உலகெங்கும் உள்ள கிருஷ்ண பக்திக் கழக நிறுவனங்கள் எங்கெல்லாம் மக்களுக்கு துன்ப துயரங்கள், அனர்த்தங்கள் ஏற்படுகின்றனவோ அங்கெல்லாம் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளன.
பரித்ராணாயா ஸாதூனாம்
வினாஸாய சா துஸ்கிருதாம்
தர்மஸம்ஸ்தா பனார்தயா
ஸம்பவாமி யுகே யுகே!
இது பகவத்கீதையில் பகவான் கிருஷ்ணர் நேரிடையாகக் கூறியது. அதாவது எப்பொழுது எங்கு தர்மம் தலை சாய்ந்து அதர்மம் தலையோங்குகிறதோ அப்பொழுது அங்கு அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட நான் யுகந்தோறும் அவதரிக்கின்றேன் என்று கூறுகிறார். கிருஷ்ண பக்திக்கழக பக்தர்களும் மக்களுக்கு துன்பங்கள் நேரிடும்போது அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட, பாதிக்கப்பட்ட மக்களைத் தேடிச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
அந்த வகையில், இலங்கையில் கிருஷ்ண பக்திக் கழகம் ஆரம்பிக்கப்பட்ட ஆரம்ப காலப் பகுதியென்றாலும், அக்காலப் பகுதியில் கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தம்மால் இயன்ற உதவிகளை வழங்கத் தவறவில்லை. 1978ஆம் ஆண்டளவில் கிழக்கு மாகாணத்தை பெரும் சூறாவளியும் வெள்ளமும் தாக்கின. இதில்
ஏராளமான மக்கள் வீடு, வாசல்களை இழந்து அகதிகளாகினர். வெள்ளம் ஒரு பக்கம், சூறாவளியின் தாக்கம் ஒரு பக்கம். மக்கள் மிகுந்த துன்பப்பட்டுக் கொண்டிருந்தனர். பெரிய பெரிய கட்டிடங்கள், தென்னை மரங்கள் போன்ற விருட்சங்கள் கூட சூறாவளியின் தாக்கத்தினால் சாய்ந்து போய் கிடந்தன.
அது கிருஷ்ண பக்திக் கழகம் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட ஆரம்ப காலம் என்ற போதிலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவேண்டும் என்பதில் பக்தர்கள் மிகுந்த அக்கறை கொண்டனர். அதனால் அவர்களுக்கான உலர், உணவுப்பொருட்கள் போன்ற நிவாரணபொருட்களை சேகரித்து, இரண்டுலொறிகள் மற்றும் ஒரு வேனில் கிழக்கு மாகாணத்திற்கு கொண்டு சென்றனர்.
அங்கு அப்போதைய பொத்துவில் பாராளுமன்ற உறுப்பினர் எங்களோடு சேர்ந்து கொண்டு, மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு எங்களை அழைத்துச் சென்று அவர்களுக்கு உதவுவதில் அவரும்பங்குகொண்டார். இப்படி நாங்கள் அங்கு கிழக்கு மாகாணத்தில் பல்வேறு இடங்களுக்கும் போய் மக்களுக்கு உதவிகள் வழங்கியதையடுத்து, அங்குள்ள மக்கள் எமதுகிருஷ்ணபக்தி கழகத்தின் மீது மிகுந்த பற்றுதல் கொண்டனர். அதனையடுத்து கிருஷ்ண பக்திக் கழக கிளை ஸ்தாபனம் ஒன்று கிழக்கு மாகாணத்திலும் உருவாக வேண்டும் என்பதில் அந்த மக்கள் மிகுந்த அக்கறையும், ஆர்வமும் கொண்டனர்.
அங்குள்ளவர்களின் உதவியோடு “சங்கமங் கண்டி” என்ற இடத்தில், கடற்கரை பகுதியில் கிருஷ்ண பக்தி கழக கிளை ஸ்தாபனம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. அங்கு பக்தர்களுக்காக ஆலயம் மற்றும் பல வீடுகள் அமைக்கப்பட்டன. தினமும் பூஜை வழிபாடுகளும் நடத்தப்பட்டன. ஏராளமான உணவுப் பதார்த்தங்களுடன் ஞாயிறு விருந்தும்
வழங்கப்பட்டது.
ஏராளமான மக்கள் வருகை தர ஆரம்பித்தார்கள். நாளுக்கு நாள் மக்களின் ஆதரவு பெருகியது. கிருஷ்ண ஜெயந்தி, ராம நவமி, கோவர்தன பூஜை என்று பல்வேறு விழாக்களையும், கிருஷ்ண பக்திக் கழகம் நடத்தியது. காட்டுப் பகுதிக்குள் நடைபெற்ற இந்த மாபெரும் விழாக்கள், மக்கள் மனதை பெரிதும் கொள்ளை கொண்டன. மக்களின் ஆதரவு பெருகியதையடுத்து அங்கு ஒரு நிரந்தர ஆலயம் அமையவேண்டும் என்பது பலரினதும் வேண்டுகோளாகவும், ஆர்வமாகவும் இருந்தன. ஆனாலும், நாட்டின் அசாதாரண சூழல் மற்றும் வெளிநாட்டவர்கள் வருகையில் ஏற்பட்ட சிக்கல் போன்ற பல காரணங்களால் அங்கு அந்த ஆலய செயல்பாடுகளை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
அதனையடுத்தே, அங்கு கிருஷ்ண பக்திக் கழக பணிகளை தொடரமுடியாத நிலை ஏற்பட்டது. இனிகிருஷ்ணபக்திக்கழகம்வருடாந்தம் நடத்தி வந்த இரத யாத்திரை பற்றி பார்ப்போம்.
(தொடரும்…)