அரச அதிபர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானம் முன்னெடுப்பு.
(மன்னார் நிருபர்)
(24-05-2022)
மன்னார் மாவட்டத்தில் எதிர்வரும் மூன்று வாரங்களில் உணவு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் உள்ளூர் உற்பத்தி யை ஊக்குவித்து, அத்தியாவசிய பொருட்களை களஞ்சியப் படுத்தி பயனடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் எதிர்வரும் 3 மாதங்களுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்படாத வகையில்,மாவட்டத்தை பாதுகாக்கும் வகையில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (24) காலை 9.45 மணி அளவில் விசேட கலந்துரையாடல் இடம் பெற்றது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமேல் தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் திணைக்கள தலைவர்கள்,வர்த்தக சங்கம்,ஏனைய தொடர்புடைய அமைப்புகளின் பிரதிநிதிகள்,குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த கலந்துரையாடலை தொடர்ந்து கருத்து தெரிவிககைளையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
குறித்த கலந்துரையாடலின் போது பல்வேறு தீர்மானங்கள் முன் வைக்கப்பட்டது.மாவட்டத்தில் கோதுமை மா தட்டுப்பாடு ஏற்படும் கால கட்டத்தில் அதற்கு பதிலாக அரிசி மாவை பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் மூன்று மாத காலத்தில் அறுவடை செய்யக்கூடிய மரவள்ளியை நட்டு மூன்று மாதத்தின் பின் அதன் விளைச்சலை மக்கள் பயனடையக்கூடிய வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
வர்த்தக நிலையங்களில் அத்தியாவசிய பொருட்களை கையிருப்பில் வைத்திருக்க ஆலோசனை வழங்கப்பட்டது.
பனை சார்ந்த உற்பத்தி பொருட்களை உற்பத்தி செய்வதற்கான ஆலோசனை வழங்கப்பட்ட தோடு அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்போடு பால் உற்பத்தியை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
மன்னார் மாவட்டத்தில் அரிசிக்கு பாரிய அளவில் தட்டுப்பாடு ஏற்படாது என்ற காரணத்தால் நெல்லை களஞ்சியப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் சமுர்த்தி ஊடாக வழங்கப்பட்ட விதைகள்,மற்றும் 17 ஆயிரம் குடும்பங்களுக்கு பயன் தரும் கன்றுகள் ஒரு குடும்பத்திற்கு 40 வீதம் ஏற்கனவே வழங்கப்பட்டது.அதனூடான உற்பத்தியை பெற்று மக்களுக்கு வழங்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் 10 ஆயிரம் முருங்கை மரக் கன்றுகள் மக்களுக்கு வழங்கப்பட்டது.அதன் பயன்பாட்டையும் உறுதி படுத்த அறிவுறுத்தி உள்ளோம்.
இவ்வாறு பல்வேறு விடையங்கள் குறித்து கலந்துரையாடி உள்ளோம்.குறிப்பாக கடல் உணவுகளை கருவாடாக பதப்படுத்தி வைக்கவும் ஆலோசனை வழங்கி உள்ளோம்.
எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு மன்னார் மாவட்டத்தில் உணவு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க ஆலோசனை வழங்கப்பட்டது.என அவர் மேலும் தெரிவித்தார்.