கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஆரம்பகால, ஆயுட்கால அங்கத்தவரும், முன்னாள் தலைவரும், தற்போதைய செயலாளருமான நண்பர் ஆர். என். லோகேந்திரலிங்கம் அவர்களின் 50 ஆண்டு கால கலை, இலக்கிய, ஊடக, சமூக சேவையைப் பாராட்டிக் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் சார்பாகவும், எனது குடும்பத்தின் சார்பாகவும் முதற்கண் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
புலம்பெயர்ந்த மண்ணில் ஒரு வாரப்பத்திரிகையை 26 ஆண்டுகள் தொடர்ந்து நடத்துவது என்பது இலகுவான காரியமல்ல, எத்தனையோ விதமான சவால்களை எதிர்கொண்டு ஊடகத்துறையில் தொடர்ந்தும் பயணிப்பது என்பது மிகவும் கடினமானது என்பதை நான் அறிவேன். தொடக்க காலத்தில் பத்திரிகையை அச்சேற்றுவதற்கான கணனி மென்பொருட்கள் போதிய அளவு இருக்கவில்லை. எனவே ஒரு செய்தியை முதலில் ரைப் செய்து அப்புறம் அதை வெட்டி ஒட்டித்தான் பிரதிகள் எடுக்க வேண்டியிருந்தது. ஆனாலும் வாராவாரம் தவறாமல் பத்திரிகை இன்றுவரை வெளிவந்து கொண்டே இருக்கிறது.
கனடாவுக்குப் புலம் பெயர்ந்த புதிதில் எனது சிறுகதைகள், தொடர் நாவல்கள், பயணக் கட்டுரைகள் என்று கனடிய வாசகர்களை எனக்குத் தேடித்தந்தது உதயன் பத்திரிகைதான். சிறுகதைப் போட்டியில் அறிமுகமே இல்லாத எனக்குத் தங்கப் பதக்கம் தந்து என்னைக் கௌரவித்த பெருமையும், அதன் பின் நடந்த உதயன் சிறுகதைப் போட்டிகளுக்கு என்னை நடுவராகத் தெரிவு செய்த பெருமையும் உதயன் பத்திரிகை ஆசிரியரான அவருக்கே உரியது. 1000 மாவது இதழில் ‘குமுதினி’ என்ற எனது குறுநாவலையும் வெளியிட்டு என்னைக் கௌரவப்படுத்தி இருந்தார்.
சமீபத்தில் இலங்கையில் இருந்து வெளிவரும் ஞானம் இதழ் நடத்திய சர்வதேச இலக்கியப் போட்டியில் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தைச் சேர்ந்த உதயன் ஆசிரியர் ஆர்.என்.லோகேந்திரலிங்கம்(எதுவரை), சிந்தனைப்பூக்கள் எஸ். பத்மநாதன்(சிந்தனைப்பூக்கள்), எழுத்தாளர் குரு அரவிந்தன் (அம்மாவின்பிள்ளைகள்) ஆகிய மூவருக்கும் சிறப்புப் பரிசுகள் கிடைத்திருந்தன. சர்வதேசப் போட்டியில் எமது இணையத்தைச் சேர்ந்த மூவர் பரிசு பெற்றதை ஒரு சாதனையாகவே கருதுகின்றேன்.
சிறந்த கவிஞரும், எழுத்தாளருமான நண்பர் லோகேந்திரலிங்கம், மலையன்பன் என்ற பெயரிலும் எழுதி வருகின்றார். விழாக் காணும் இச்சந்தர்ப்பத்தில் அவரது கலை, இலக்கிய, ஊடக, சமூக சேவைகளைப் பாரட்டி, எனது குடும்பத்தின் சார்பாகவும், கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் சார்பாகவும் அவரையும், அவரது குடும்பத்தினரையும் வாழ்த்துவதில் பெருமையடைகின்றேன். வாழ்க வளமுடன்!
குரு அரவிந்தன்
தலைவர், கனடா தமிழ் எழுத்தாளர் இணையம்.