யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன்
பொதுவாக நான் இரவு நித்திரைக்குச் செல்லும் முன்னர் நாட்டு நடப்பு செய்திகளையும் நகைச்சுவை நிகழ்ச்சியும் பார்ப்பது வழமை. அப்படித்தான் அன்று இரவும்-செய்தியும்-நகைச்சுவையும். யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை மீண்டும் இயக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஏற்பாடுகள் செய்வதாக ஆரவாரமாக செய்திகள் வெளியானது. இதைக் கண்டவுடன் அதுவும் நகைச் சுவை ஒளிபரப்போ என்ற ஐயம் எனக்குள் எழுந்தது.
ஏனெனில் 2022-06-13ஆம் திகதிய அமைச்சரவைக் கூட்டத்தில்
விமான சேவைகள் அமைச்சர் விரைவில் பலாலி வருவதாகத் தெரிவிக்கப்பட்ட ஒற்றை விடயத்தை வைத்து அடுத்த வாரமே விமானம் கிளம்புவது போன்ற ஆரவாரச் செய்திகள் வெளிவருகின்றன.
பலாலி விமான நிலையத்தில் இருந்து திருச்சிக்கு விமான சேவை இடம்பெறுவது ஒன்றும் புதிய விடயமாக இல்லாதபோதும் மீண்டும் திருச்சிக்காவது சேவை ஆரம்பிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.
2019-10-17 அன்று யாழ்ப்பாணம் மக்களிற்குக் கிட்டிய ஒரு அரும்பெரும் சொத்தான பலாலியில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் தற்போதைய அரசினால் இரகசியமான முறையில் முழுமையாக மூடுவது கண்டும் அரசோடு ஒட்டி நின்றவர்கள் வாய்மூடி மௌனிகளாக இருந்தனர் .
இலங்கையின் சர்வதேச விமான நிலையமாக யாழ்ப்பாணம் விமான நிலையம்2019-10-17 மீண்டும் புதுப் பொலிவுடன் ஆரம்பித்து வைக்கையில் 2015ஆம் ஆண்டு முதல் மேற்கொண்ட பெரும் முயற்சியின் அறுவடை ஒன்று அன்று பெறப்பட்ட மகிழ்ச்சி நிச்சயம் யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்களிற்கு மட்டுமல்ல வடக்கு மாகாண மக்கள் அனைவருக்கும் ஏற்பட்டது.
பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாகத் தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை2014ஆம் ஆண்டு தொடங்கியது. நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த மாவை. சேனாதிராஜா அப்போதுயாழில் இந்தியத் துணைத் தூதுவராக இருந்த மகாலிங்கத்திடம் முதன் முதலாக இந்த கோரிக்கை விடுத்தார். அந்த கோரிக்கையினை உரிய முறையில் இந்திய அரசுவரை அவர் கொண்டு சென்றார். பிறகு இந்தியப் பிரதமர்வரை கூட்டமைப்பால் இது கொண்டு செல்லப்பட்டு ஓப்புதல் பெறப்பட்டது.
இதனையடுத்து 2015ஆம் ஆண்டு குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்த இந்திய அரசு இணக்கம் தெரிவித்து அதற்கான உத்தேச செலவு மதிப்பீட்டினையும் மேற்கொண்டபோதும் அப்பணிகள் யாவும் மிகவும் இரகசியமாகவே இடம்பெற்றன. இருநாட்டு விடயம் என்பதால் நீண்டகாலம் இரகசியம் காக்க முடியவில்லை. அதனால் 2015இன் இறுதியில் விடயம் வெளிவந்ததும் அப்போதைய மைத்திரி அரசும் ஆரம்பத்தில் பச்சைக்கொடியே காட்டியது. இருப்பினும் கொழும்பு அதிகாரிகள் இதற்குத் திட்டமிட்டு முட்டுக்கட்டை போட்டனர். `வடக்கு வாழ்கிறது- தெற்கு தேய்கிறது` என்ற மனத்தடையும் வன்மமும் அவர்களிடையே எப்போதும் இருந்ததுண்டு. வடக்கு வளர்ந்துவிடக் கூடாது என்பதில் அவர்கள் குறியாக இருந்தனர்.
பின்னர் 2015ல் கூட்டமைப்பு இந்தியாவிடம் மட்டுமன்றி இலங்கையின் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவிடமும் விமான நிலைய அபிவிருத்திக்கு கடும் அழுத்தம் கொடுத்தனர். இதனால் பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய இலங்கை அரசு ஒப்புதல் வழங்கியது. இதனையடுத்து இந்தியா அதற்கான ஆயத்தப் பணிகளை முன்னெடுத்து சீரான மீளாய்வுகளையும் செய்தது.
இதனையடுத்து அபிவிருத்திக்கான பணியை முன்னெடுத்து இந்தியாவிற்கான விமான சேவையை ஆரம்பிக்க எண்ணி 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14ம் திகதி இந்தியக் குழுவொன்று பலாலி விமான நிலையம் வந்து ஆய்வில் ஈடுபட்டனர். இவ்வாறு ஆய்வில் ஈடுபட்ட சமயம் அப்போதைய வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தன் பங்கிற்கு கருத்து என்கிற வகையில் ஒரு முட்டுக்கட்டையைப் போட்டார். அதாவது விமான நிலைய அபிவிருத்தி என்னும் பெயரில் அப்பகுதி மக்களின் நிலங்களை இராணுவம் முழுமையாக அபகரிக்கும் சாத்தியம் உள்ளது என்றார். இருப்பினும் அருகில் உள்ள குறுகிய நிலத்துடன் மட்டும் இந்தியாவிற்கான சேவையே ஆரம்பிக்க முடியும் என இந்தியக் குழு அறிக்கையிட்டது. ( இந்தக் குழு யாழ்ப்பாணம் வந்தபோது 5 நிமிடம் உரையாற்றும் சந்தர்ப்பம் எனக்கும் கிட்டியது)
பிறகு மீண்டும் நெருக்கடி ஏற்பட்டது. `பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்து யாழில் இருந்து நேரடி சேவைகளை மேற்கொண்டால் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருமானத்தில் வீழ்ச்சியடைவதோடு அதனை அண்டித் தொழில் புரியும் தெற்கின் வருமானத்திலும் வீழ்ச்சி ஏற்படும்` எனக் காரணம் காட்டி பணிக்கு தடை விதிக்கப்பட்டதோடு இந்தியா இதற்கான பணியை மேற்கொள்வதனால் முழுமையாக தமது வருமானம் இழக்கும் எனவும் தெற்கில் தெரிவித்தனர்.2017 நிறைவடைந்து 2018ஆம் ஆண்டிலும் பணியை முன்னெடுக்கும் சாத்தியம் இல்லாமலேயே இருந்தது. இந்தக் காலத்தில் யாழ்ப்பாணம் விமான நிலைய அபிவிருத்திக்கான வரைபடம் மட்டுமன்றி அதன் மாதிரி வடிவமும் இந்தியாவினால் தயார் செய்யப்பட்டது. இவ்வாறு தயார் செய்யப்பட்ட மாதிரி வடிவம் மற்றும் வரைபடங்களிற்காக மட்டும் இந்திய அரசினால் அன்று ஒரு கோடிக்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டமை இன்றுவரை பலர் அறிந்திராத உண்மை.
இக்காலப் பகுதியில்தான் இலங்கை சிவில் விமான சேவை அதிகாரிகளைத் திருப்திப்படுத்த வேண்டிய தேவை பிரதமர் ரணில் தலைமையிலான அரசிற்கு ஏற்பட்டது. ஏனெனில் அப்போது பிரதமருக்கு ஆட்சியை தொடர கூட்டமைப்பு தேவைப்பட்டது. கூட்டமைப்போ பலாலி விமான நிலையம் வந்தே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது. இதனால் பிரதமர் பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற வாக்குறுதி வழங்கியதோடு பணியைத் தொடர அதிகாரிகளை கோரினார்.
அரைமனதோடு சிவில் விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் இணக்கம் தெரிவித்தாலும் இந்திய அரசின் நிதியில் முன்னெடுத்தால் தமது பிடி தளர்வடையும் எனக் கருதி முதல் கட்டமாக இலங்கை அரசின் பணத்திலேயே யாழ்ப்பாணம் விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாகத் தரம் உயர்த்தும் பணியை மேற்கொள்ளவும் இரண்டாம் கட்டமாக இடம்பெறும் பாரிய அபிவிருத்திக்கு இந்திய அரசின் உதவியைப் பெறவும் பிரமர் இணக்கம் தெரிவித்து அதற்கான ஆணையை வழங்கினார். அந்தளவிற்கு கூட்டமைப்பு அன்று தேவைப்பட்டது அல்லது ரணில்-மைத்திரி ஆட்சிக்கு கூட்டமைப்பு முட்டுக்கொடுத்தது.
இலங்கையின் 5வது சர்வதேச விமான நிலையம் என்ற பெயரை யாழ்ப்பாணம் விமான நிலையம் பெற்றுக் கொண்டது. இதனையடுத்து 2019ம் ஆண்டு யூலை மாதம் முதல் 2.26 பில்லியன் ரூபா செலவில் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 2019-10-17 முதல் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாகத் திறந்து வைக்கப்பட்ட சமயம் உலகில் கொரோனா தாக்கம் பரவ ஆரம்பித்தபோது இலங்கையிலும் பரவியது இதனால் கடந்த2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சர்வதேச விமான நிலையங்கள் பூட்டப்படும்போது கட்டுநாயக்கவும் பலாலியும் மூடப்பட்டன.
ஆனால் கட்டுநாயக்க வழமைக்குத் திரும்பியபோது யாழ்ப்பாண விமான நிலையமோ மெல்ல மெல்ல மூடுவிழாவை நோக்கிச் சென்றது. யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்காக நியமனம் செய்யப்பட்ட அனைத்துப் பணியாளர்களும் முழுமையாக மத்தள விமான நிலையத்துடன் இணைக்கப்பட்டு விட்டனர். இங்கிருந்து பல உபகரணங்களும் கட்டுநாயக்காவிற்கும் மத்தளவிற்கும் இரகசியமாக நகர்த்தப்பட்டது. இதன் மூலம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு சாவு மணி அடிக்கப்படும் நிலை ஏற்பட்டது.
இத்தனைக்கும் மத்தியில் பலாலி விமான நிலையத்தின் 2ம் கட்ட அபிவிருத்திக்காக இந்திய அரசு 300 கோடி ரூபாவை வழங்க தயாராகவே உள்ளது. விமான சேவை இடம் பெறாத காலத்தில் பணியை இலகுவாக ஆரம்பித்திருக்க முடியும், ஆனால் இலங்கை அதிகாரிகளோ அல்லது தறபோதைய அமைச்சர்களோ திட்டமிட்டு விமான நிலையத்தை நிரந்தரமாக மூட இடம்பெறும் சதிக்கு துணை போனார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதேவேளை தமிழ் மக்களின் வாக்கில் தேர்வாகி அரசிற்கு ஆதரவளிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாய்மூடி மௌனிகளாக இருந்தனர். பலாலியின் விமான நிலையம் செயல்பட்டால் அது தமது வெற்றி, விமான நிலையம் மூடப்பட்டால் அது கூட்டமைப்பில் தோல்வி என்ற நிலைப்பாட்டை ஏற்படுத்தவும் காய்கள் நகர்த்தப்படுகின்றன என்று சில தகவல்கள் கூறுகின்றன.
இதேநேரம் 2019ஆம் ஆண்டு ஒக்டோபர் முதல் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் இயங்கிய யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கான விமான சேவை இடம்பெற்றபோதும் விமான நிலையக் கட்டணம் யாழ்ப்பாணம் மற்றும் கட்டுநாயக்கா ஆகிய இரண்டிற்கும் விதிக்கப்பட்டதனால் கொழும்பில் இருந்து சென்னை செல்லும் விமான கட்டணத்தை விட அதிகரித்த கட்டணமாகவும் கொழும்பில் இருந்து சென்னை சென்று சென்னையில் இருந்து கொழும்பு திரும்பும் பயணி 30 கிலோ பொருட்கள் அனுமதிக்கப்பட்டபோதும் பலாலிக்கு வரும் பயணிக்கு 20 கிலோ மட்டுமே அனுமதிக்கப்பட்டது குறித்து எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த நிலைமையில் மீண்டும் விமான நிலையம் 26 ஆம் திகதி திறக்கப்படும் என 2020-12-19 அன்று இதே அமைச்சர் தெரிவித்தார். அது எந்த 26 என்கிற கேள்வி தொக்கிநிற்கிறது.
இவை அனைத்திற்கும் மத்தியில் 1957 ஆம் ஆண்டுகளிலேயே திருச்சிக்கு விமானம் சென்ற விமான நிலையம் மூடப்பட்டு கிடப்பதோடு மீண்டும் திருச்சிக்கு விமானம் விடுவதே பேசு பொருளாக உள்ளது. அதுவும் நடக்குமா என்பதும் கேள்விக் குறியாகவே உள்ளது. ஏனெனில் யாழ்ப்பாணம் விமான நிலையம் இயங்குவதனை இலங்கை சிவில் விமானப் போக்கு வரத்து அதிகார சபை விரும்பவில்லை என 2018 ஆம் ஆண்டே கூறப்பட்டது. அதே ஆட்சியாளர்கள் இருக்கும் காலத்தில் விமான நிலையம் இயக்கப்படுமா அல்லது நாடகமா என்பது கேள்வியாக இருந்தாலும் இன்று இந்தியா இல்லையேல் இலங்கை இல்லை என்னும் நிலைமை பொருளாதார ரீதியில் உருவாகி வரும் சூழலில் இந்தியா முயன்றால் வடக்கின் விமான நிலையத்தை திறக்க முடியும் என்பதே யதார்த்தமாகவுள்ளது. இதற்கு இந்தியா அழுத்தங்களை பிரயோகிக்குமா என்பது தமிழர்களின் எதிர்பார்ப்பு. விமான நிலைய செயல்பாடு குறித்து அமைச்சர் டக்ளஸ் கூறுகின்றாரே தவிர அரசோ அல்லது அமைச்சரவை தீர்மானமோ இதுவரை இல்லை.
கடந்த 1958 ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவத்தை தனது அனுபவப் பகிர்வாக உதயனிடம்தெரிவித்த மட்டுவிலைச் சேர்ந்த 84வயதான ஆங்கில ஆசிரியரின் கூற்றானது பலரை வியப்பில் ஆழ்த்தும். யாழில் கல்வி கற்ற பிறகு இந்தியாவின் திருவனந்தபுரம் கல்லூரியிலும் பின்னர் சென்னையிலும் கல்வி கற்ற காலத்தில் பலாலியில் இருந்து திருச்சிக்கு விமானம் பயணித்துள்ளது. அதற்கான கட்டணம் 60 ( அறுபது ) ரூபா மட்டுமே. அந்த 60 ரூபாவினையும் மீதப் படுத்தும் நோக்கில் மட்டுவிலில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பேருந்தில் பயணித்து யாழில் இருந்து மன்னாரிற்கு ரயில் மூலம் சென்று தலை மன்னாரில் இருந்து இராமேஸ்வரம் படகில் பயணித்து அங்கிருந்து புகையிரதம் மூலம் திருவனந்தபுரம் செல்வதற்கு அன்று மொத்தமாகவே 19 ரூபா மட்டுமே செலவு ஏற்பட்டது என்ற அவர், மன்னார்- இராமேஸ்வரத்திற்கான கப்பல் கட்டணமாக 3 ரூபா 50 சதம் மட்டுமே அறவிடப்பட்டது என்றார்.
இதேநேரம் பலாலி விமானநிலையம் ஆரம்பிக்கப்பட்டு 1983 இன கலவரத்துடன் மூடி பின்னர் 1985 திறந்து இந்திய இராணுவம் இலங்கையில் நிலைகொண்டிருந்த போது அவர்கள் தேவைக்காகப் பயன்படுத்தப்பட்டது. பின்னர் 1990 ஆம் ஆண்டு 2ஆம் கட்ட ஈழப்போரின்போது மூடப்பட்டு 1997ஆம் ஆண்டு முதல் யாழில் இருந்து கொழும்பிற்கான பயண மார்க்கமாகவும் காணப்பட்டது. இவ்வாறு மாறி மாறி மூடுவதும் திறப்பதும் பலாலிலியில் உள்ள யாழ்ப்பாணம் விமான நிலையத்தின் சாபக்கேடாகவே உள்ளது. அது மீண்டும் ஒரு பேசுபொருளாக எழுந்துள்ள நிலையில் அதனை வடிவேலு பாணியில் கூறினால் அது “வரும்… ஆனால் … வராது”.