22-05-2022
மன்னார் நிருபர்
மன்னாரில் எரிவாயு விநியோகிக்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து மன்னார் வைத்தியசாலை பிரதான வீதியில் உள்ள லிற்றோ எரிவாயு முகவர் நிலையத்திற்கு முன்பாக பொது மக்கள் ஒன்று கூடியதால் குறித்த பகுதியில் முரண்பாடு தோற்றம் பெற்றதுடன் போக்குவரத்து தடங்களும் ஏற்பட்டது.
இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(22) ஒரு தொகுதி எரிவாயு சிலிண்டர்கள் மன்னார் லிற்றோ எரிவாயு முகவர்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக வெளிவந்த தகவலை தொடர்ந்து மக்கள் நீண்ட வரிசையில் எரிவாயு சிலிண்டர்களுடன் காத்திருந்த போதிலும் எரிவாயு சிலிண்டர்கள் முகவர் நிலையங்களுக்கு கிடைக்கப்பெறவில்லை.
இந்த நிலையில் வரிசையில் நின்ற மக்கள் மத்தியில் வாய்த்தர்க்கம் மற்றும் முரண்பாடு தோற்றம் பெற்ற நிலையில் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் குறித்த பகுதிக்கு நேரடியாக விஜயம் மேற்கொண்ட மன்னார் பிரதேச செயலாளர் ம.பிரதீப் பொது மக்களிடம் கலந்துரையாடி பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்ததுடன் எரிவாயு விற்பனையின் போது வீண் முரண்பாடு தோற்றம் பெறாத வகையில் எரிவாயு சிலிண்டர்கள் முகவர்களுக்கு கிடைக்கப்பெறும் பட்சத்தில் அதை விநியோகிக்க வேண்டாம் எனவும் நாளைய தினம் (23) உரிய தரப்பு மற்றும் உயர் அதிகாரிகளிடம் கலந்துரையாடிய பின்னர் பொது தீர்மானத்தின் அடிப்படையில் விநியோக நடவடிக்கையை முன்னெடுக்குமாறு எரிவாயு உள்ளூர் விநியோகஸ்தர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
நீண்ட நேரம் எரிவாயுக்காக வரிசையில் காத்திருந்த மக்கள் வெற்று சிலிண்டர்களுடன் ஏமாற்றத்துடன் திரும்பியதை அவதானிக்க கூடியதாக இருந்தது.