சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன்
மருத்துவர் ஹவா அப்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த போது உலகெங்குமுள்ள லட்சக்கணக்கானவர்கள் கண்கலங்கியது போல நானும் மனம் வருந்தினேன். அவர் இன்னும் சில ஆண்டுகள் வாழ்ந்திருக்க வேண்டும், அவரைப் போன்றோர் 73 வயதில் மரணமடைவது மிகவும் வருந்தத்தக்கது. சமாதானத்திற்கான நோபல் பரிசு பெறுவதற்கு அனைத்து தகுதிகள் மற்றும் அர்ப்பணிப்புகள் அவரிடம் இருந்தன. அந்தப் பரிசிற்காக அவர் பரிந்துரைக்கவும் பட்டார். அந்த அம்மையார் மருத்துவர் மட்டுமல்ல, வாழ்நாள் முழுவதும் மனித உரிமைகள் போராளியாக வாழ்ந்தவர். சிறு வயதில் பெரியவர் ஒருவருடன் கட்டாய திருமணம். சில ஆண்டுகளில் அந்த திருமணம் முறிவடைய மருத்துவம் படிப்பதற்காக ரஷ்யா மற்றும் உக்ரைனுக்குச் சென்றார். அங்கு சக சோமாலிய மாணவரைக் காதலித்து மணம்புரிந்துகொண்டு மீண்டும் நாடு திரும்பி சட்டம் படித்தார். காலையில் மருத்துவமனை மாலையில் சட்டப்படிப்பு என்று சென்றது அவரது வாழ்க்கை.
அங்கு உள்நாட்டு யுத்தம் உச்சக்கட்டத்தில் இருந்த போது, ஆயுதக் குழுக்கள்- இராணுவ நிலைகள், அரச கட்டடங்கள், பாடசாலைகள், மருத்துவமனைகள், பொது இடங்கள் என அனைத்து இடங்கள் மீதும் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருந்தன. எங்கும் பாதுகாப்பில்லாத சூழல் இருந்த காலம் அது. இத்துடன் பல ஆண்டுகளாக மழை பொய்த்ததால் நாட்டில் பஞ்சம் தலைவிரித்து ஆடியது. பெண்கள், குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். காயமடைந்தவர்கள் மற்றும் போஷாக்கின்மை காரணமாக நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவம் செய்வது கடும் சவாலான ஒன்றாக இருந்தது. மோதல்களுக்கு அப்பற்பட்டு அனைத்து ஆயுதக் குழுக்களும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தில் ஊறித்திளைத்திருந்தன. அதனால் பெண்களுக்கு பெண்களே மருத்துவம் செய்ய வேண்டும் போன்ற `தாலிபானிஸம்` நடைமுறையிலிருந்தது.
இப்படியான இக்கட்டான ஒரு நிலையில், மருத்துவர் ஹவா அப்தி தனக்குச் சொந்தமான பெரிய காணியில், சிறிய மருத்துவமனை ஒன்றை தொடங்கினார். அதை மருத்துவமனை என்று சொல்வதைவிட வைத்தியம் பார்ப்பதற்கான ஒரு குடிசை என்றுதான் அவர் கூறினார். அவரது வேண்டுகோளை ஏற்று அனைத்து ஆயுதக் குழுக்களும் அந்த இலக்கு-அதாவது- மருத்துவமனை மீது தாக்குதல் நடத்துவதில்லை என்று உடன்பட்டனர். அதன் காரணமாக பல கர்ப்பிணிப் பெண்கள் உயிர் தப்பினர். அந்த மருத்துவமனை சிறிது சிறிதாக வளர்ந்து இன்று சோமாலியாவிலேயே 400 படுக்கைகளைக் கொண்ட மிகப்பெரிய மருத்துவமனையாகத் திகழ்கிறது.
சோமாலியா இன்றளவும் தோல்வியடைந்த ஒரு நாடாகவே உள்ளது. அங்கு பல ஆண்டுகளாக நிலையான அரசாங்கம் இல்லை. இன மோதல் நாட்டை ஆட்டிப்படைக்கிறது. ஆயுதக் குழுக்களின் நடமாட்டம் சர்வசாதாரணம். கண்டவுடன் சுடுவது, கப்பம் கேட்டு ஆட்களைக் கடத்துவது, காணாமல் போவது, அப்படிக் காணாமல் போனவர்கள் அடுத்த நாள் சாலையோரம் அல்லது கடற்கரை அருகில் சடலமாகக் கண்டெடுக்கப்படுவது என்பதெல்லாம் மக்களுக்குப் பழகிப்போன ஒன்று. சோமாலியாவில் உள்நாட்டு யுத்தம் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டம் அது. அதாவது 1980 களின் பிற்பகுதியில் தொடங்கி இன்றுவரை நடைபெறும் அந்த மோதலுக்கு இன முரண்பாடுகள், ஆயுதக் குழுக்களிடையே சகோதரப் படுகொலைகள், நாட்டை காப்பாற்ற வேண்டும், மக்களின் இன்னல்களை போக்க வேண்டும் என்று இதய சுத்தியோடு செயல்பட்ட கல்விமான்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் படுகொலை செய்யப்பட்டது, ஸ்திரமற்ற அரசுகள் போன்றவையே அடிப்படைக் காரணங்கள்.
சுருக்கமாகச் சொல்வதென்றால் சோமாலியாவின் நிலையைப் புரிந்துகொள்வதற்கு இலங்கையின் உள்நாட்டு யுத்தம் மற்றும் அதற்கு முன்னரும் பின்னருமான சம்பவங்கள் ஆகியவற்றை புரிந்துகொண்டாலே போதும்.
சுமார் மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் சோமாலியாவில் தலைவிரித்து ஆடிய பஞ்சம் மற்றும் பட்டிணிச் சாவுகளை இன்னும் உலகம் மறக்கவில்லை. அப்போது வெளியான புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் உலகம் முழுவதும் பேசு பொருளாயின. அதிலும் குறிப்பாக கருப்பு வெள்ளைப் புகைப்படங்கள் மனதை உருக்கின. அந்த அவல சூழ்நிலையிலும் தம்மை வருத்திக்கொண்டு, அதே பசி பட்டிணியின் ஊடே பயணித்து புகைப்படச் செய்தியாளர்கள் எடுத்த படங்கள் மற்றும் செய்திச்சுருள் துண்டுகள் மிகவும் பிரபலமடைந்தன.
உலகில் உணவுப் பாதுகாப்பு இல்லாத ஒரு தேசமாக மாறிய சோமாலியா இன்றளவும் அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறது. ஸ்திரமான ஆட்சி இல்லாமையும், வெளிநாடுகளிலிருந்து உணவு மற்றும் இதர பொருட்களை இறக்குமதி செய்ய போதிய டாலர்கள் இல்லாமையும், உணவை பெற்றுக்கொள்ள முடியாத சூழலை அங்கு ஏற்படுத்தியுள்ளது. உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்ற பல பன்னாட்டு அமைப்புகள் சோமாலியாவிற்கு நிதியுதவி அளிக்கத் தயங்குகின்றன. சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறைச் சங்கங்களின் கூட்டமைப்பான International Federation of Red Cross and Red Crescent Societies (IFRC) நாடுகளில் நிலவும் உணவு நெருக்கடி குறித்து ஆண்டுதோறும் வெளியிடும் பட்டியல் பல நாடுகளுக்கு எச்சரிக்கை மணியாக உள்ளது. தற்போது வெளியாகியுள்ள அறிக்கையில் இந்த ஆண்டு (2022-2023) சோமாலியாவில் இயற்கை பேரிடர்களுக்கு அப்பாற்பட்டு தொடரும் ஸ்திரத்தன்மையற்ற அரசியல் நிலை, உணவு பாதுகாப்பின்மை, மோசமான அரசு நிர்வாகம் போன்ற பல காரணிகளால் நெருக்கடிகள் மேலும் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளது.
இந்த அறிக்கையை வாசித்தவுடன் இலங்கை குறித்த எனது கவலை மேலும் பன்மடங்காகியது. சோமாலியா குறித்துக் கூறப்பட்டிருக்கும் அனைத்து `கல்யாண குணங்களும்` இலங்கைக்கும் பொருந்தும் என்று நான் ஆழமாக நம்புகிறேன்.
அண்மையில், யாழ்ப்பாணத்தில் முதியவர் ஒருவர் இயலாத நிலையில் இரண்டு ராத்தல் பான் பெற்றுக்கொண்டு வீடு திரும்பும் போது அதை அவரிடமிருந்து பறித்துச்சென்ற அவல நிலை அரங்கேறியது. இது சாதாரணமானதொரு வழிப்பறி சம்பவமல்ல. நாட்டின் உணவுப் பற்றாக்குறையும், உணவு பாதுகாப்பின்மையும் எந்தளவுக்கு மோசமாகவுள்ளது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.
நாட்டில் நிலவும் நெருக்கடி குறித்து தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் கட்சி பேதமின்றி பொது விஷயங்களில் அரசியல் செய்யாமல் குரல்கொடுத்து வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் ஒரு உறுப்பினர் கட்சித் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்வுக்கு எழுதியுள்ள கடிதம் சில முக்கியப் பிரச்சனைகளை எழுப்பி சில தீர்வுகளையும் முன்வைக்கிறது. அந்த கடிதத்தில் பல யதார்த்தங்கள் உள்ளன.
இன்றளவும் இரண்டாந்தர குடிமக்களாக நடத்தப்படும் இந்திய வம்சாவளி தமிழர்கள் மட்டுமின்றி பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தரிசு காணிகளைப் பிரித்தளிப்பது பயனளிக்கும் என்று மனோ கணேசனின் கடிதம் கூறுகிறது. கோமாளித்தனமான கோத்தாபய ராஜபக்ச அரசு செய்த பல குழப்பங்களில் ஒன்று விவசாயத்திற்கான மிக முக்கிய உள்ளீடான உரத்தின் இறக்குமதியை தடை செய்தது. இதனால் நாட்டில் நெல் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு, அரசி இல்லாததால் மக்கள் சோற்றிற்கு அல்லாடும் நிலை ஏற்பட்டுள்ளது. உரப்பிரச்சனை தேயிலை உற்பத்தியையும் பாதித்துள்ளது. `அதன் காரணமாக தோட்டங்களில் வேலையில்லை, ஆகவே வருமானம் இல்லை. உணவுக்காக, மக்களிடையே அரிசி, கோதுமை வாங்க கையில் காசுமில்லை, கடைகளில் பொருளுமில்லை` என்று சுட்டிக்காட்டுகிறது மனோ கணேசனின் கடிதம்.
“இதனால் ஏற்கனவே வாழ்வாதாரம் இல்லாமல் மிகவும் நலிவடைந்த நிலையில் தோட்டங்களில் வாழும் மக்கள் மத்தியில் உணவுப் பஞ்சம் ஏற்படலாம். இன்னமும் சில மாதங்களில் பட்டினிச் சாவு வரலாம். இதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுங்கள்“ என்கிறது அவரது கடிதம். இதற்குத் தீர்வாகத் தோட்டங்களில் காணப்படும் பயிரிடப்படாத தரிசு நிலங்களைப் பிரித்து, அங்கு நிரந்தரமாக உழைக்கும் மக்களுக்கு வழங்கும்படி அவர் பிரதமரிடம் கோரியுள்ளார். விவசாய அமைச்சின் அனுசரணை மூலம் அவர்கள் அந்த நிலங்களில் குறுகிய காலத்தில் பயன் தரும் விளைபயிர்களைப் பயிரிட்டு தமது வீட்டுத் தேவைகளைப் பெற்றுக்கொள்வார்கள். அதேபோன்று நாட்டின் உணவுத் தேவைக்கு இந்த பயிரிடல் ஓரளவுக்கு வழி செய்யும் எனவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டின் மலையகப் பகுதியில் வேலை செய்யும் லட்சக்கணக்கான மக்கள் தொடர்ச்சியாக அரை வயிறு அளவிற்கே உண்டு வாழ்கிறார்கள் என்பது நாடறிந்த உண்மை. ஒப்பீட்டளவில் மலையகப் பகுதியிலேயே வறுமை அதிகம் நிலவுகிறது என்று அரச தரவுகள் கூறுகின்றன. அதே போல் அங்குதான் அதிகளவிலான மதுக்கடைகளும் உள்ளன. மிகவும் வறிய நிலையில் முதுகு முறிய உழைக்கும் தொழிலாளிகள் பணம் இந்த மதுக்கடை உரிமையாளர்களின் பைகளை நிரப்புகிறது. வடக்கு கிழக்கு பகுதிகளிலும் நிலைமை பெருமளவில் இதேபோன்றே உள்ளது. அங்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படாமல் இன்னும் இராணுவத்தின் பிடியிலேயே உள்ளது. அந்த நிலங்கள் உரிமையாளர்களுக்கு கிடைத்தால், அது அவர்களுக்கான உணவுத் தேவையை ஓரளவிற்கு நிறைவு செய்வதோடு, நாட்டின் உணவு பற்றாக்குறையைச் சமாளிக்கவும் உதவக் கூடும்.
“நாட்டின் இன்றைய பொருளாதார நெருக்கடியினால், இன்னும் சில மாதங்களில் உண்ண உணவின்றி நம் நாட்டில் பட்டினிச் சாவை சந்திக்கக் கூடியவர்களில் முதன்மை நிலையில் மலையக மக்களே இருப்பார்கள்“.
இலங்கையில் இன்று மாவுக்கும் மண்ணெண்னைய்க்கும் மக்கள் அல்லாடுவது அன்றாட நடவடிக்கையாகிவிட்டது. மக்கள் மீண்டும் விறகு அடுப்பிற்குத் திரும்பியுள்ளனர். இந்தியாவிடமிருந்து கிடைத்த உதவி நாட்டின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய இயலாது. பௌத்தத்தைப் பேணும் இலங்கை அரசு பிக்குமார்கள் தானம் கேட்பதுபோல் பௌத்த நாடுகளான தாய்லாந்து, பர்மா, வியட்நாம், கம்போடியா போன்று அரசி உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடுகளிடமிருந்தும் அவர்களின் மிக நெருங்கிய கூட்டாளிகளான சீனா மற்றும் பாகிஸ்தானிடமிருந்தும், வங்கதேசத்திடமிருந்தும் உணவு தானத்தைப் பெற முன்வர வேண்டும். நாட்டில் அனைத்திற்கும் மகாசங்கத்தினரை ஆலோசனை கேட்கும் ஆட்சியாளர்கள் ஏன் இதுவரை நாட்டில் நிலவும் உணவுத் தட்டுப்பாட்டைத் தீர்க்க அவர்களிடம் ஆலோசனை கேட்கவில்லை?
இன்று இலங்கை இருக்கும் நிலை அதற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மணியாகும். ராஜபக்சக்களும் ரணிலும் விழித்துக் கொண்டு உடனடியாக பிச்சைப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு உலகை வலம் வந்தால் மட்டுமே மக்களின் வயிற்றுப்பசியைத் தீர்க்க முடியும். தமது நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்வதையே குறியாகக் கொண்டிருந்தால் `ஆசியாவின் அதிசயமான` இலங்கை ஆசியாவின் சோமாலியாவாக மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை.
லண்டனில் சில ஆண்டுகளுக்கு முன் சோமாலிய நாட்டைச் சேர்ந்த நண்பர்களுடன் ஹவா அப்தியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்த போது அது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு தருணமாக இருந்தது. அவருக்கு போர் மற்றும் அதன் பாதிப்பு குறித்து ஆழமான புரிதல் இருந்தது. நான் இலங்கையைச் சேர்ந்தவர் என்று கருதி என்னிடம் கூறினார்:
“தம்பி சிவா, உங்கள் நாடும் எமது நாடு போல ஆகிவிடக் கூடாது என்கிற கவலை மட்டுமல்ல அச்சமும் எனக்குள்ளது. அங்கு நடந்தவற்றை நான் கேள்விப்பட்டுள்ளேன், அங்கு உணவின்றி யாரும் அல்லாடும் நிலை வரக் கூடாது, இதை உங்கள் ஆட்சியாளர்கள் காதில் போட்டு வையுங்கள்“