(மன்னார் நிருபர்)
(30-05-2022)
இலங்கையில் பொருளாதார நிதி நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் அத்தியாவசிய உணவு பொருட்களை அன்பளிப்பாக வழங்கியுள்ள நிலையில் குறித்த உலர் உணவு பொருட்கள் அனைத்து மாவட்ட மக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் 25,000 குடும்பங்களுக்கு வழங்குவதற்காக 2 லட்சத்து 50 ஆயிரம் கிலோ அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை (30) காலை மன்னார் பிரதேச செயலகத்தில் வைத்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் அவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த உணவுப்பொருட்கள் இந்திய உயர்ஸ்தானிகர் தலைமையில் உத்தியோகபூர்வமாக தெரிவு செய்யப்பட்ட மக்களுக்கு வழங்கி வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.
முதற்கட்டமாக 6500 குடும்பங்களுக்கு வழங்குவதற்காக 65,000 கிலோ உணவுப் பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும் மாந்தை மேற்கு பிரதேச செயலகம் மற்றும் மடு பிரதேச செயலகத்திற்கும் பொருட்கள் கொண்டு செல்லப்பட உள்ள நிலையில் நாளைய தினம் (31) நானாட்டான் மற்றும் முசலி பிரதேச செயலகங்களுக்கு, உணவுப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு பயனாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது.