இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து அந்நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. வேலையில்லா திண்டாட்டம், பசி, விலை உயர்வு, தட்டுப்பாடு, பற்றாக்குறை, மின்வெட்டு காரணமாக இலங்கையில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில் இலங்கை அரசின் மத்திய வங்கியின் கவர்னர் கலாநிதி நந்தலால் வீரசங்க இன்று பகிரங்கமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில், ”இலங்கையில் இந்த நிதியாண்டு பொருளாதார வளர்ச்சி வீதமான மிகவும் மந்தகரமான நிலையிலேயே காணப்படும். தற்போது 30 சதவீதமாக உள்ள பணவீக்கம் வருகிற சில மாதங்களில் 40 சதவீதமாக அதிகரிக்கும். எங்களின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. கடன் மறுசீரமைப்பு குறித்த நடைமுறைகள் பயன்பாட்டில் உள்ளவரை, எங்களால் கடன்களை திருப்பிச் செலுத்த முடியாத நிலை உள்ளது” என்று தெரிவித்தார்.