இலங்கை நாடாளுமன்றம் இன்று செவ்வாய்கிழமை கூடியுள்ள நிலையில், 1980களின் பிற்பகுதியில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவினால் குற்றஞ்சாட்டப்பட்ட அனைத்து குற்றவாளிகளின் பெயர்களையும் பகிரங்கப்படுத்துமாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
“சுமார் 700 பேர் காணாமல் ஆக்கப்பட்ட மாத்தளை மாவட்டத்திற்கு பொறுப்பாளராக இருந்த ஜனாதிபதி கோட்டாபயவின் பெயர் குறிப்பிடப்பட்ட பட்டியலையும் உள்ளடக்க வேண்டும்.”
1988-89 சிங்கள இளைஞர்களின் இரண்டாவது எழுச்சியின் அரச அடக்குமுறையின் போது மாத்தளை மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட, கொலை செய்யப்பட்ட மற்றும் 2012ஆம் ஆம் ஆம் ஆண்டு மாத்தளை வைத்தியசாலை வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய புதைகுழிகள் தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் என சந்தேகிக்கப்படும் தலைவர்கள் பற்றிய அறிக்கையை, இலங்கையின் உண்மை மற்றும் நீதி செயற்றிட்டம் (ITJP) மற்றும் இலங்கை ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் (JDS)அமைப்பு இணைந்து வெளியிடப்பட்டுள்ளன.
இதுவரை வெளியிடப்படாத அரச ஆவணங்கள் இதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.
மக்கள் விடுதலை முன்னணியின் கிளர்ச்சியின் போது காணாமல் ஆக்கப்படுவதற்கு எதிரான முன்னோடித் தலைவராக மஹிந்த ராஜபக்ச இருந்த காலத்தில் இடம்பெற்ற மனித குலத்திற்கு எதிரான பாரதூரமான குற்றச் செயல்கள் தொடர்பில் இவ்வாறானதொரு அறிக்கை 33 வருடங்களின் பின்னர் வெளியாகியிருப்பது இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கப் போராடும் அனைவருக்கும் தைரியத்தை அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“கோட்டாபய ராஜபக்ச: 1989 ஆம் ஆண்டு இடம்பெற்ற பெரும் அட்டூழியங்களில் இலங்கை ஜனாதிபதியின் வகிபாகம்” என்ற தலைப்பில், காணாமல் ஆக்கப்பட்டும், விசாரணையின்றி படுகொலை செய்யப்பட்டும், சமாதியின்றி புதைக்கப்பட்டும், டயர்கள் போட்டு எரிக்கப்பட்டும் கொல்லப்பட்ட தமது உறவினர்களுக்கு நீதி கோரி இரவு பகலாகப் போராடும் அனைவரும், எதிர்காலத்தில் தமது பிள்ளைகளுக்கு இதுபோன்ற அவலம் இடம்பெறாதிருக்க தடுக்க நடவடிக்கை எடுக்கும் பெற்றோரும் இதனைப் பயன்படுத்த வேண்டும்.” என காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின் ஒன்றியத் தலைவர் பிரிட்டோ பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
“அரசாங்கத்தால் தொகுக்கப்பட்ட இந்த பட்டியல்கள் பல தசாப்தங்களாக மறைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பொலிஸ் அதிகாரிகள், இராணுவத்தினர் மற்றும் அரசியல்வாதிகளின் பெயர்கள் உள்ளடங்கும் என்பது எமது புரிதல். அவர்களில் சிலர் இன்று சக்தி வாய்ந்தவர்கள். இந்த ஆணைக்குழுக்களில் காணாமல் போன பிள்ளைகளின் உறவினர்கள் பல்லாயிரக்- கணக்கானோர் சாட்சியமளித்துள்ளனர். சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டவர்கள், யார் மீது வழக்குத் தொடரப்பட்டது, எந்தெந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன என்பதை அறிய அவர்களுக்கு உரிமை உண்டு. இந்த நாட்டில் மூன்று காலகட்டங்களில் பாரிய குற்றச்செயல்கள் இடம்பெற்றுள்ள போதிலும் அதற்கு எவரும் பொறுப்புக்கூறவில்லை. இது மீண்டும் நிகழ்வதை தடுக்க உதவாது. வரலாற்றில் எப்போதும் இல்லாத நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நம் நாட்டு மக்கள் தங்கள் ஆட்சியாளர்கள் யார் என்பதை அடையாளம் காண வேண்டிய நேரம் வந்துவிட்டது.”
தற்போதைய ஜனாதிபதி நந்தசேன கோட்டாபய ராஜபக்ச மாத்தளை குற்றச் செயல்களுக்கு முதன்மைப் பொறுப்பான ‘இராணுவ அதிகாரிகளின் பிரதானி’ என பெயரிடப்பட்டுள்ளார். தற்போதும் ஜனாதிபதி கோட்டாபய ராஜக்சவின் நம்பிக்கைக்குரியவராக இருக்கும் தற்போதைய இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா மற்றும் உயர் இராணுவ அதிகாரிகளான ஜகத் டயஸ் மற்றும் சுமேத பெரேரா ஆகியோர் அறிக்கையின் விசாரணை தொடர்பான காலப்பகுதியில் ஜனாதிபதியின் கீழ் மாத்தளை மாவட்டத்தில் கஜபா படைப்பிரிவு சேவையாற்றியதாக அறிக்கை வெளிப்படுத்துகிறது.
காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரகாரம் மாத்தளை மாவட்டத்தில் மாத்திரம் பயங்கரவாத காலத்தில் 1,042 பேர் காணாமல் போயுள்ளனர்.
‘நான் சிறந்ததைச் செய்தேன்’ என எப்போதும் தம்பட்டம் அடித்துக் கொள்ளும், அப்போதைய , மாத்தளை மாவட்டத்திற்குப் பொறுப்பான இராணுவ அதிகாரி கேணல் கோட்டாபய ராஜபக்சவின் கீழ், 1980களின் பிற்பகுதி வரையிலான ஒன்பது மாதங்களில் 700க்கும் மேற்பட்டோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய ITJP மற்றும் JDS ஆகியன தெரிவிக்கின்றன. 1989 ஒக்டோபர் 7ஆம் திகதி மாத்திரம், சுமார் 60 பேர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
ஆணைக்குழுவின் அறிக்கையை மேற்கோள் காட்டி ITJP/JDS வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரே நாளில் பெல்வெஹெர கிராமத்தில் 22 பேர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டனர். அவர்களில் 13, 15 மற்றும் 17 வயதுடைய மூன்று சிறுவர்களும் அடங்குவர்.
2012ஆம் ஆண்டு மாத்தளை வைத்தியசாலை வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய புதைகுழியின் எச்சங்கள் தொடர்பில் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட கார்பன் பரிசோதனையின் பலனாக அரசாங்கம் சமர்ப்பித்த அறிக்கையில் அவை 1950ஆம் ஆண்டுக்கு முற்பட்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கில் பல்லாயிரக்கணக்கான மக்களைக் காணாமல் ஆக்கி போரை நடத்திய இராணுவத்தை வழிநடத்திய அரசாங்கத்தில் கோட்டாபய ராஜபக்ச பலம் வாய்ந்த பாதுகாப்புச் செயலாளராக பதவி வகிக்கும் போது வித்தியாசமான முடிவை எதிர்பார்ப்பது கடினம். எனினும் இந்த கருத்தை மறுக்கும் இலங்கை தொல்லியல் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இருவர், மாத்தளை வெகுஜன புதைகுழியில் 1986 மற்றும் 1990ற்கு இடையில் புதைக்கப்பட்டவர்களின் எச்சங்கள் இருந்ததாக தெரிவித்துள்ளனர்.
“மஹிந்த ராஜபக்சவின் வார்த்தைகளில் சொல்வதானால், 60,000 பேர் காணாமற்போன காலத்தில் இருந்த அரசாங்கத்தின் அமைச்சரான ரணில் விக்ரமசிங்க இன்று மீண்டும் பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மாத்தளையில் சிங்கள இளைஞர், யுவதிகள் மற்றும் சிறுவர்களுக்கு எதிராக அட்டூழியங்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் மாத்தளையின் சர்வ வல்லமை படைத்த இராணுவ ஆட்சியாளராக நியமிக்கப்பட்டா நந்தசேன கோட்டாபய ராஜபக்சவினால் அவர் நியமிக்கப்பட்டுள்ளார். நிதி ரீதியாகவும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில், இவர்கள் இருவரையும் நீதிக்கு முன் நிறுத்த போராடும் அனைவருக்கும் ITJP/JDS அறிக்கை போதுமான ஆதாரங்களை வழங்குகிறது.” என பிரிட்டோ பெர்னாண்டோ தெரிவித்தார்.