சிவா பரமேஸ்வரன் & கலாநிதி கணேசமூர்த்தி
கடன்பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன் என்ற இராமாயணப் பாடல் கடன் பட்டு அதனை மீளச் செலுத்த முடியாத போது ஏற்படும் தவிப்பை உவமை காட்டுகிறது. ஆனால் உண்மையில் இப்போது கடன்பட்டு அதனை மீளச் செலுத்த இயலாத சூழ்நிலையில் அன்று இலங்கை வேந்தன் இராவணனுக்கு ஏற்பட்டதாகக் கம்பர் உவமை கூறும் அந்தப் பரிதவிப்பு இன்றைய இலங்கையின் ஆட்சியாளருக்கு இருக்கிறதா என்று பார்த்தால் அதனை ஒரு வேடிக்கை வினோத நிகழ்வாக எடுத்துக்கொண்டு தமது அரசியல் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள எதையும் செய்யும் போக்கில் செயற்படுவதைக் காண முடிகிறது. அரசு பெற்ற கடனை மீளச் செலுத்த இயலாத போது ஏற்படும் சுமை முழுவதயும் நாட்டின் பொதுமக்கள் மீது நாளும் பொழுதுமாக ஏற்றிவிடப்பட்டு வரும் போக்கினைக் காண முடிகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் 12ஆம்திகிகதிக்கு முன்னர் இலங்கை அரசு பெற்ற கடன்களுக்கான கடன் சேவைகளை நிறுத்துவதாக இலங்கை அறிவித்தது. அதாவது அப்போது நிலுவையிலிருந்த கடன்களாகக் காணப்பட்ட 51 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்காகச் செலுத்தப்படவேண்டிய தவணைக் கொடுப்பனவுகளை செலுத்த முடியாதுள்ளதாக அறிவித்தது. இதன் பின்னர் வழங்கப்படும் கருணைக்காலம் கடந்தவாரம் முடிவடைந்த நிலையில் இலங்கை இப்போது இறைமைக்கடன் மீளச் செலுத்துகையைத் தவற விட்ட நாடாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 1948 இல் சுதந்திரம் பெற்ற காலப்பகுதியிலிருந்து கடந்த எப்ரல் 12 வரை இலங்கை தான் பெற்ற கடன்களை முறையாகத் திருப்பிச் செலுத்தி வந்திருக்கிறது. வரலாற்றில் முதற் தடவையாக இவ்வாறு கடன்மீளச்செலுத்தலை இலங்கை தவற விட்டிருக்கிறது. இந்த விடயத்தில் இலங்கை மட்டுமே தவறிழைக்கவில்லை. அதற்கு பல முன்னுதாரணங்கள் உள்ளன. வெனிசுவேலா, லெபனான், கிரீஸ், எக்வடார், அர்ஜெண்டினா போன்ற பல நாடுகள் வாங்கிய கடனை உரிய நேரத்தில் திருப்பியளிக்கவில்லை.
தனியார் நிறுவனங்கள் கடன்களைப் பெறுவதைப் போன்றே நாடுகளும் தத்தமது தேவைகளுக்கேற்ப உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கடன்களைப் பெறுகின்றன. உலகிலேயே அதிக வெளிநாட்டுக் கடன்களை பெற்றுள்ள நாடு சர்வவல்லமை பொருந்திய ஐக்கிய அமெரிக்காவேயாகும். ஆனால் பெற்ற கடனைச் சரியான விதத்தில் பயன்படுத்தி ஒரு நாடு மிகப்பெரிய அனுகூலங்களை பெற்றுக்கொள்ளலாம். ஆனால் பெற்றகடனை முறையற்ற விதத்தில் கையாண்டால் என்ன நடக்கும் என்பதற்கு இலங்கை ஒரு உதாரண நாடாக மாறியிருக்கிறது. தனியார் துறை நிறுவனங்களின் கடன் மீளச் செலுத்தும் ஆற்றலை மதிப்பிட்டு கடன் தரப்படுத்தலை (credit ratings) அறிவிக்கும் மூன்று பிரதான தொழில்சார் நிறுவனங்கள் காணப்படுகின்றன. பிட்ச் ரேட்டிங்கஸ் (Fitch Ratings) ஸ்டாண்டர்ஸ் அன்ட் புவர் (Standards and Poor) மற்றும் மூடீஸ் (Moodys) என்பனவே அம்மூன்று நிறுவனங்களுமாகும். இவை தனியார் நிறுவனங்களுக்கு மட்டுமன்றி நாடுகளும் தாம் பெற்ற கடனை மீளச் செலுத்தும் ஆற்றலை மதிப்பீடு செய்து தரப்படுத்துகின்றன. இந்நடவடிக்கை இறைமைக்கடன் தரமிடல் (sovereign ratings) என்று அழைக்கப்படுகிறது. இதன் மூலம் ஒருநாட்டின் கடன் நம்பகத்தன்மை மதிப்பீடு செய்யப்படுகிறது. மேற்படி மூன்று நிறுவனங்களும் வெவ்வேறு குறியீடுகளைக் கொண்டு ஒரு நாட்டின் கடன் மீளச்செலுத்தும் ஆற்றல் மட்டத்தை வெளிப்படுத்துகின்றன. அத்தகைய தரப்படுத்தலுக்கு சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட நியமங்களை அவை பின்பற்றுகின்றன.
இலங்கை தான் பெற்ற கடன்களை எதிர்காலத்தில் செலுத்த முடியாமல் போகும் அபாய நிலை ஏற்படும் என்று இறைமைக் கடன் தரமிடலை மேற்கொள்ளும் அந்த மூன்று இலங்கையைத் தொடர்ச்சியாக எச்சரித்து வந்துள்ளதுடன் இலங்கையின் தரமிடல் நிலையினை படிப்படியாகக் கீழ் நோக்கி நகர்த்திச் சென்றன. ஒவ்வொரு தடவையும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போதும் அதனை ஒரு எச்சரிக்கையாகக் கொண்டு தொழில்சார் ரீதியில் அதனை அணுகுவதற்குப்பதிலாக அந்நிறுவனங்களுக்கு எதிராக சீறிப்பாய்ந்து தாக்கவரும் காட்டெருமையைப் போன்று அரசாங்கமும் மத்திய வங்கியும் கோபத்துடன் அறிக்கை விட்டன.
இலங்கைக்கு எதிராக வேண்டுமென்றே அந்நிறுவனங்கள் நியாயமற்ற தரமிடலை மேற்கொள்வதாகச் சாடின. ஆனால் தரமிடல் நிறுவனங்கள் தமது நிலைப்பாட்டை மாற்றவுமில்லை எதிர்வினை காட்டவுமில்லை. மத்தியவங்கி ஆளுநராகப் பதவியேற்ற கப்ரால் இலங்கையிலே டொலருக்கு எவ்வித தட்டுப்பாடுமில்லை. டொலர் உள்வருகைகள் பிரகாசமாக உள்ளன யாவும் நலமாக உள்ளதென்று சற்றும் கூச்சப்படாமல் உண்மைக்கு புறம்பான தகவல்களை அளித்தார். ஆனால் கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரியும் என்பது போல இலங்கையின் அந்நியச் செலாவணிக்கையிருப்புகள் கரைந்து மிக மோசமான நிலையினை அடைந்தன. டொலருக்கான தேவை மிகப்பெரியளவில் அதிகரிக்க ரூபாவின் பெறுமதி பாதாளத்தை நோக்கி நகர 203 ரூபா மட்டத்தில் டொலரைக்கட்டிப்போட்டது இலங்கை. அதனால் கள்ளச் சந்தையில் டொலரின் விலை 260 ரூபாவை எட்டியது. ஹவாலா உண்டியல் முறைமைகள் மூலம் கூடுதலான விலைக்கு டொலர்கள் பரிமாறப்பட்டன. மத்திய வங்கியின் டொலர் கையிருப்புகள் கரைந்து போன நிலையில் 203ரூபா விலையில் கட்டிவைத்திருந்த டொலரை திடீரென அவிழ்த்துவிட்டது இலங்கை. அது சுழன்றடித்த சண்டமாருதத்தில் அதன் விலை 390 ரூபா வரையில் எகிறியது. இப்போது 360 ரூபா என்ற மட்டத்திற்கு வந்திருக்கிறது.
டொலர் உள்வருகையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட அத்தனை நடவடிக்கைகளும் தோல்வியை சந்தித்திருக்கின்றன. ஏற்றுமதி வருவாய்களில் ஒரு சிறிய அதிகரிப்பு அவதானிக்கபட்டபோதிலும் வருவாய் ஈட்டித்தரும் பிரதானதுறைகளில் ஒன்றாகிய உல்லாசப்பயணத்துறை முற்றாகப் படுத்துவிட்டது. அதனை மேம்படுத்தி உல்லாசப்பயணிகளை வரவழைக்க என்ன செய்யலாம் என்ற கேள்விக்கு பதிலளித்த இன்றைய பிரதமர் இலங்கைக்கு இப்போது அடவென்சர்களை விரும்பும் உல்லாசப்பயணிகள் தாராளமாக வரலாம் போஸ்டர்களை ஏந்தி ஜனாதிபதியையும் பிரதமரையும் வீட்டுக்குப்போகச் சொல்லி கோசம் எழுப்புபவர்களுடன் இணைந்து புதிய அனுபவம் பெறலாம் என்றும் பதிலளித்தார். எவ்விதமான ஜனநாயக விழுமியங்களுமின்றி பதவியேற்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இந்தக் கருத்து கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. இவ்வளவிற்கும் இந்த கருத்தை அவர் வெளியிடும் போது அவர் நிதியமைச்சரோ அல்லது சுற்றுலாத்துறை அமைச்சரோ இல்லை.
ஏற்கெனவே நாடுகள் பலவும் தமது பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் உல்லாசப்பயணத்துறை வருவாய்களை தற்போது அதிகரிக்க முடியாது என்பதே யதார்த்தம். மறுபுறம் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களும் இலங்கைப்பணியாளர்களும் அனுப்பும் டொலர் உள்வருகைகளும் இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் ஐம்பது சதவீதத்திற்கும் மேலாக வீழ்ச்சியடைந்துள்ளன. வங்கிகள் அல்லாத முறையற்ற வழிகள் ஊடாக பணம் பரிமாறப்படுவதே இதற்கு காரணம் என மத்தியவங்கி கூறுவதுடன் இதனைத்தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஏற்றுமதி இறக்குமதி நடவடிக்கைகளுக்கான செலுத்தல்கள் வங்கிமுறையூடாக மட்டுமே அனுமதிக்கப்படுமெனவும் அதேபோல ஒருவர் கைவசம் வைத்திருக்கக் கூடிய டொலரின் அளவை 10,000 ஆக குறைத்த சுற்று நிருபங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் டொலர் உள்வருகைகள் அதிகரிக்குமா என்பதைப் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஒரு நாடு தான் பெற்ற கடன்களை மீளச்செலுத்த முடியாதென உத்தியோகபூர்வமாக அறிவித்தால் அதனால் பல்வேறு சிக்கல்கள் எழும் குறிப்பாக வட்டிவீதங்கள் அதிகரிக்கும் வேலையின்மை ஏற்படும், பணவீக்கம் உயரும், நாணய மாற்றுவீதம் மேலும் தேய்வடையம் உள்நாட்டுச் சந்தை முதலீட்டாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவர் என்று பலவகைகளில் நெருக்கடி ஏற்படும். இவை அத்தனையும் இலங்கையில் இப்போது துரித கதியில் ஏற்பட்டு வருவதை ஒவ்வொருவரும் காணலாம். இதன் மூலம் சாதாரண பொதுமக்களின் வாழ்க்கையும்ம் இருப்பும் கேள்விக்குறியாக மாறும். உணவு உடை உறைவிடம் போன்ற அடிப்படைத் தேவைகளை மக்கள் பூர்த்தி செய்ய முடியாத அவலநிலை தோன்றும். வறுமை அதிகரிக்கும் விரக்தியும் கையறு நிலையும் காரணமாக சமூக வன்முறைகள் அதிகரிக்கலாம். இப்போதுள்ள நிலையில் இன்னும் மூன்றுமாதங்களில் இலங்கையில் உணவுப்பற்றாக்குறை ஏற்படுமென கூறப்படுகிறது. இது நிலைமையை மேலும் மோசமானதாக மாற்றும். உணவு விலைகள் பலமடங்கு அதிகரித்துள்ளன. எரிபொருள் விலைகள் குறுகிய காலத்தில் மிக மோசமாக உயர்ந்துள்ளது. அதேவேளை, இந்தியாவிலிருந்து கப்பல் மூலம் எரிபொருள் வந்தாலும் தட்டுப்பாடு குறைந்த பாடில்லை. அரசாங்கம் மக்களை முற்றும் முழுதாகக் கைவிட்ட ஒரு நிலையே தென்படுகிறது. பாராளுமன்றத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட தமது உறுப்பினர்களின் கண்ணீர்கதைகள் பேசப்பட்டவையேயன்றி மக்களின் கண்ணீர்துடைக்கும் எந்த ஆணியும் இதுவரையில் பிடுங்கப்படவில்லை. 21 வது அரசியலமைப்பு திருத்தம் தான் பட்டினியால் துவளும் மக்களின் முக்கிய தேவையாக உள்ளதாம். புதிய மொந்தையில் பழைய கள் என்பத போல அதே பழைய கூட்டம் வெகு ஜோராக மீண்டும் ஆட்டத்தைத் தொடங்கியுள்ளது. துடிக்கும் மக்களின் அவலக்குரல் இந்தக் காரியச் செவிடர்களின் காதில் எப்போதும் கேட்டதில்லை. வாழமுடிந்தவன் வாழ்ந்து கொள். சாகிறவன் செத்த ஒழி என்பது போல தங்களது நாளாந்த குடுமிப்பிடி சண்டைகளோடு நடந்து கொண்டிருக்கின்றன பாராளுமன்ற அமர்வுகள். இலங்கை மக்களை உண்மையில் இப்போது கடவுள் மட்டும் தான் காப்பாற்ற முடியும்.
ஆனால் இந்த ஆட்சியாளர்களும் பல கடவுகளின் சாபத்திற்கு ஆளாகியுள்ளனர் என்கிற கருத்துக்கள் சமூக ஊடகங்கள் எங்கும் பரவியுள்ளன. தமிழர் தாயகப் பகுதிகளில் இந்து ஆலயங்கள்விகாரைகள் அமைப்பதற்காக புராண பௌத்த பூமி என்கிற பெயரில் கபளீகரம் செய்யப்படுகின்றன. இதற்கு இராணுவம் துணை நிற்கிறது.
இதேவேளை இலங்கை மக்களுக்கு ஆட்சியாளர்களால் தொடர்ச்சியாகக் கூறும் பொய்களின் ஒரு பகுதியாக, “பொருட்களை ஏற்றிக் கொண்டு கப்பல்கள் வர ஆரம்பித்துள்ளன, எனவே நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி என்பது தற்காலிகமானது தான், அவை விரைவில் சீராகிவிடும்” என்று `அம்புலிமாமா கதைகள்` போன்று மக்களுக்கு நம்பவைக்கும் வகையில் கூறுகின்றனர். இவ்வளவு நெருக்கடிகள் இருந்தும், ஒற்றை நபர் கட்சியின் தலைவராக இருந்த ரணிலைப் பிரதமராக்கிய பிறகு, இதர துறைகளுக்கு அமைச்சர்களை நியமித்த கோத்தாபய ராஜபக்ச கடந்த புதன்கிழமை (25) அன்றுதான் பிரதமரை நிதியமைச்சராக நியமித்தார். இதுவே அரசு நாட்டின் நிதிநிலைமையை கையாளும் விதத்தைக் காட்டுகிறது.
நாடு தற்போது மிகவும் அபாயகரமான நிலையில் கொந்தளிப்பில் உள்ளது, அதற்கு பொருளாதார நெருக்கடிகளே காரணம் என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்திருந்தாலும், அந்தப் பிரச்சனை இயல்பாகவே சரியாகிவிடும் என்று தப்புக்கணக்கு போடுகிறார்கள். விலைவாசிகள் நாளாந்தம் தேள் கடித்தவனுக்கு விஷம் ஏறுவது போல ஏறுகிறது.
ஆட்சியாளர்கள் இனியும் ஆயுதப் போராட்டம், விடுதலைப் புலிகள், சர்வதேசத்தின் சதி, இந்தியா எம்மை அடிமைப்படுத்த நினைக்கிறது என்று கூறமுடியாது, சிங்கள மக்களும் அதை ஏற்கமாட்டார்கள்.
உலக வங்கி விடுத்த எச்சரிக்கையை கோத்தா-ரணில் ஜோடி காதில் விழுந்திருக்கும். ”பேரினப் பொருளாதார அடிப்படை விஷயங்களை இலங்கை அரசு கட்டியெழுப்பாத வரை, தம்மிடமிருந்து எந்த கடன் அல்லது உதவிகளையும் எதிர்பார்க்க முடியாது” என்று திட்டவட்டமாக கூறியுள்ளது. இந்த எச்சரிக்கையை அரசு காத்திரமாக மனதில் எடுத்து உரிய மாறுதல்களைச் செய்யவில்லை என்றால், நாடு மேலும் அதலபாதாளத்திற்குச் செல்லும் என்பதில் ஐயமில்லை.
கட்டுரையாளர்கள் பற்றி:
சிவா பரமேஸ்வரன்: மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன்
கலாநிதி முருகேசு கணேசமூர்த்தி: பேராசிரியர், பொருளாதார பீடம், கொழும்பு பல்கலைக்கழகம்.