வி.தேவராஜ்
மூத்த ஊடகவியலாளர்
ராஜபக்சக்கள் கோதாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி ஆக்குமாறு தென்னிலங்கையைக் கோரினர். 69 இலட்சம் வாக்குகளை அளித்து தென்னிலங்கை மக்கள் அவரை ஜனாதிபதியாக்கினர். நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைத் தாருங்கள் என்று ராஜபக்ஷக்கள் தென்னிலங்கையிடம் கோரினர். ஆந்தக் கோரிக்கையையும் தென்னிலங்கை மக்கள் நிறைவேற்றி வைத்தனர்.
ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத்துக்கான மக்கள் ஆணையை வைத்துக் கொண்டு 20வது திருத்தத்தைக் கொண்டு வந்து ஜனாதிபதியை சர்வாதிகாரியாக மகுடம் சூட்டினர்..தென்னிலங்கை மக்கள் வெறும் பார்வையாளராகப் பார்த்துக் கொண்டிருந்தனர். ராஜபக்சக்கள் தமது குடும்பத்துக்கு ஏற்றாற் போல் சட்டத் திருத்தங்களைக் கொண்டு வந்தனர். அப்பொழுதும் தென்னிலங்கை பார்த்துக் கொண்டிருந்தது.
நாடு சூறையாடப்பட்டது. இலங்கையின் கஜானா காலியாகியது. எல்லாவற்றுக்கும் மக்கள் வரிசையில் நிற்க வேண்டியதாயிற்று. நாட்டை ராஜபக்ஷ குடும்பமும் அவர்களுடன் இணைந்த ஆளும் வர்க்கமும் மீள முடியாத கடன் பொறியில் தள்ளினர். இறுதியாக முழு நாட்டையும் மக்களையும் ‘படடினிப் பொறிக்குள்’ தள்ளினர்.
அப்பொழுதுதான் தென்னிலங்கை விழித்தது. விழித்து என்ன பயன் எல்லாமே கட்டு மீறிப் போய்விட்டது.
‘கோதா கோ’ என தென்னிலங்கை இளைஞர்களும் யுவதிகளும் களத்தில் இறங்கினர். காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ‘கோதா கோ கம’ என்ற கிராமத்தையே உருவாக்கினர். இந்த தென்னிலங்கை இளைஞர் யுவதிகளின் கருத்தியல் தென்னிலங்கை மக்களின் உணர்வுகளைக் கிளறியது. நாடு தழுவிய போராட்டம் மற்றும் தென்னிலங்கையில் பல இடங்களில் ‘கோதா கோ கம’ கிராமங்கள் உருவாகின.
அலரி மாளிகைக்கு முன்பாக ‘மைனா கோ கம’ உருவாகியது. இவைகளுடன் ‘கபுடா கா கா’ வும் இணைந்து கொண்டது.
– பாசாங்கு அரசியல்
இதன் எதிரொலியாக பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ஷ ராஜினாமா செய்தார். ராஜபக்ஷ குடும்பத்தினர் அமைச்சுப் பதவிகளைத் துறந்தனர்.21 வது திருத்தம் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் பற்றிப் பேசப்படும் நிலையில் மொட்டுக் கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தனக்கு தேசியப் பட்டியல் மூலம் கிடைத்த நாடாளுடமன்றப் பதவியை இராஜினாமா செய்துள்ளார். இது 21வது திருத்தத்துடன் தொடர்புபட்ட வெளி நாட்டுப் பிரஜை குறித்த விடயத்தைப் போசாமல் இருப்பதற்கான காய் நகர்த்தலாகவே உள்ளது.
இவ்வாறு தோல்வியை ஒப்புக் கொள்வது போன்று ராஜபக்ஷக்கள் பாசாங்கு காட்டிய அதேவேளை மறு புறம்
– மக்கள் வழங்கிய ஆணையைக் கேடயமாக்கி அரசியலமைப்பு ரீதியில் தம்மை ஸ்திரப்படுத்திக் கொண்டனர்.
– தமக்கென ஒரு விசுவாசியை பிரதமராக்கி ‘மொட்டுக் கட்சியின்’ அமைச்சரவையையும் அமைத்து ‘ஒரு சமாளிப்பு’ ஆட்சியை நடத்தத் தொடங்கிவிட்டனர்.
– பதவி விலகப்போவதில்லையென ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார். நாட்டையும் மக்களையும் படு குழிக்குள் வீழ்த்தியதை ஒப்புக் கொள்ளும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தான் தோல்வியுற்ற ஜனாதிபதியாக வெளியேறப் போவதில்லை. மக்கள் வழங்கிய ஆணைக்கேற்ப தொடர்ந்தும் பதவியில் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
– பஷpல் ராஜபக்ஷ நாடாளுமன்றப் பதவியைத் துறந்து சாதாரண பிரஜையாகியுள்ளதாக வியாழக் கிழமை (9 மே 2022) அறிவித்துள்ளார். அதேவேளையில் தான் தொடர்ந்தும் பொது ஜன பெரமுன கட்சியின் நலன்களுக்காக அரசியலில் இருக்கப் போவதாகவும் அறிவித்துள்ளார்.
மொத்தத்தில் ராஜபக்ஷக்கள் ஜனாதிபதி பதவி மற்றும் பொது ஜன பெரமுன கட்சியின் நடாளுமன்ற பலத்தைக் கைகளில் வைத்துள்ள பஷpல் ராஜபக்ஷ மூலம் தொடர்ந்தும் இலங்கை அரசியலில் ‘கிங் மேக்கராக’ கோலோச்ச காய்களை நகர்த்தியுள்ளனர்.
இலங்கை அரசியலில் இதுவரை முடிசூடா மன்னர்;களாக இருந்த ராஜபக்ஷக்கள் இன்று ‘கிங் மேக்கர்’ அரசியலை நடத்தத் தொடங்கிவிட்டனர்.
மக்களுக்கு ஆணை வழங்க அனுமதித்துள்ள அரசியலமைப்பு அந்த ஆணை மீறப்படும் போது: அல்லது துஷ;பிரயோகம் செய்யப்படும் போது அந்த ஆணையை மக்களால் மீளப் பெறுவதற்கான அனுமதியை அரசியலமைப்பு வழங்கவில்லை. மக்களின் ஆணை பெற்று ஆட்சியில் அமர்ந்துள்ள ஆளும் எதிர்க் கட்சிகளுக்கிடையிலான பலப் பரீட்சையிலேயே மக்கள் ஆணை தீர்மானிக்கப்படுகின்றது. அடுத்த தேர்தல் நடைபெறும்;வரை ‘ஆணை வழங்கிய மக்கள்’ வெறும் பார்வையாளர்களாக இருந்துவிட்டுப் போக வேண்டியதுதான் என்பதுதான் அரசியல்வாதிகளின் நிலைப்பாடாக உள்ளது. அரசியலமைப்பின் ஏற்பாடாகவும் உள்ளது.
இலங்கை அரசியலில் இதுதான் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
‘கோதா கோ கம’ இளைஞர் யுவதிகளினதும் தென்னிலங்கை மக்களினதும் அரசியல் அபிலாiஷகளுக்கு தீனி போடுவதாக ஜதேக தலைவர் ரணில்விக்ரமசிங்கவை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள ‘அரசியல் நாடகம்’ மற்றும் ‘கிங் மேக்கர்’ அரசியல் அமையப்போவதில்லை என தென்னிலங்கை உரத்துக் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளது. கடந்த நல்லாட்சி காலத்தில் அன்றைய பிரதமரும் இன்றைய பிரதமருமான ரணில்விக்ரம சிங்க மற்றும் அவருடன் அமைச்சரவையில் அமர்ந்துள்ள அமைச்சர்களும் ராஜபக்ஷக்களை காப்பாற்றிய நகர்வுகளை நாடே அறியும்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அரசியலில் ‘ஒட்சிசன்’ தேவைப்படுகின்றது. ராஜபக்ஷ குடும்பங்கள் போட்ட ‘பிரதமர் பதவி பிச்சை’ மாத்திரம் இலங்கை அரசியலில் தனக்கும் தான் தலைமையேற்றிருக்கும் ஜக்கிய தேசிய கட்சிக்குமான அரசியல் பாதையை அமைத்துக் கொள்ள போதுமானதல்ல என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். எனவே அவசரப்பட்டு விரைவில் ஒரு தேர்தலுக்கு முகம் கொடுக்க அவர் முன்வரமாட்டார்.
ராஜபக்ஷக்களுக்கும் நாட்டில் ஒரு தேர்தல் வருவதை விரும்பும் நிலையில் இல்லை. ராஜபக்ஷக்களைப் போன்றே அவர்கள் சார்ந்த பொது ஜன பெரமுன கட்சியும் ஆளும் வர்க்கமும் தேர்தலை எதிர் கொள்ளும் மன நிலையில் இல்லை.
மொத்தத்தில் ரணில் இலங்கை அரசியலில் மீண்டெழ துடிக்கின்றார். ராஜபகஷக்கள் தமக்கெதிராக தென்னிலங்கையில் திரண்டெழுந்து வருகின்ற எதிர்ப்பலைகளைக் கடந்து போய்விடத் துடிக்கின்றனர்.
அந்த வகையில் தென்னிலங்கை கோருவது போன்று ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேறும் நிலையில் இல்லை. அவரை வெளியேற்றும் வல்லமை கொண்டதாக எதிர்க் கட்சிகள் இல்லை. அரசியலமைப்பு ரீதியிலும் ஜனாதிபதியை அகற்றுவதற்கான எந்த மார்க்கமும் இல்லை. நாடாளுமன்றத்தில் ஜனாதிபதிக்கு எதிரான எந்த நகர்வுகளையும் தகர்த்தெறியும் சக்தி படைத்தவர்களாக ராஜபக்ஷக்கள் உள்ளனர்.
மொத்தத்தில் ராஜபக்ஷக்கள் மக்கள் தமக்கு வழங்கிய ஆணைiயை பொறியாக்கி அந்த பொறிக்குள் மக்களையே சிக்க வைத்துள்ளனர்.
இன்றைய நிலையில் நாடு பாராளுமன்றத் தேர்தலுக்குப் போவதே ஒரே வழி.பொதுத் தேர்தலுடன் ஜனாதிபதி முறை குறித்து தீர்மானம் எடுக்கும் வழிவகைகள் குறித்து சிந்தித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனால் இப்போதைக்கு இது சாத்தியமாவதாகத் தெரியவில்லை. இந்த நிலைமை தொடர்வதும் மாற்றமடைவதும் தென்னிலங்கை இளைஞர் யுவதிகளினதும் மக்களினதும் கைகளிலேயே தங்கியுள்ளது.
Email : vathevaraj@gmail.com
Mobil : 0094 777304145