சர்வதேச கிருஷ்ண பக்தி கழகத்தினரின் இலங்கைக் கிளையினரால் நடத்தப்பட்டுவரும் ஸ்ரீஸ்ரீ ராதா கிருஷ்ணர் ஆலயம் எதிர்வரும் ஆவணி 16இல் (செப்டம்பர் 1) கும்பாபிஷேகம் காண உள்ளது. மக்களின் பிரார்த்தனைகளுக்கும், ஆர்வத்துக்கும் அமைய ஸ்ரீஸ்ரீ ராதா ராஜகோபாலருக்கான ஆலயத்திருப்பணி இனிதே நிறைவேறி குறித்த நாளில் கும்பாபிஷேகம் பக்திப்பரவசத்துடன் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
1976ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த பக்தித் தலத்தின் வரலாறு 40 வருடங்களைக் கடந்து வந்துள்ளது. ஆலயமொன்று அமைப்பதென்பது இந்த பக்தர்களின் மாபெரும் கனவாகவே இருந்தது என்று கூறலாம். இச்சமயத்தில் இந்த கிருஷ்ண பக்திக் கழகம் இலங்கையில் எவ்வாறு தடம்பதித்தது என்பது பற்றிய பசுமை நினைவுகளை சிறிது நோக்குவது பொருந்தும் என்று கருதுகிறேன்.
இலங்கையில் ஊர்காவற்றுறை, சுருவிலைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஜெர்மனியில் விஞ்ஞானப் பட்டதாரியாக பல்கலைக்கழகப் பட்டப்படிப்பை மேற்கொண்டிருந்த வேளையில் அவருக்கு இந்த கிருஷ்ண பக்தி கழகத்துடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதனை அடுத்து அதில் மிகுந்த ஈடுபாடு கொண்ட அவர் அங்கு சென்று பக்திச்சேவைகளில் ஈடுபடலானார். அவருடைய பக்தியைக் கண்டு இந்த கழகத்தின் ஸ்தாபகரும், ஆன்மிகக் குருவுமான இந்தியாவைச் சேர்ந்த சுவாமிஜி அருட்திரு பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா அவர்கள் அவருக்கு தீட்சை வழங்கி மஹாகர்த்தா தாஸ் என்று பெயர் சூடினார்.
இன்று இலங்கையில் உள்ள கிருஷ்ண பக்தர்களில் சுவாமி பிரபுபாதாவிடம் தீட்சைபெற்ற ஒரே ஒரு சிஸ்யராக அவரே திகழ்கிறார்.
தீட்சை பெற்றபின்னர் அவருக்கு ஓர் ஆசை ஏற்பட்டது. அதாவது நமது நாட்டில் அதாவது இலங்கையில் இந்த கிருஷ்ண பக்திக் கழகத்தை ஆரம்பித்தால் நிறைய பக்தர்கள் இணைந்துகொள்வார்கள். நாட்டு மக்கள் மத்தியில் இறைபக்தி உருவாகும். நாட்டில் அமைதி, மகிழ்ச்சி, செல்வச்செழிப்பு ஏற்படும் என்று அவர் நினைத்திருக்கக் கூடும். அதனால் அவர் தனது ஆசையை அங்கு வெளியிட்டார். அதற்கு சம்மதம் கிடைத்தது. ஆனால் ஒரு நிபந்தனை. அது என்னவெனில் ஒருவர் இந்த கழகத்தை ஏதாவது ஒரு நாட்டில் ஆரம்பிப்பது என்றால் அவர் தனது சுய முயற்சியில் தான் ஆரம்பிக்க வேண்டும். அவருடைய செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன, அந்த கழகம் எவ்வாறு வளர்ச்சி பெறுகிறது என்பதை அறிந்த பின்னர்தான் தலைமையகத்தின் உதவிகள் கிடைக்கும். அதனால் நீங்களே போய் இந்த கழகத்தை உங்கள் நாட்டில் ஆரம்பியுங்கள் என்று கூறியதோடு அவருக்கு உதவியாக ஓர் அமெரிக்க பக்தரான ரோகிணி குமாரதாஸ் என்னும் இளைஞரையும் அனுப்பி வைத்தார்கள். இருவரும் இலங்கையை அடைந்தபோது அவர்களுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. ஆனாலும் அவர்கள் சுவாமி பிரபுபாதாவை
நினைவுபடுத்திக்கொண்டனர். சுவாமி பிரபுபாதா எப்படி தனக்கு சிறிதும் அறிமுகமில்லாத அமெரிக்க நாட்டுக்கு யாருடைய உதவியும் இல்லாமல் தன்னந் தனியனாகப் போய் இந்த கிருஷ்ண பக்திக்கழகத்தை ஸ்தாபித்து சில வருட காலத்திலேயே உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவச்செய்தார். எல்லாம் பகவானின் அருளால்தான் அவரால் சாதிக்கமுடிந்தது என்தை அவர்கள் பூரணமாக நம்பினர்.
இறைவன்மீது நம்பிக்கை வைத்து அவர்களும் பணியை ஆரம்பிக்கலாயினர். சுவாமி மஹாகர்த்தா தாஸ் தனக்கு மிகவும் அபிமானத்துக்குரிய ஒரு செல்வந்த வர்த்தகரைச்சந்தித்து இந்தக் கிருஷ்ண பக்திக் கழகத்தைப் பற்றி விளக்கிக்கூறி தலைநகர் கொழும்பில் ஒரு கிளை நிலையத்தை ஆரம்பிப்பதற்கு உதவுமாறு கூறியுள்ளார். அவரும் புதுச்செட்டித்தெருவில் ஓர் இல்லத்தை அவருக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
1976ஆம் ஆண்டு அந்த இல்லத்தில் கழக ஆலயத்தை உருவாக்கி பூஜைகளில் ஈடுபடலானார்.
இந்த விடயத்தில் இன்னொன்றையும் கூற வேண்டும். அதாவது, அவருடன் வந்த அமெரிக்க பக்தரான ரோகிணி குமாரதாஸ் அவர்கள் ஒரு சிறந்த பக்தர்.
அவர் இறைவனின் பாடல்களை அழகாகப் பாடுவார். பிரசங்கம் செய்வார். இறைவனையும் ஆலயத்தையும் அழகாக அலங்கரித்து பார்த்து இரசிப்பார். இன்னும் சமையல் வேலைகளை செய்தல், நைவேத்தியம் செய்தல் என்று ஆலயத்தை சீராக பராமரிப்பதில் அவர் மிகுந்த திறமையுடன் செயல்பட்டார். ஆனால் அவரிடம் இல்லாத திறமை என்னவென்றால் அது நிதி சேகரிப்பது மட்டும்தான். நிதி இல்லாமல் ஆலயத்தை நடத்தமுடியுமா? அவருக்கு நிதி சேகரிக்கும் ஆற்றல் இருக்கவில்லை என்றே கூற வேண்டும். அதனால் ஆலயத்தை பராமரிக்கும் வேலைகளை அவரிடம் விட்டுவிட்டு சுவாமி மஹாகர்த்தாதாஸ் மட்டும் நிதி சேகரிக்க தினமும் வெளியில் சென்றார். இப்படி மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் நிதி சேகரித்து ஆலயத்தை சீராக நடத்துவதற்கு முயற்சி செய்தார்.
இவ்வேளையில் இன்னொன்றையும் கூற வேண்டும். அதாவது சுவாமி பிரபுபாதாவின் ஒரு
கொள்கையானது இந்த கிருஷ்ண பக்திக் கழகம் எந்த நாட்டில், எங்கு இயங்கினாலும் வாழ்வுக்காக உணவு (food for life) என்ற ஒரு திட்டத்தை செயல்படுத்தவேண்டும் என்பதில் கண்டிப்புடன் இருந்தார். வாழ்வுக்காக உணவு என்பது வாரத்தில் ஒரு நாளாவது மக்களுக்கு உணவளிக்க வேண்டும் என்பதுதான். அதன்படி முதல் வாரமே சுவாமி மஹாகர்த்தாதாஸ் நிதி சேகரித்து உணவளிக்க தவறவில்லை. அதுமுதல் பக்தர்கள் அந்த ஆலயத்திற்கு வரத் தொடங்கினார்கள இந்த இரண்டு பக்தர்களின் சேவையில் கிருஷ்ண பக்திக் கழகத்தின் தலைமையகம் திருப்தி அடைந்தது என்றே கூற வேண்டும். அவர்கள் உதவிகள் வழங்கியதோடு நிறைய வெளிநாட்டு பக்தர்களை இங்கு அனுப்பி வைத்தார்கள். அதன் பின்னர் வாராவாரம் ஞாயிறு அன்று பெரிய விருந்து தடல் புடலாக நடக்கலானது. கொழும்பின் பல பகுதிகளிலும் வெளிநாட்டு பக்தர்களின் ஆடல், பாடல்களுடனான சங்கீர்த்தனத்தைப் பார்த்து மக்கள் வியந்தனர்.
ஒரு விடுமுறை நாள் பகல் பொழுதில் நானும் என் சகோதரனும் அந்த ஆலயத்திற்குச் சென்றிருந்தோம். என் சகோதரன் ஏற்கனவே அங்கு சென்று ஓரளவுக்குப் பழகியிருந்தார். அவர் என்னை அங்கிருந்தவர்களிடம் அறிமுகப்படுத்திவைத்தார்.
அங்கு சென்றபோது அங்கிருந்த வெளிநாட்டு பக்தர்களைப் பார்த்து எனக்கு வியப்பாக இருந்தது. அங்கு பல்வேறு நாடுகளையும் சேர்ந்த கறுப்பு இன, வெள்ளை இன பக்தர்கள் இருந்தனர். அவர்கள் எல்லோரும் ஒருதாய் மக்கள்போன்று அன்புடன் பழகுவதைப் பார்க்கும் போது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனாலும் எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. இது நமது மதம்தானா அல்லது வேறு மதமா என்பதுதான் அது. ஏனென்றால் அங்கு வைக்கப்பட்டிருந்த சுவாமி சிலைகள் நான் அதற்கு முன்னர் காணாதவையாக இருந்தன. ஜெகநாதரின் வடிவங்கள்தான் அவை. ஆனாலும் அவர்கள் பேசும்போது இது நமது மதம்தான் என்று அறியமுடிந்தது. இவர்களும் நம் மதத்தைத்தான் பின்பற்றுகிறார்கள் என்று அறிந்தபோது நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். அதுமட்டுமல்ல, அங்கிருந்த ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு பக்தருடன் உரையாடலானேன்.
நான் பாடசாலையில் படிக்கும் காலத்திலேயே மகாபாரதம் ராமாயணம் என்பவற்றை ஓரளவு அறிந்திருந்தேன். அவை இரண்டும் பாடத்திட்டத்திலும் இருந்தபடியால் எனக்கு அவற்றில் மிகுந்த ஆர்வம் இருந்தது. அதுமட்டுமல்ல, அவற்றில் எனக்கு ஏராளமான சந்தேகங்களும் இருந்தன. சிலர் மகாபாரதம், ராமாயணம் என்பவை கற்பனைக் கதைகள் என்றும் வேறு சிலர் உண்மை நிகழ்வு என்றும் கூறுகிறார்கள். இதில் எதை நம்புவது என்று எனக்கு புரியாத பல விடயங்கள் இருந்தன. இவைபற்றி எனக்கு யாரும் சரியான விளக்கம் அளிக்கவும் இல்லை. நான் அங்கிருந்த அந்த வெள்ளைக்கார சுவாமியிடம் எனது சந்தேகங்கள் சிலபற்றி கேட்டேன். அதற்கு அவர் அளித்த விளக்கங்கள் என்னை மிகுந்த ஆச்சரியப்பட வைத்தன. யாருமே எனக்கு விளங்கவைக்காத பல விடயங்களை அவர் எனக்குக் கூறினார். எனக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. சந்தேகமே இல்லாமல் எனது கேள்விகளுக்கு அவர் தகுந்த விளக்கம் அளித்தார். விடுமுறை நாட்களில் எங்கெங்கொ செல்வதை விடுத்து அங்கு சென்றால் பயனுள்ளதாக இருக்குமென்று நினைத்தேன். நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு வெள்ளைக்கார சுவாமி வந்து எங்களைப் பால் அருந்த உள்ளே அழைத்தார்.
அப்பொழுது ஆலய தலைவர் மஹாகர்த்தா தாஸ் அலுவலகத்தில் அமர்ந்திருந்து ஏதோ செய்துகொண்டிருந்தார். அப்பொழுது இன்னொரு வெள்ளைக்கார சுவாமி
உயரமான ஆஜானுபாகுவான தோற்றம். அவர் பால் கிண்ணத்தை ஒரு தட்டில் வைத்து மஹாகர்த்தா தாஸ் சுவாமிக்குமிக பணிவுடனும், மரியாதையுடனும் வைத்துவிட்டுச் சென்றார். அந்தக் காட்சியும் எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. காரணம் ஒரு வெள்ளைக்காரர் அதுவும் ஆஜானுபாகுவான தோற்றமுள்ளவர் ஒரு தமிழ் பக்தரிடம் அப்படி பணிவுடன் நடந்துகொண்டதுதான் எனக்கு வியப்பாக இருந்தது. அங்கு எல்லோரும் சமமாக நடத்தப்பட்டாலும் ஆலய தலைவருக்கு மட்டும் ஒரு தனி கௌரவம் இருக்குமென்பதை பின்னர் அறிந்துகொண்டேன். அதன் பின்னர் எனக்கு சுவாமி மஹாகர்த்தா தாஸின் அறிமுகம் கிடைத்தது. அதன்மூலம் எனது நீண்டகால ஆசையும், இலட்சியமும் நிறைவேறும் வாய்ப்பு கிட்டியது. (தொடரும்)