண்மையான நிலைமை. குறுகிய காலத்திற்கு நாம் கடந்த காலத்தைவிட மிகவும் கஸ்டமான காலத்திற்கு முகம் கொடுக்க போகின்றோம். இந்த நேரத்தில் நமக்கு கவலைப்பட மட்டுமே முடியும்”…. என்று அவர் கூறுகிறார்.
இந்தச் சோதனையில் அவர் வெற்றிபெற்றால் அவர் ஒரே கல்லில் மூன்று கனிகளை வீழ்த்துவார். முதலாவது தன் வாழ்வின் இறுதிக்கட்டத்தில் – அதாவது அவரைப் பொறுத்தவரை இது கடைசி ஓவர் – இந்த கடைசி ஓவரில் ஆவது அவர் வெற்றி பெற்ற ஒரு தலைவராக ஓய்வு பெறலாம். மிக நெருக்கடியான ஒருகால கட்டத்தில் நாட்டை மீட்டெடுத்தவர் என்ற புகழுடன் அவர் ஓய்வு பெறலாம்.
இரண்டாவது தனது கட்சியை பலப்படுத்தலாம். மூன்றாவதுதனது உட்கட்சி எதிரிகளை தோற்கடிக்கலாம். அதே சமயம் அவரைப் பிரதமராக நியமித்ததன் மூலம் கோத்தாபய தன்னைத் தற்காத்துக் கொண்டுவிட்டார் என்று கூறலாம். இந்த இடத்தில் ரணிலை நியமித்ததன் மூலம் முதலாவதாக கோத்தபாய தன்னைத்தற் காத்துக்கொண்டார். இரண்டாவதாக எனைய ராஜபக்சக்களையும் பாதுகாத்துக்கொண்டார்.
மூன்றாவதாக மக்கள் எதிர்ப்பை ஒப்பீட்டளவில் தணித்திருக்கிறார். காலி முகத்திடலில் போராடும் புதிய தலைமுறை அவரை வீட்டுக்குபோ என்று கேட்கிறது. ஆனால் இன்று வரை அவர் வீட்டுக்குபோகவில்லை. அதே சமயம் ரணிலை நியமித்தன் மூலம் அவர் நாட்டின் கவனத்தையும் வெளிஉலகின் கவனத்தையும் ரணிலின் மீது குவியச் செய்துவிட்டார். ரணிலின் மறைவில் அவர் தன்னையும் தன் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொண்டார்.
இப்படிப்பார்த்தால் ரணிலை நியமித்ததன் மூலம் கோத்தபாயவும் ஒரு கட்டம் வரை வெற்றி பெற்றிருக்கிறார். ரணிலும் வெற்றி பெற்றிருக்கிறார். அதாவது சிங்களத் தலைவர்கள் ஏதோ ஒருவிதத்தில் தங்களையும் யாப்பையும் சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பையும் பாதுகாத்திருக்கிறார்கள் என்று பொருள்.
ரணிலை விட்டால் வேறுயாரும் இல்லை என்ற ஒரு வெற்றிடம் ஏற்படுவதற்கு எதிர்க்கட்சிகளும் காரணம். பேராயர் மல்கம் ரஞ்சித் மகாநாயக்கர் போன்ற அனைத்து மதத்தலைவர்களுமே காரணம். அனைத்துத்தரப்பாலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற, அனைத்து தரப்புக்கும் நம்பிக்கை ஊட்டக்கூடிய ஜனவசியம் மிக்க ஒரு தலைவரை உருவாக்க முடியாத மதத்தலைவர்கள் தமது தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும். குறிப்பாக பௌத்த மகாசங்கம் இலங்கைத் தீவின் அரசமதம். பேராயர் மல்கம் ரஞ்சித் ஈஸ்டர் குண்டுவெடிப்பு வரை தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்டது பங்களை குறித்து அதிகம் வாய்திறக்காதவர். இது தான் பிரச்சினை. மதத்தலைவர்கள் நீதியின் மீது பசிதாகம் உடையவர்களாக இல்லாத ஒரு சமூகத்தில் இப்படித்தான் தலைமைத்துவ வெற்றிடங்கள் ஏற்படும்.
ரணில் விக்கிரமசிங்க தோல்வியடைந்தால் இலங்கையும் தோல்வியடையும்- இந்ததோல்வி அடுத்த சில ஆண்டுகளிற்கான தோல்வியாகயிராது மாறாக ஒருதேசமாக இலங்கையின் இருத்தலிற்கான தோல்வியாக இது காணப்படும்” என இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் கலாநிதி டபில்.யூ. ஏவி ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களைப் பொறுத்தவரை இலங்கைத்தீவு எப்பொழுதோ ஒருதேசமாக இருப்பதில் தோல்வியடைந்துவிட்டது. அதை ஒருதேசமாக கட்டி எழுப்புவது என்பது சிங்கள பௌத்த தேசமாக கட்டி எழுப்புவது அல்ல.
தமிழ் மக்களை ஒருதேசமாக ஏற்றுக்கொள்வதுதான். பல்லினத் தன்மைமிக்க; பல்சமயப் பண்புமிக்க; பல்மொழிபண்புமிக்க; ஒருதேசமாகக இச்சிறிய தீவைக் கட்டியெழுப்புவது தான். தனது கடைசி ஓவரில் ஆவது ரணில் அதைச் செய்வாரா? அல்லது இலங்கைத்தீவு ஒருதேசமாக இருப்பதில் தோல்வியடையுமா?