அயல் கிராம மக்கள் பதற்றமடைய தேவையில்லை-பிரதேச செயலாளர்
மன்னார் நிருபர்
(08-06-2022)
நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அச்சங்குளம் கிராமத்தில் நாளை வியாழக்கிழமை (9) காலை சுனாமி ஒத்திகை இடம் பெற உள்ளதால் அயல் கிராம மக்கள் அச்சமடைய தேவையில்லை என நானாட்டான் பிரதேச செயலாளர் மா. ஸ்ரீஸ்கந்த குமார் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் அச்சங்குளம் கிராம சேவையாளர் பிரிவில் உள்ள அச்சங்குளம், அறுகுக்குன்று போன்ற கடற்கரையோர பிரதேசங்களில் எதிர் காலத்தில் சுனாமி சம்பந்தமான அனர்த்த நடவடிக்கைகளில் இருந்து மக்களை விழிப்பூட்டுவதற்கும் அது சம்பந்தமான அறிவைப் பெற்றுக் கொள்வதற்குமான ஒத்திகை நிகழ்வு நாளை தினம் (9/6/2022) காலை 10 மணி தொடக்கம் 12 மணி வரையான காலப்பகுதிக்குள் நடைபெற உள்ளது.
சுனாமி நடைபெறும் போது எவ்வாறு தற்காத்துக் கொள்வது போன்ற ஒத்திகை நிகழ்வு மாத்திரம் இடம்பெறும்.
இது ஒரு உண்மையான சம்பவம் அல்ல.
ஏனைய அயல் கிராமத்து மக்கள் இது குறித்த ஒத்திகை குறித்து பதற்றமடைய தேவையில்லை. என நானாட்டான் பிரதேச செயலாளர். மா ஸ்ரீஸ்கந்த குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.