(மன்னார் நிருபர்)
(09-06-2022)
தலைமன்னார் ஊர்மனை கடற்கரை பற்றைக்காட்டு பகுதியில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் உயர்ந்த ரக 5 ஆடுகள் தலைமன்னார் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
-கடந்த வெள்ளிக்கிழமை (9) இரவு தலைமன்னார் கிராமம் கடற்கரை பகுதியில் உள்ள பற்றைக் காட்டில் உயர்ந்த ரக ஆடுகள் கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடப்பதை அவதானித்த தலைமன்னார் கடற்படையினர் குறித்த ஆடுகளை மீட்டு தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
-குறித்த உயர் ரக 5 ஆடுகளில் நான்கு ஆண் ஆடுகளும், ஒரு பெண் ஆடும் உள்ளடங்குகின்றன.
குறித்த உயர் ரக ஆடுகள் இந்தியாவுக்கு கடத்தி செல்லப்படும் நோக்கில் கால்கள் கட்டப்பட்டு கிடந்ததன் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் தலைமன்னார் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இதன் போது தலைமன்னார் கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது ஆடுகளை காணவில்லை என்றும் குறித்த ஆடுகள் தலை மன்னார் பொலிஸ் நிலையத்தில் இருப்பதை அறிந்து உரிமை கோரியுள்ளார்.
-இதனையடுத்து நேற்று புதன்கிழமை (8) மன்னார் நீதி மன்றில் குறித்த சம்பவத்தை தலைமன்னார் பொலிஸார் முற்படுத்தினர்.
இதன் போது உரிமையாளரின் ஆவணங்களை பரிசீலித்த நீதவான் ஆவணங்களில் தெளிவில்லாத தன்மை குறித்து சரியான ஆவணங்களை நீதிமன்றிற்கு முற்படுத்துமாறும் அது வரை ஆடுகள் தலை மன்னார் பொலிஸ் நிலையத்தின் கண்காணிப்பில் பராமரிப்பை மேற்கொள்ளுமாறும் நீதவான் உத்தரவிட்டதை அடுத்து குறித்த ஆடுகள் தலை மன்னார் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டு பராமரிக்க பட்டுகின்றது.
-மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.