கடந்த வாரம் மே 21-ம் நாள் சனிக்கிழமை காலை 11.00 மணியளவில் அன்னையர் தினத்தைக் கொண்டாட வேண்டி அழைக்கப்பட்ட விருந்தினர்கள் அனைவரும் மொன்றியல் மூத்தோர் அரங்கில் உற்சாகமாகக் கூடியிருந்தனர்.
இணையத்தின் தலைவர் ஓய்வுபெற்ற ஆசிரியர் திரு.முத்துக்குமார் சிவானந்தம் தலைமையில் விழா இனிதே ஆரம்பமானது. இறைவணக்கம் – தமிழ்மொழி வாழ்த்து – அகவணக்கம் என மரபு பேணிய ஆரம்பம்.
தலைமையுரையை தலைவர் திரு.மு. சிவானந்தம் சுருக்கமாக நிகழ்த்த – நிர்வாக உறுப்பினர் திரு. கேதீஸ்வரன் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து அரங்கைச் சுறுசுறுப்பாக்கினார்.
மொன்றியல் நகர நகைச்சுவைப்புயல் – கூடவே கேகீஸ்சும் இணைந்து அன்னையரையும் – முதியோரையும் சிரிப்பூட்டி மகிழ வைத்தார்கள்.
சமுகமளித்திருந்த அன்னையர்க்கும் – சகோதரிகளுக்கும் பூச்செண்டு வழங்கி மரியாதை செய்யப்பட்டது.
பிரியஷேத்திரா நாட்டியப்பள்ளி ஆசிரியை திருமதி. பிரியா பிரதீபன் நெறியாள்கையில் அவருடைய மாணவன் செல்வன். பிரவீன் இருதயதாஸ் நடன விருந்தளித்தார்.
திருமதி நாமகள் கவிதை வாசிக்க, சிறப்பு விருந்தனராக வருகை தந்திருந்த திரு. வீணைமைந்தன் கவிதை வரிகளுடன் சிற்றுரை நிகழ்த்தினார். ரெபின்சன், சௌதா, மகேஸ்வரி, திருமதி. லதா ஆகியோரின் பாடல்கள் காதுகளில் ரீங்காரமிட அனைவரும் மகிழ்ச்சியுடன் கூடிக் களித்தனர். மதிய போசன விருந்துடன் மூத்தோர் இணையத்தின் இவ்வாண்டுக்குரிய அன்னையர் தினக் கொண்டாட்டங்கள் இனிதே நிறைவேறிற்று.
– உதயன் செய்தியாளர்