நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நிறுவப்பட்ட பல வருடங்களுக்குப் பின்னர் இன்று தமிழ் நாட்டில் முதற் தடவையாக நடைபெறும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்விற்கு உலகெங்குமிருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன என சென்னையிலிருந்து கனடா உதயன் செய்தியாளர் பிரகாஸ் அறிவித்துள்ளார்.
இன்று சென்னை மாநகரில் உள்ள தி. நகரில் Hotel Benzz Park – Hall Volvo மண்டபத்தில் நடைபெறவுள்ள தொடக்க நிகழ்வில் தமிழ்நாடு மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் வாழ்த்துரை வழங்குவார். அத்துடன் தலைமை உரையை இணையவழியாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் ஆற்றுவார்.
தொடர்ந்து மலேசியா பினாங்கு மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி சிறப்புரை வழங்குவார்.
தொடர்ந்து ‘ஈழு விடுதலைப் போராட்டத்தில் தமிழ் நாட்டின் பங்கு’ என்ற தலைப்பில் கருத்தரங்கும் ‘ ‘இலங்கையின் பொருளாதார நெருக்கடியும் ஈழத்தமிழர்களின் எதிர்காலமும்’என்ற தலைப்பில் உரையரங்கமும் இடம்பெறவுள்ளது.
தொடர்ந்து இரண்டு நாட்கள் பல்வேறு அமர்வுகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்படி விசேட அரசவை அமர்வில் கலந்து கொள்வதற்காக உலகின் பல நாடுகளிலிருந்தும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் பலர் சென்னை சென்றுள்ளனர்.
கனடாவிலிருந்தும் நான்கு பேராளர்கள் முன்னாள் அமைச்சர் நிமால் விநாயகமூர்த்தி அவர்கள் தலைமையில் அங்கு சென்றுள்ளனர் என்பது இங்கு குறிப்பி;டத்தக்கது.