யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்
ரனில் விக்ரமசிங்கவை இலங்கை கிறிக்கட் அணித்தலைவராக நியமித்தால்….
“அடுத்து வரும் போட்டிகளில் எமக்கு வீசுவதற்கு ஒரு பஞ்சு கட்டி கூட கிடைக்காது“
“இனி வரும் ஆட்டங்களில் இடை வேளையில் மூன்று மிடறு தண்ணீருக்கு பதிலா இரண்டு மிடறு தண்ணீரையே பருக வேண்டி வரும்“
“ஒக்டோபர் மாதம் வரும் போது கிறிக்கட் மட்டைக்கு பதிலாக நாங்கள் தென்னம் மட்டையே பயன் படுத்த வேண்டி வரும்“
“உக்ரேன் வீரர்களுடன் கிறிக்கட்டும் அதே விக்கட்டால் ரஷ்ய வீரர்களுடன் கிட்டிப்புள்ளும் விளையாடுங்கள்“…….
இவ்வாறு முகநூலில் எழுதியிருப்பவர் ஒரு முஸ்லிம் நண்பர் ரணில் விக்ரமசிங்க பிரதமராகப் பதவி ஏற்றதிலிருந்து தொடங்கி நாட்டுமக்களுக்கு, நாட்டின் பொருளாதார நிலைமைகள் தொடர்பாக உண்மையான விவரங்களை தெரிவிக்கப்படுகின்றன என்ற ஒரு தோற்றத்தை படிப்படியாக கட்டி எழுப்பி வருகிறார். அவர் தெரிவிக்கும் தகவல்கள் உண்மையோ இல்லையோ அவர் மக்களுக்கு எதையும் மறைக்கவில்லை என்ற ஒரு தோற்றம் வெற்றிகரமாக கட்டி எழுப்பப்பட்டு வருகிறது. நாட்டில் எவ்வளவு டொலர் கையிருப்பில் உண்டு? எவ்வளவு எரிபொருள் எரிவாயு உண்டு? எரிபொருளும் எரிவாயுவும் எப்பொழுது வரும்? எவ்வளவு வரும்? எவ்வளவு அரிசி உண்டு? எவ்வளவு அரிசி தேவை? உரம் எப்பொழுது வரும் ?பஞ்சம் எப்பொழுது வரும்? போன்ற எல்லாவற்றையும் அவர் வெளிப்படையாகப் பேசுகிறார்.
அவர் இவ்வாறு வெளிப்படையாக தகவல்களை தெரிவிப்பதன்மூலம் வியாபாரிகள் பொருட்களை பதறுகிறார்கள் என்று ஒரு விமர்சனம் எழுந்திருக்கிறது.நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பாக ரணில் தெரிவிக்கும் தகவல்கள் அதிகம் பீதியூட்டக் கூடியவை. அதனால் வியாபாரிகள் பொருட்களைப் பதுக்குகிறார்கள் என்று விமர்சிக்கப்படுகிறது. ஆனால் இது விடயத்தில் ரனில் தன்னை வெளிப்படையான ஒரு தலைவராக காட்டிக் கொள்ளப்பார்க்கிறார். நடப்பு நிலைமைகளுக்கு தான் பொறுப்பில்லை என்று காட்டிக்கொள்ள பார்க்கிறார். இந்த நிலைமை வரக்காரணம் ராஜபக்சக்கள் தான் என்பதனை மறைமுகமாக உணர்த்துகிறார். இந்த வெளிப்படைத் தன்மை உடனடிக்கு பதுக்கலை ஊக்குவித்தலும், காலப்போக்கில் அவர் கூறியதுபோல நிலைமைகள் நடக்கும் பொழுது மக்கள் அவர் மீது நம்பிக்கை வைக்க தொடங்குவார்கள். ராஜபக்சக்களைவிட ரணில் பரவாயில்லை என்பது ஒரு பொதுவான அபிப்பிராயம். மேற்கு நாடுகளையும் சர்வதேச நாணய நிதியம் போன்ற சர்வதேச நிறுவனங்களையும் கவர்வதற்கு அது உதவக்கூடும் என்று சிங்கள நடுத்தர வர்க்கம் கருதுகின்றது.
பிரதமராக பதவியேற்றதிலிருந்து தொடங்கி இன்றுவரையிலும் ரணில்,மேற்கு நாடுகள், சர்வதேச நாணய நிதியம் போன்ற தரப்புகளை எப்படி திருப்திப்படுத்தலாம் என்று சிந்தித்து வருகிறார். அந்த அடிப்படையில் அவர் முன்னெடுத்த மாற்றங்களை பின்வருமாறு வரிசைப்படுத்தலாம்….
முதலாவதாக 21ஆவது திருத்தச்சட்டம்.அது ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்து அவரை நாடாளுமன்றத்துக்கு பொறுப்புக்கூற வைப்பது. இதன்மூலம் ஜனாதிபதி கோட்டாபய பலவீனமாக்கப்பட்டுவிட்டார் என்று ஒரு தோற்றத்தை வெளியுலகத்திற்கு காட்டலாம். அதைத்தான் சர்வதேச நாணய நிதியமும் எதிர்பார்ப்பதாக தெரிகிறது . எனவே 21ஆவது திருத்தத்தின்மூலம் அப்படி ஒரு தோற்றத்தை கட்டியெழுப்ப கோட்டா ரணில் கூட்டு முயற்சிக்கின்றது.
இரண்டாவது,மேலோட்டமான ஒரு ராணுவ மயநீக்கம் நிகழ்ந்துவருகிறது. அதன்படி அமைச்சுக்களின் செயலர்களாக இருந்த சில ராணுவ பிரதானிகள் மாற்றப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக வெளியுறவுச் செயலராக இருந்த முன்னாள் கடற்படை பிரதானி மாற்றப்பட்டு ஒரு பெண் ராஜதந்திரி நியமிக்கப்பட்டிருக்கிறார். இவ்வாறான நியமனங்களின்மூலம் நாடு ராணுவ மய நீக்கம் செய்யப்படுகிறது என்ற ஒரு தோற்றம் உருவாக்கப்படும்.
மூன்றாவது சவேந்திர சில்வாவின் பொறுப்புக்கள் மாற்றப்பட்டிருப்பது. அமெரிக்காவினால் பயணத் தடை விதிக்கப்பட்ட ஒரு தளபதி அவர். எனவே அவரை முன்னைய பொறுப்பிலிருந்து மாற்றியதன் மூலம் குற்றச்சாட்டுக்களுக்கு இலக்காகியிருக்கும் நபர்களை பொறுப்புகளிலிருந்து நீக்கிவருவதாக ஒரு தோற்றத்தை காட்டலாம்.
நாலாவது பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரவின் கொலைக் குற்றவாளியான துமிந்தசில்வாவுக்கு ஜனாதிபதியால் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு இடை நிறுத்தப்பட்டிருக்கிறது. அதுபோலவே பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்க்பட்ட வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்ட 9 பேரும் ஜூன் 13வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஐந்தாவது கோட்டா கோகம, மைனா கோகம ஆகிய போராட்ட கிராமங்களின் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் சிலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
ஆறாவது குறிப்பிட்ட ஒரு தொகுதி பொருட்களின் மீதான வரி அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
மேற்கண்ட மாற்றங்களின்மூலம் நாட்டின் நீதித்துறை சுயாதீனமாக இயங்குகிறது என்ற ஒரு தோற்றத்தையும், நாட்டில் ராணுவமய நீக்கம் நிகழ்கிறது என்ற ஒரு தோற்றத்தையும், ராஜபக்சவின் அதிகாரம் குறைக்கப்படுகிறது என்று ஒரு தோற்றத்தையும் கட்டியெழுப்புவதே ரணில் கோத்தா கூட்டின் நோக்கமாகும்.
அப்படி ஒரு தோற்றம் கட்டி எழுப்பப்பட்டால் மேற்கு நாடுகளையும் ஐஎம்எப் போன்ற பன்னாட்டு நிறுவனங்களையும் கவரலாம் என்று ரணில் அரசாங்கம் சிந்திக்கிறது.
ஒருபுறம் இந்தியா நாட்டுக்கு சேலைன் ஏற்றிக்கொண்டிருக்கிறது. இந்தியா வேண்டுமென்றே திட்டமிட்டு சிறுகச்சிறுக உதவிகளைச் செய்துவருகிறது. உடனடியாக பெருமெடுப்பில் உதவிகளைச் செய்யாமல், சேலைன் ஏற்றுவது போல சிறு சிறுத்துளியாக இந்திய உதவிகள் கிடைக்கின்றன. இதன்மூலம் இந்தியா தனது அருமையை உணர்த்த முற்படுகிறது.
பெருமெடுப்பிலான உதவிகள் அடுத்தடுத்த மாதங்களில் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைக்கலாம் என்று ரணில் விக்ரமசிங்க எதிர்பார்க்கிறார். ஆனால் அதற்கிடையே அரிசிக்கு தட்டுப்பாடு வரலாம் என்றும் எச்சரிக்கிறார்.
மின்வெட்டு ஒப்பீட்டளவில் நேரம் குறைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் எரிபொருளுக்காக கிலோமீட்டர் கணக்கில் வாகனங்கள் வரிசையாக நிற்கின்றன. சிலவிடங்களில் 2எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காத்திருக்கும் வரிசைகள் ஒன்று மற்றதை சந்திக்கும் நிலைமையும் ஏற்படுகிறது?
எரிவாயுவும் அனேகமாக இல்லை. பால் மாவையும் காணமுடியவில்லை. கோழி முட்டையின் விலை நாற்பத்து இரண்டு ரூபாயை தாண்டுகிறது. மரக்கறி, மீன், மாமிசம் போன்றவற்றின் விலைகளும் அதிகரித்துச் செல்கின்றன.ஏறிய விதைகள் எவையும் இறங்கவேயில்லை. ரணில் விக்ரமசிங்க எதிர்வு கூறும் ஆகஸ்ட் மாதத்திற்கு பின்னரான உணவுத் தட்டுப்பாட்டின்போது அரிசியின் விலை 500 ரூபாயை தாண்டும் என்ற ஒரு எதிர்பார்ப்பு உண்டு. இப்பொழுது ஒரு கிலோ அரிசி 2560 ரூபாய்க்கு மேல் போகிறது.
மிருகக்காட்சி சாலைகளில் பாதுகாக்கப்படும் மிருகங்களுக்கு சாப்பாடு கொடுக்க முடியாத ஒரு நிலை. அதனால் ஒரு தொகுதி மிருகங்களை காட்டுக்கு மாற்றுவது குறித்து அரசாங்கம் சிந்திப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மனிதர்களுக்கு மூன்று வேளை சாப்பாட்டை உறுதிப்படுத்த முடியாத ஒரு அரசாங்கம் எப்படி மிருகங்களுக்கு சாப்பாடு கொடுக்கும்?
பெண்கள் மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும் சனிற்றரி நப்கின்களுக்கும் தட்டுப்பாடு வந்துள்ளதாக ஒரு கட்டுரை அண்மையில் “சவுத் சைனா மோர்னிங் போஸ்ற்” என்ற ஒரு இணைய சஞ்சிகையில் வெளிவந்திருந்தது. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சனிற்றரி நப்கின்களுக்கு அரசாங்கம் அதிக வரிவிதிக்கின்றது. அதனால் அவற்றை கொள்வனவு செய்யும் வலிமை ஏழைகளுக்கு இல்லை. அதேசமயம் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சனிற்றரி நப்கின்களுடைய விலைகளும் அதிகரித்துவிட்டன. இதனால் பாடசாலைக்குச் செல்லும் பெண்களும் வேலை பார்க்கும் பெண்களும் சனிற்றரி நப்கினா ? சாப்பாடா? என்று சிந்திக்கும் ஒரு நிலைமை வந்திருப்பதாக அக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சனிற்றரி நப்கின்களை வாங்கமுடியாத மாணவிகள் பாடசாலைகளுக்கு வருவதை தவிர்ப்பதாகக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இதுபோன்று கடந்த மாதம் 28ஆம் திகதி “தெ டெலிகிராப்” இணையத்தளத்தில் வெளிவந்த மற்றொரு கட்டுரையில்,ஆடைத் தொழிற்துறையைச் சேர்ந்த ஒரு தொகுதி பெண்கள் வேலையின்மை,வறுமை காரணமாக பாலியல் தொழிலை நோக்கிச் செல்வதாக கூறப்பட்டுள்ளது.
இதுதான் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னரான நாட்டின் நிலை. எனினும்,ஆர்ப்பாட்டங்கள் ஒப்பீட்டளவில் குறைவாகவே காணப்படுகின்றன. மக்கள் அதிகரித்த அளவில், அதிகரித்த நேரம் எரிபொருள், எரிவாயு வரிசைகளில் நிற்பதனால்,அவர்களுக்கு போராட நேரம் இல்லை என்று ஒரு ஊடகவியலாளர் நகைச்சுவையாக சொன்னார்.
கோட்டா கோ கம கிராமம் சோர்ந்து போய்விட்டது என்று ஒரு கருத்து உண்டு. அது உண்மையல்ல என்று அங்கிருப்பவர்கள் கூறுகிறார்கள். தொடக்கத்தில் அந்த ஆர்ப்பாட்ட கிராமத்தை நோக்கி ஆயிரக்கணக்கில் மக்கள் தினந்தோறும் வருகை தந்தார்கள். ஆனால் இப்போது அவ்வாறு வருபவர்களின் தொகை ஒப்பீட்டளவில் குறைந்துவிட்டதாக அவதானிக்கப்பட்டுள்ளது. எனினும் கடந்த வாரம் கோட்டாகோ கமவில் ஒரு வானொலிச் சேவை ஆரம்பிக்கப்பட்டது. அக்கிராமத்தைப் பற்றிய செய்திகளை மக்கள் மத்தியில் பரப்புவதற்காக அந்த ஏற்பாடு என்று கூறப்படுகிறது. அதாவது காலிமுகத்திடலில் போராடும் தரப்புக்கள் தமது போராட்டத்தை இப்போதைக்குக் கைவிடப்போவதில்லை என்பதனை அது உணர்த்துகிறது.
ஆனால் கோத்தா+ரணில் அரசாங்கமானது அந்த ஆர்ப்பாட்டங்களை குறித்து அதிகம் அலட்டிக் கொள்வதாக தெரியவில்லை. அந்த ஆர்ப்பாட்டங்களின் மீது கை வைக்காமல் விட்டால் அவை தாமாக சோர்ந்து போய்விடும் என்று அவர்கள் கணக்குப் போடுகிறார்கள். அமெரிக்காவின் வோல்ற் ஸ்ட்ரீட் முற்றுகைப் போராட்டம் அப்படித்தான் தானாகச் சோர்ந்து போனது என்ற அடிப்படையில் அவர்கள் கோட்ட கோ கம கிராமமும் ஒருநாள் சோர்ந்து போய்விடும் என்று எதிர்பார்க்கிறார்கள். குறிப்பாக வெளி உதவிகளின் மூலம் பொருளாதாரத்தை ஒப்பீட்டளவில் பரவாயில்லை ஒரு நிலைக்கு நிமிர்த்த முடிந்தால் அதன் பின் கோட்டா கோ கமவில் போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு மக்கள் ஆதரவு மேலும் குறைந்துவிடும் என்ற எதிர்பார்ப்பே அணில் போட்டா கூட்டிடம் காணப்படுகிறது.
எனவே போராட்டத்தை கொடுக்க முற்படாமல், அதை அதன் போக்கில் விட்டால் அது ஒரு கட்டத்தில் தானாகச் சோர்ந்து போய்விடும் என்று அவர்கள் எதிர்பார்ப்பது தெரிகிறது. நாட்டின் நிலைமையை மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிப்பதன்மூலம் ரணில் தான் ஒரு மந்திரவாதி இல்லை என்பதைக் காட்ட முற்படுகிறார்.உண்மைதான் அவர் ஒரு மந்திரவாதி இல்லை. ஆனால் தந்திரசாலி.