கடலூர் மாவட்டம், நடுவீரப்பட்டு அடுத்துள்ள எஸ்.புதுக்குப்பம் கிராமத்தில் வசித்து வந்தவர் கி.அய்யர் என்கிற ராஜசேகர் விவசாயியான இவர், தனது சகோதரியின் மகள் விஜயலட்சுமியை கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளனர்.
ராஜசேகர் அடிக்கடி மனைவியிடம் சண்டை போட்டுக்கொண்டு வெளியூர் சென்று விடுவாராம். இந்நிலையில், கடந்த 9 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டுச் சென்றவர் வீடு திரும்பவில்லை என்று கூறப்பட்டது.
பல மாதங்களாக ராஜசேகர் குறித்த தகவல் தெரியாத நிலையில், 40 வயதான விஜயலஷ்மியின் நடவடிக்கை மோகன் என்ற இளைஞருடன் ஊர் சுற்றும் அளவுக்கு திசைமாறியதை அறிந்த, அவரது சகோதரர் சிவகுமார், தனது அக்காவிடம் விசாரித்துள்ளார். அதில் ராஜசேகர் மாயமான பின்னணி அம்பலமானது.
கணவர் ராஜசேகர் அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டு வெளியூர் சென்று விடுவது வழக்கம் என்பதால் அவர் எங்கு செல்கின்றார் என்று விசாரித்த போது அவர் இளம் வயது பெண்ணுடன் தனியாக குடித்தனம் நடத்தி வந்தது தெரியவந்துள்ளது.
இருவருக்கும் இடையேயான பிரச்சனை குறித்து அறிந்து ஆறுதல் கூறிய இளைஞர் மோகன் என்பவருடன் 40 வயதான விஜயலெட்சுமிக்கு தவறான பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.
ஒரு கட்டத்தில் இதனை அறிந்த கணவர் ராஜசேகர், மனைவியை கண்டித்து அடித்து உதைத்ததால் அவரை தீர்த்துக்கட்ட விஜயலெட்சுமியும், மோகனும் திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி சம்பவத்தன்று தனது ஸ்கூட்டி வாகனத்தில் வாழைத்தோட்டத்துக்கு சென்றிந்த ராஜசேகரை பின் தொடர்ந்த வில்லங்க காதல் ஜோடி, இரும்பு பைப்பால் ராஜசேகரின் தலையில் ஓங்கி அடித்து கொலை செய்துள்ளனர்.
அருகில் போர்வெல் அமைக்க தோண்டப்படு கைவிடப்பட்ட சுமார் 10 அடி ஆழ குழியில் ராஜசேகரின் சடலத்தையும் , அவர் ஓட்டிச்சென்ற ஸ்கூட்டியையும் ஒன்றாக தூக்கிப் போட்டு களிமண் போட்டு மூடி உள்ளனர்.
புதைத்த இடத்தை எளிதாக அடையாளம் காணும் வகையில் அதில் வாழைக்கன்று ஒன்றை நட்டுவைத்ததாக விஜயலெட்சுமி , தனது சகோதரரிடம் தெரிவித்துள்ளார். சிவக்குமார் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்
9 மாதங்கள் கடந்த நிலையில் தற்போது அந்த வாழை மரம், குலை தள்ளிவிட்டது. பண்ருட்டி சரக துணை கண்காணிப்பாளர் சபியுல்லா, நெல்லிக்குப்பம் காவல் ஆய்வாளர் அசோகன் ஆகியோர் வருவாய்த்துறையினருடன் சென்று வாழைத் தோட்டத்தை பார்வையிட்டனர்.
பின்னர், விஜயலட்சுமியை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் வாழைமரத்தை வைத்து கணவர் ராஜசேகர் புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டினார்
இதையடுத்து ஒப்புதல் வாக்குமூலம் அளித்த வில்லங்க மனைவி விஜயலட்சுமியை கைது செய்த போலீசார் ராஜசேகர் சடலத்தை தோண்டி எடுத்து உடற்கூறாய்வு செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசுக்கு மட்டுமல்ல விஜயலெட்சுமிக்கும் டாடா காட்டிவிட்டு தலைமறைவான இளம் காதலன் மோகனை போலீசார் தேடி வருகின்றனர்.
அதே நேரத்தில் தலைக்கு மேல் வளர்ந்த பிள்ளைகள் இருக்கும் நிலையில் குழந்தைகளின் எதிர்காலம் மறந்து மோகனுடன் ஏற்பட்ட மோசமான தொடர்பால் ஒரு குடும்பமே நிலைகுலைந்து போயுள்ளது.