மன்னார் நிருபர்
(3-06-2022)
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பல்வேறு சிக்கல்களை மக்கள் தொடர்சியாக சந்தித்த வண்ணம் உள்ளனர்.
பொருட்களின் விலைவாசி உணவு தட்டுப்பாடும் நாட்டில் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது.
இவ்வாறான நிலையிலும் மன்னார் மாவட்டத்தில் கீரி கிராம சேவகர் பிரிவில் உள்ள அன்பு சகோதரர் இல்லமானது ஏழை பிள்ளைகள் மற்றும் தாய் தந்தையை இழந்த அல்லது அவர்களில் ஒருவரை இழந்து வறுமையில் வாடும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கான கல்வி மற்றும் உணவு, உடை உறைவிடம், போன்ற தேவைகளை நிறைவேற்றி வருகின்றனர்.
அதே நேரம் நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் கல்விக்கும் கைகொடுத்து வருகின்றது இந்த அன்பு சகோதரர் இல்லம்.
மன்னாரை சேர்ந்த தருமன், வீமன் எனும் இரு சகோதரர்களால், ஏழைகளின் நல்வாழ்வுக்காக உதவ எண்ணிய சில நல் உள்ளங்களுடன் இணைந்து 2001 ஆண்டு இந்த இல்லம் ஆரம்பிக்கப்பட்டது.
இவ் இல்லமானது வடமாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்களத்திலும், மன்னார் பிரதேச செயலகத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் 20 வருடங்களுக்கு மேலாக செயற்பட்டு வரும் இவ் இல்லம் பிள்ளைகளின் கல்வி மாத்திரம் இல்லாமல் ஒழுக்கம், சுயதொழில் பயிற்சி,விளையாட்டு போன்ற பல்வேறு விடயங்களை அவர்களின் கல்வி திட்டத்தின் ஊடாக கற்பித்து வருகின்றனர்.
பெரும்பாலும் மன்னார் மாவட்டத்தில் பின்தங்கிய கிராமங்களை சேர்ந்த அதிகளவான பிள்ளைகள் இங்கு தங்கி தங்கள் கற்றல் நடவடிக்கைகளை இலவசமாக பெற்றுக் கொள்கிறார்கள்.
மேலும் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள், அதே நேரம் தாய் தந்தை விவாகரத்து காரணமாக பிரிந்து வாழும் கல்வியை தொடர முடியாது கஸ்ரப்படும் பிள்ளைகளும் அன்பு சகோதரர் இல்லத்தின் ஊடாக பயன் அடைந்து வருகின்றனர்.
குறிப்பாக இங்கு பராமரிக்கப் பட்டவர்கள் தற்போது அரச வேலைகளிலும், தனியார் நிறுவனங்களிலும் வேலை செய்வதோடு, சமுதாயத்தில் நற்பிரஜைகளாக வாழ்ந்து வருகிறார்கள். இன்னும் சிலர் பல்கலை கழகங்களிற்கும் தெரிவாகியுள்ளமை பாராட்டுக்குரியதாகும் .
சிலர் இல்லத்தில் கல்வி கற்று இவ் இல்லத்திலேயே பணியாற்றியும் வருகின்றனர். இவ்வாறன பணிகளை செய்து வருகின்ற இவ் இல்லத்திற்கு உங்களின் அன்பான ஆதரவு அவர்களின் செயற்பாட்டையும் சேவையையும் என்னும் விரிவுபடுத்த உதவலாம்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையை சமாளிக்க உதவக்கூடிய, ஏழைச் சிறுவர்களின் கல்வியில் ஆர்வம் கொண்ட நன்கொடையாளர்கள் உதவ முடிந்தால் நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்.
அதேவேளையில், எவ்வளவு நெருக்கடி வந்தாலும் இந்த சேவையை நாங்கள் நிறுத்த போவதில்லை என தெரிவித்துள்ள நிர்வாகத்தினர், குடும்ப வறுமை மற்றும் தாய் தந்தையை இழந்த, கல்வியை தொடர முடியாத பிள்ளைகள் யாராக இருந்தாலும் தங்களுடன் இணைந்து கொள்ளுமாற்றும் எத்தகைய பொருளாதார பிரச்சினையாக இருந்தாலும் தங்கள் முடிந்த சேவையை அவர்களுக்கு வழங்கி அவர்களை சமூகத்தில் நல்ல பிரஜைகளாக்க அனைத்து முயற்சிகளையும் செய்வதாக அன்பு சகோதரர் இல்ல நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
சுயநலமாக வாழும் இவ் உலகத்தில் 20 வருடங்களுக்கு மேலாக ஏழை பிள்ளைகளின் முன்னேற்றத்திற்காக செயற்படும் இவ்வாறான இல்லங்கள் தொடர்ந்து இயங்குவதே எமது சமூகத்தின் தேவை.
எனவே எங்களால் ஆன உதவிகளை செய்வோம். அது பணமாக இருக்கலாம் பொருளாக இருக்கலாம் ஏன் ஒரு வேளை உணவாக இருக்கலாம். அதுவும் அந்த ஏழை சிறுவர்களின் எதிர்காலத்தை மாற்றும் என்பதில் எதுவித சந்தேகமுமில்லை.