யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்
“அவருடைய மத அடையாளம் காரணமாக அவரை துன்புறுத்துவதில் ஒரு பங்கை வகித்த அதே மருத்துவ கட்டமைப்புக்கு தனது சம்பள நிலுவையை திரும்பிக் கொடுத்ததன் மூலம் மருத்துவர் ஷாபி எல்லாவற்றுக்குள்ளும் அதிகம் அன்பான ஒரு சமிக்ஞையை வெளிப்படுத்தியிருக்கிறார். இன்றைய பொசன் போயா நாளில் அவர் எங்களுக்கு பகவான் புத்தரின் செய்தியை அனுப்பியிருக்கிறார்”…இவ்வாறு ருவிற்றரில் பதிவிட்டிருப்பவர் பேராசிரியர் சரோஜ் ஜெயசிங்க.கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் சேவையாற்றி ஓய்வுபெற்ற ஒரு மருத்துவ நிபுணர்.
மருத்துவர் ஷாபி சிகாப்தீன் குருநாகல் போதனா மருத்துவமனையில் மகப்பேற்று நிபுணராக இருந்தவர். குருநாகல் போதனா வைத்தியசாலையில் சட்டவிரோத கருத்தடை சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஷாபி சிஹாப்தீன் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டார். அவர் சட்டவிரோதமான முறையில் சொத்துக் குவித்ததாகவும். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புகளைப் பேணி வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. எனினும் குற்றம் நிரூபிக்கப்படாத காரணத்தால் ஷாபி விடுவிக்கப்பட்டார். அவ்வாறு விடுவிக்கப்பட்ட பின் அவருக்கு வழங்கப்பட்ட சம்பள நிலுவைத் தொகையான 2.67 மில்லியன் ரூபாயை அவர் குருநாகல் ஆஸ்பத்திரிக்கே திரும்பவும் தானமாக கொடுத்துவிட்டார்.எந்த மருத்துவ கட்டமைப்பு அவர் கீழ்த்தரமாக அவமதிக்கப்பட்டு சிறை வைக்கப்பட்ட போது அவரை பாதுகாக்கத் தவறியதோ அதே மருத்துவ கட்டமைப்பின் முகத்தில் அறைவது போல அவர் தனது சம்பள நிலுவையைத் தானமாக வழங்கி இருக்கிறார். ஒரு பொசன் நாளன்று ஒரு முஸ்லீம் மருத்துவர் சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதிகளுக்கு கௌதம புத்தரின் போதனை ஒன்றை செயலில் காட்டி இருக்கிறார்.
ஆனால் இதுபோன்ற அகிம்சா வழிமுறைகளில் இருந்து இலங்கைத்தீவின் அரசுக் கட்டமைப்பு கற்றுக் கொள்ளுமா என்பது சந்தேகம்தான். ஏனெனில் கடந்த வாரம் குருந்தூர் மலையில் அமைந்திருக்கும் ஆதி சிவன் ஆலய வளாகத்தில் ஒரு புதிய தாதுகோப கலசத்தைக் கட்டியெழுப்பும் வேலைகளை அரசாங்கம் முன்னெடுத்தது. நீதிமன்றத்தின் தடை உத்தரவு இருக்கத்தக்கதாக அதை மீறி அரச உபகரணங்களான தொல்லியல் திணைக்களமும் படையினரும் பிக்குகளின் உதவியோடு அதைக் கூட்டாக முன்னெடுத்தார்கள். தமிழ் மக்களின் எதிர்ப்புக் காரணமாக அம்முயற்சி தடுக்கப்பட்டிருக்கிறது.
ஒருபுறம் பொருளாதார நெருக்கடி. உலகில் அத்தியாவசிய பொருட்களாக பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் எரிபொருள், சமையல் எரிவாயு போன்றன இலங்கைத்தீவில் லக்சறி பொருட்களாக மாறி இருக்கின்றன. ஏனைய அத்தியாவசிய பொருட்களின் விலை கட்டுக்கடங்காமல் ஏறிக்கொண்டே போகிறது. இன்னொருபுறம் பொருளாதார நெருக்கடிகளின் விளைவாக சிங்கள மக்கள் காலிமுகத்திடல்,கண்டி போன்ற இடங்களில் கிராமங்களை அமைத்து போராடிக்கொண்டிருக்கிறார்கள். இவ்வாறானதொரு பின்னணியில்தான் அரசின் உபகரணங்கள் ஆகிய தொல்லியல் திணைக்களம், அரசபடைகள் போன்றன ஒரு மரபுரிமை யுத்தத்தை தொடர்ந்து முன்னெடுக்கின்றன. அதாவது அரசாங்கம் அதன் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை நிறுத்தத் தயாரில்லை என்று பொருள். இது முதலாவது சம்பவம்.
இரண்டாவது சம்பவம் ஜெனிவாவில் 50வது மனித உரிமைகள் கூட்டத் தொடரில், கடந்த திங்கட்கிழமை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் என்ன பேசினார் என்பது. “மனித உரிமைகள் ஆணையத்தின் 46/1 தீர்மானத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட வெளிப்புற சாட்சியங்கள் சேகரிப்புப் பொறிமுறையை இலங்கை நிராகரிப்பதை கடந்த காலத்தில் நான் தெளிவுபடுத்தினேன்….. இந்த பொறிமுறையானது துருவப்படுத்துவதற்கும் பிளவுபடுத்துவதற்கும் மட்டுமே உதவும். இதேவேளை, இந்த சபை மற்றும் அதன் உறுப்பினர்களின் வளங்களில் பயனற்ற மற்றும் உதவியற்ற வீண் நிலையை ஏற்படுத்தும் என்ற எமது நம்பிக்கையை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகின்றோம்“. என்று பீரிஸ் கூறியிருக்கிறார்.அதாவது போர்க்குற்றங்கள் தொடர்பாக அரசாங்கம் பொறுப்புக் கூறத் தயாரில்லை என்று பொருள். இறந்த காலத்துக்கு பொறுப்புக்கூறத் தயாரில்லை என்பது அதன் தர்க்கபூர்வ விளைவுகளைப் பொறுத்தவரை நல்லிணக்கத்துக்கு தயார் இல்லை என்றுதான் பொருள்.ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னரும் இது விடயத்தில் அரசுக் கொள்கை மாறவில்லை என்று பொருள்.
இவ்வாறானதொரு அரசியல் சூழலில்தான் கடந்தகிழமை முன்னிலை சோசலிசக் கட்சியின் உயர்மட்டக்குழு ஒன்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தது. காலிமுகத்திடலிலும் ஏனைய இடங்களிலும் போராடும் தரப்புகளின் மத்தியில் முன்னிலை சோசலிச கட்சியின் செல்வாக்குக்கு உட்பட்ட மாணவர் அமைப்பும் காணப்படுகின்றது. ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்ட பின் காலிமுகத்திடல் போராட்டம் ஒப்பீட்டளவில் சோரத் தொடங்கிவிட்டதாக கருதப்படும் ஒரு பின்னணியில்,வடக்கு கிழக்கிலிருந்து அதிக தொகை தமிழ் மக்கள் காலிமுகத்திடலில் வந்து தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்று முன்னிலை சோசலிசக் கட்சி எதிர்பார்க்கின்றது. காலிமுகத்திடலிலும் கண்டியிலும் போராடிக்கொண்டிருக்கும் தரப்புக்களோடு ஏன் தமிழ் மக்கள் பெருமெடுப்பில் இணையவில்லை என்பதற்குரிய விளக்கத்தை காலிமுகத்திடலில் வந்து தமிழ் மக்கள் கூற வேண்டும் என்று அக்கட்சி எதிர்பார்க்கின்றது.
காலிமுகத்திடலில் திறக்கப்பட்டிருப்பது அரசுக்கு எதிரான ஒரு போராட்டக் களம். அங்கே சிங்கள மக்கள் மத்தியில் இருக்கக்கூடிய பல்வேறு அரசியல் நிலைப்பாட்டைக் கொண்ட சக்திகளும் கூடுகின்றன. அவரவர் தமது நிலைப்பாட்டை,அதிருப்தியை,ஆதங்கத்தை, விரக்தியை, கோபத்தை கொட்டித் தீர்க்கும் ஓர் இடமாக அது காணப்படுகிறது. இலங்கைத் தீவில் அரசாங்கத்துக்கு எதிராகத் தொடர்ச்சியாகப் போராடலாம் என்ற நம்பிக்கையை பலப்படுத்தும் ஒரு வெளி அது. எனவே அங்கே தமிழ் மக்கள் வரவேண்டும். தங்களுக்குள்ள குறைகளை அங்கே கூறவேண்டும். தமது நிலைப்பாட்டை அங்கு பகிரங்கமாக தெரிவிப்பதன் மூலம் தமிழ் மக்கள் அந்தக் களத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று குமார் குணரட்னம் எதிர்பார்ப்பதாக தெரிகிறது. வடக்கு கிழக்கிலிருந்து தொகையான மக்கள் அந்தப் போராட்டக்களத்துக்கு வருவார்களாக இருந்தால் அது ஒரு புதிய பரிமாணத்தை அடையும் என்றும் அவர் எதிர்பார்ப்பதாக தெரிகிறது.
நாடாளுமன்றத்துக்கு வெளியே மக்கள் அதிகாரத்தை பலப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.கோட்டா கோ கம போன்ற போராட்ட கிராமங்களை தொடர்ந்து பரவலாக விஸ்தரிப்பதன் மூலம் மக்கள் அதிகார சபைககளை நாடாளுமன்றத்திற்கு வெளியே உருவாக்க வேண்டும் என்றும், அவ்வாறு மக்கள் அதிகாரம் பலம் பெறும் பொழுது அரசியல்வாதிகள் வழிக்கு வருவார்கள் என்றும் அவர் எதிர்பார்ப்பதாக தெரிகிறது. தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களோடு உரையாடும் பொழுது முன்னிலை சோஷலிஸ கட்சியானது தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்கிறது என்று குமார் குணரட்னம் தெரிவித்தார். ஆனால் சுயநிர்ணய. உரிமையின் அடிப்படையில் தமிழ் மக்களுக்கு எப்படிப்பட்ட ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்பதைக் குறித்து அவர் தெளிவாகச் சொல்ல தயங்கினார். ஏற்கனவே ஊடகங்களுக்கு அவர் வழங்கிய செவ்விகளிலும் அதைக் காணமுடிகிறது.
சிங்கள மக்களை ஒரு தீர்வை நோக்கி தயார்படுத்த வேண்டும் என்றும், அதற்காக தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையே ஒன்றிணைந்த வேலைத்திட்டம் ஒன்று தேவை என்றும் அவர் எதிர்பார்ப்பதாக தெரிகிறது. ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்ட பின் போராட்டத்தில் ஒருவித தொய்வு ஏற்பட்டிருப்பதை அவர் ஏற்றுக்கொண்டார். ஆனால் அந்தப் போராட்ட கிராமத்தை தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். மக்கள் எழுச்சிகளின் விளைவாகத்தான் மகிந்த பதவி விலகினார், பஸில் பதவி விலகினார், ஒரு புதிய பிரதமர் வந்திருக்கிறார், கடந்த இரு மாத காலப்பகுதிக்குள் அமைச்சரவை இரண்டு தடவைகளுக்கு மேல் மாற்றப்பட்டிருக்கிறது. போராட்டங்களின் பலனாகத்தான் இவ்வாறான மாற்றங்கள் ஏற்பட்டன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அவர் கூறுவது சரிதான். தென்னிலங்கையில் கடந்த இரு மாதங்களுக்கு மேலான காலகட்டத்தில் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் எல்லாவற்றுக்கும் மக்கள் எழுச்சிதான் மூலகாரணம். ஆனால் அந்த மக்கள் எழுச்சிகளின் கனிகளில் பெரும்பாலானவற்றை ரணில் விக்கிரமசிங்க சுவீகரித்துக் கொண்டு விட்டார் என்பதனை அவர் ஏற்றுக்கொண்டார்.அந்த மாற்றங்களை ஏன் தமிழ் மக்கள் விலகி நின்று ஒரு சாட்சியாகவே அவதானித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதனை தமிழ் செயற்பாட்டாளர்கள் அவருக்கு விளங்கப்படுத்தினார்கள். தமிழ் மக்கள் எதிர்பார்ப்பது அமைப்பு மாற்றம் அதாவது சிஸ்டத்தில் மாற்றத்தை அல்ல. மாறாக அடிப்படை மாற்றம், அதாவது,கட்டமைப்பு மாற்றத்தையே என்று அவருக்கு எடுத்துக் கூறப்பட்டது.
காலிமுகத்திடலில் போராடும் எல்லா அமைப்புகளையும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்ள வைப்பதில் சவால்கள் உண்டு என்பதையும் அவர் ஏற்றுக்கொண்டார். அவ்வாறான ஒரு கோரிக்கையை முன் வைப்பது இப்பொழுது காலத்தால் முந்தியது என்றும் அவர் கருத்து தெரிவித்தார். அதாவது சுமார் ஒரு நூற்றாண்டுக்கும் மேலான இரத்தம் சிந்தும் அனுபவங்களின் பின்னரும் அரசாங்கத்துக்கு எதிராக காலிமுகத்திடலில் போராடிக்கொண்டிருக்கும் தரப்புகளில் மிகச் சில அமைப்புக்களைத் தவிர பெரும்பாலானவை தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை இப்பொழுதும் ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை என்பதே கோட்டா கோ கம யதார்த்தம் ஆகும்.
தென்னிலங்கை அரசியலில் ஆகப் பிந்திய யதார்த்தம் அது. அதைத் தமிழ் மக்கள் எதிர் கொள்ள வேண்டும். காலிமுகத்திடலில் தமிழ் செயற்பாட்டாளர்கள் தமது நிலைப்பாடுகளை எதனோடும் எவரோடும் சமரசம் செய்யாமல் வெளிப்படுத்த வேண்டும்.தமிழ்மக்கள் தமது நிலைப்பாட்டை வெளிப்படையாக முன்வைக்க வேண்டிய ஒரு களம் அதுவென்று குமார் குணரட்னம் போன்றவர்கள் கூறுகிறார்கள். ஏற்கனவே நாடாளுமன்றத்தில் தமிழ்மக்கள் தமது நிலைப்பாட்டை தெளிவாகவும் கூர்மையாகவும் வெளிப்படுத்தி விட்டார்கள். இந்நிலையில் நாடாளுமன்றத்துக்கு வெளியே மக்கள் அதிகார மையங்களை உருவாக்கப் போவதாக கூறும் தரப்புக்கள் அதற்கு முன்னோடியாக உருவாக்கி வைத்திருக்கும் ஒரு போராட்டக் கிராமத்திலும் தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் தமது நிலைப்பாட்டை தெளிவாகவும் சமரசத்துக்கு இடமின்றியும் முன்வைக்கவேண்டும்.குமார் குணரட்னம் கூறுகிறார் அது மக்கள் அதிகார மையம் என்று.அங்கிருப்பது சிங்கள மக்களின் அதிகாரமா? அல்லது தமிழ்மக்களின் அதிகாரமும் தானா? என்பதனை ஒரு முறை பரீட்சித்து பார்த்தால் என்ன?