கலை, இலக்கிய, பத்திரிகை துறைகளில் ஐம்பது ஆண்டுகள் அயராது இயங்கி, பணியாற்றி, பொன்விழா காணும் எனது இனிய நண்பர், நட்பின் நாயகன் திரு. ஆர். என் . லோகேந்திரலிங்கம் அவர்களுக்கு வாழ்த்து சொல்லும் தருணம் இது. “மலையன்பன்” என்ற பெயரில் தாயகத்தில் இருக்கும்போதே பத்திரிகைகளில் பல படைப்புகளை எழுதிய படைப்பாளி. எழுபதுகளில் கல்முனை பிராந்தியத்தில் மின்சார திணைக்களத்தில் இவர் பணிபுரிந்தபோது அனைத்து ஊர்களுக்கும் பணி நிமித்தம் சென்று வருவார். எனது ஊரான திருக்கோவிலுக்கும் வருவார். ஊரில் நான் ஒரு கலை நிகழ்ச்சி செய்தபோது {மறைந்த நண்பர் கே. எஸ். ராஜாவுடன்)அந்த நிகழ்ச்சிக்கும் வந்திருக்கின்றார். அப்போதே கலை இலக்கியத்தில்மிகுந்த ஈடுபாட்டோடு இருந்தவர்.நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலையால் நாட்டைவிட்டு புறப்பட்டு கனடாவுக்கு புலம்பெயர்ந்தார்.
கனடாவுக்கு வந்தும் தமிழ் பற்றும்,இலக்கிய ஆர்வமும்,படைப்பாற்றாலும் அவரை பத்திரிகைத் துறையில் கால்பதிக்க வைத்தது. இவர் “உதயன்” வாரப் பத்திரிகையை ஆரம்பித்து அதற்கு கடந்த வருடம் வெள்ளிவிழாவும் கண்டார். 26 ஆண்டுகளாக இந்த பத்திரிகையை மிக சிறப்பாக அதன் ஆசிரியராக,வெளியீட்டாளராக இருந்து நடத்திக்கொண்டு வருவது சாதாரண விசயமில்லை . இது ஓர் இமாலய சாதனை என்றே சொல்லுவேன். நானும் ஆரம்பத்தில் பத்திரிகைத் துறையில் இருந்தவன் என்ற அனுபவத்தில் இதை என்னால் உணரமுடியும். அந்த வகையில் நண்பர் லோகன் அவர்கள் பாராட்டுகளுக்கும்,வாழ்த்துகளுக்கும் பாத்திரமானவரே. இவருக்கு பல நாடுகளில் பாராட்டுகளும் ,விருதுகளும் கிடைத்திருக்கின்றன. ஒருமுறை எனக்கும்,இவருக்கும் அவுஸ்திரேலியாவில் வாழ்நாள்சாதனையாளர் விருது கிடைத்தது. கனடாவிலிருந்து அவரும்,லண்டனிலிருந்து நானும் சென்று அந்த விருதைப் பெற்றோம். அவை மறக்கமுடியாத தருணங்கள்.
அவர் விருதுகள் பெறுவது ஒருபக்கம் என்றால் இவர் தனது “கனடா உதயன்”பத்திரிகை விருதுகளை வருடா வருடம் கொடுப்பது மறுபக்கம். ஆம் வருடா வருடம் கனடா விருதுகளை சர்வதேச ரீதியில் இவர் வழங்கி வருகிறார். இந்த கனடா உதயன் விருது எனக்கும் 2017ல் இவரால் வழங்கப்பட்டது. விருது வழங்கும் விழாக்களை மிக சிறப்பாக செய்து முடிப்பதில் நண்பன் லோகனுக்கு நிகர் அவரே. இவர் உதயன் பத்திரிகையில் வாராவாரம் “கதிரோட்டம் “என்ற தலைப்பில் எழுதிவரும் ஆசிரியர் தலையங்களை தொகுத்து “இதுவரை” என்ற நூலை 2013 ல் பதிப்பித்து வெளியிட்டார். இந்த நூலை அறிமுகம் செய்ய லண்டன் வந்திருந்தார். அந்த நேரம் இவருடன் இருந்த தருணங்கள் அலாதியானவை. அவ்வப்போது எனது கட்டுரை,கவிதை,சிறுகதை என்று எனது படைப்புகளும் இவரது உதயன் பத்திரிகையில் வருவதுண்டு. எனது நூல்கள் கனடாவில் அறிமுகம் செயப்படும்போதெல்லாம் தனது ஆதரவையும்,ஒத்துழைப்பையும் தருபவர். தனது கடின உழைப்பால் ஐம்பது ஆண்டுகள் கலை,இலக்கிய, பத்திரிகைத் துறையில் பயணித்து பொன்விழா காணும் எனது அன்பு நண்பன் லோகேந்திரலிங்கம் அவர்களை மனதார வாழ்த்தி மகிழ்கின்றேன்.
-கோவிலூர் செல்வராஜன் –
இலண்டன்