வி.தேவராஜ் – மூத்த ஊடகவியலாளர்
– தெழிலாளர்களுக்கும் காணி பகிர்ந்தளியுங்கள்
– தொழிற்சங்கத் தலைமைகளே தெழிலாளர்களைக் காப்பாற்ற ஓரணியில் திரண்டெழுங்கள்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகஸ்ட் மாதத்திற்குள் கடுமையான உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என ஏற்கனவே எச்சரித்துள்ளதுடன் ஒரு வருடத்திற்கு உரம் உட்பட அனைத்து விவசாய உள்ளீடுகளையும் இறக்குமதி செய்வதற்கு நாட்டிற்கு 600 மில்லியன் தேவைப்படும் எனக் குறிப்பிட்டள்ளார்.
ஐந்து மாதங்களுக்குப் போதுமான ஒரு மில்லியன் கிலோ அரிசியை இறக்குமதி செய்வதற்கு தற்போதைய விலையில் சுமார் 400 முதல் 450 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுகின்றன.
உரத்தடை காரணமாக இந்த வருடத்தில் ஏழு மாதங்களுக்கு மாத்திரமே இலங்கையில் போதுமான அரிசியை உற்பத்தி செய்ய முடியும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். உரத் தடைக்கு முன்னர் இலங்கையில் நுகர்வுக்குத் தேவையான அரிசி உற்பத்தி செய்யப்பட்டது ஆனால் மற்ற தானியங்கள் இறக்குமதி செய்யப்பட்டன.
நாட்டில் ஏற்பட்டுள்ள பேரிடரை எதிர் கொள்ளும் முகமாக உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிப்பதற்கான திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்தப் பேரிடருக்கு எதிரான போரில் மலையக மக்கள் இணைத்துக் கொள்ளப்படுவார்களா என்பதே இன்றுள்ள கேள்வியாகும்.
– கொரணாவுக்கள் சாதனை
கொரணா காலத்தில் நாடே ஸ்தம்மிதமடைந்திருந்த வேளை தோட்ட மக்கள் மரணத்தைத் தழுவிய போதும் அந்த மரணத்தின் மீது நின்று நாட்டின் அந்நியச் செலவாணிக்காக உழைத்தவர்கள் தோட்டத் தொழிலாளர்கள்.
1965 இல் மொத்த ஏற்றுமதி வருவாயில் 90 வீதத்துக்கும் அதிகமாகவும் 1970 களின் பிற்பகுதியில் 70 வீதத்து க்கும் அதிகமாகவும் தோட்டத்துறையே பங்களிப்பு செய்தது.
தேயிலை தொழிற்துறை 2021 ஆம் ஆண்டில் மொத்தம் 228 228 Million Kgs தேயிலையை ஏற்றுமதி செய்தது . இதன்மூலம் தேசிய பொருளாதாரத்திற்கு சுமார் 1320 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் பெற்றது.
உற்பத்தியைப் பொறுத்தவரை இலங்கை கடந்த ஆண்டு 300 Million Kgs என்ற எண்ணிக்கையை பதிவு செய்ய முடிந்தது. உரப் பிரச்சினை தோட்ட பயிர்ச் செய்கை நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருந்த போதிலும் கொரணா மரணத்தின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தோட்டத் தொழிலாளாகளினால் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் தேசிய ரீதியிலான முடிவுகளின் போது தோட்டத் தொழிலாளர்கள் கணக்கில் எடுக்கப்படுவதில்லை.
– தொழிலாளர் படை
தோட்டத்துறையில் மொத்தமாக 1இலட்சத்து 72ஆயிரத்து357 பேர் தெழிலாளர்களாக பணிபுரிகின்றனர். தோட்டத்துறையில் 22 தனியார் கம்பெனிகளின் கீழ் உள்ள தோட்டங்களில் 1 இலட்சத்து 61ஆயிரத்து 557 பேரும் அரச நிறுவனங்களான மக்கள் தோட்ட அபிவிலுத்தி சபை மற்றும் அரச பெருந்தோட்ட ஆக்க கூட்டுத்தாபனம் ஆகிய இரு தோட்டத் துiறைகளிலும் 11 ஆயிரத்து587பேர் பணிபுரிகின்றனர். மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு சுமார் ஒரு மில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது.
– 37 ஆயிரம் ஹெக்டர் காணி தரிசாக உள்ளது
பெருந் தோட்டத்துறையில் சுமார் 37 ஆயிரம் ஹெக்டர் காணி பயன்படுத்தப்படாமல் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் தற்போது 9ஆயிரம் ஹெக்டர் காணியில் இன்றைய பொருளாதார நெருக்கடியை நோக்காகக் கொண்டு பயிர் செய்வதற்காக அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது.
உண்மையில் இந்த 9ஆயிரம் ஹெக்டர் காணி என்பது ரயில் பாதைகளின் இருமருங்கிலும் அமைந்துள்ள காணிகளாகும். இந்தக் காணிகளில் பெருந் தோட்டத் துறை சார்ந்த தனியார் கம்பெனிகளால் பயிர்ச் செய்கைக்கென பயன்படுத்தப்பட்ட காணிகளாகும் தற்போது இக் காணிகள் தரிசாகக் கிடக்கின்றன. இந்தக் காணிகளை ஜனாதிபதி கோத்தாபய மற்றும் அன்றைய பிரதமர் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் படைத்தரப்புக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுத்தது. ஏதோ காரணத்தினால் இந்தக் காணி பகிர்வு தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தக் காணிகளே தற்போது பயிர்ச் செய்கைக்காக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.இந்தக் காணிகள் யாருக்குப் பகிர்ந்தளிக்கப்படப் போகின்றது என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை.
– காணி அபகரிப்பு
இதற்கும் அப்பால் தனியார் கம்பெனிகளிடம் கையளிக்கப்பட்ட தோட்டங்களின் காணிகளில் இதவரை ஏறத்தாழ 22244 ஹெக்டர் நிலம் சட்ட விரோதமாக அபகரிக்கப்பட்டள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாவலப்பிட்டி தோட்டப்பகுதியில் 1100 ஏக்கர் காணி தரிசாகக் கிடப்பதாகவும் அக்காணியில் பாற் பண்ணை அமைப்பதற்கென தனியாருக்கு வழங்க இருப்பதாக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அறிவித்தார். அமைக்கப்பட உள்ள பாற்பண்ணையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று அமைச்சரும் ஏன் மலையகப் பிரதிநிதிகளும் கூட நாடாளுமன்றத்தில் அறிவித்தனர்.
அந்தக் காணிகளை காலம் காலமாக அதே தோட்டங்களில் உழைத்துவருகின்ற தொழிலாளர் குடும்பங்களுக்குப் பகிர்ந்தளித்து தேசிய பொரளாதாரத்தின் பங்காளராக ஆக்குவதற்கு அரசியல்வாதிகளுக்கோ அரச கட்டமைப்பிற்கோ மனமில்லை.
மலையக அரசியல்வாதிகளுக்குக்கூட தொழிலாளர்களுக்குப் பெற்றுக் கொடுக்க திராணி இல்லை.
தங்களது சுய நலன்களுக்காகவும் அமைச்சுப் பதவிகளுக்காகவும் பிரிந்து நின்று மலையக மக்களின் வாக்குகளை தேசியக் கட்சிகளுக்கு ஆட்சி அமைக்க வாரிக் கொடுக்கும் மலையக அரசியல்வாதிகளால் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்வதில் காட்டும் அக்கறை வேகம் என்பன மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் இருப்பதில்லை.
– ‘கிங் மேக்கர்‘ அரசியல்
1988 ஆம் ஆண்டு இலங்கை அரசியலில் நடைபெற்ற சம்பவம் ஒன்றினை இங்கு பதிவு செய்ய விரம்புகின்றேன்.
ஆப்போதைய இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான சௌமிய மூர்த்தி தொண்டமான் அவர்கள் கொழும்பில் உள்ள ‘ரேஸ்கோஸ் அவெனியில்‘ உள்ள மாடிக் குடியிருப்பில் வாழ்ந்து வந்தார். அந்த மாடிக் குடியிருப்புக்குப் பின்னால் உள்ள வாசஸ்தலத்தில் அப்போதைய பிரதம மந்திரியான ரணசிங்க பிரேமதாசாவின் நெருங்கிய நண்பரான அரங்கலகே வசித்து வந்தார். அவருடைய அழைப்பை ஏற்று நானும் நண்பர் ஒருவரும் அவரது வீட்டுக்குச் சென்றிருந்தோம். அவருடனான சந்திப்பு இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது பிரதமர் ரணசிங்க பிரேமதாசவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அவர் எங்களை தனது வீட்டிலேயே இருக்குமாறு கூறிவிட்டு அலரி மாளிகைக்கு அவசரமாக கிளம்பிப் போனார். ஒரு சில மணித்தியாலங்களின் பின் எங்களை வந்து சந்தித்த அவர் நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலில் அமைச்சர் தொண்டமான் அவர்களின் ஆதரவைப் பெற்றாக வேண்டும். அது குறித்து அவருடனான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யுமாறு பிரதமர் பணித்தள்ளார் என்றார். இதபற்றி நேரடியாகவே அவருடன் பேசினால் என்ன என்று நாம் அவரிடம் வினவினோம்.
நாம் மூவரும் அமைச்சர் எஸ்.தொண்டமான் அவர்களை சந்திப்பதற்காக அவரது வீட்டுக்குச் சென்றோம். அந்தக் காலகட்ட அரசியல் பிரதமர் ரணசிங்க பிரேமதாசவுக்கும் அமைச்சர் ஸெ;.தொண்டமானுக்கும் இடையில் ஒரு சுமுகமான உறவு இருக்கவில்லை. என்ன நடைபெறும் என்பது தெரியாத நிலையில் நாம் மூவரும் அமைச்சரை சந்திக்க சென்றோம். தோர்தலில் உதவுவது குறித்தும் சந்திப்பு குறித்தும் திரு அரங்கலகே அவரிடம் எடுத்துக் கூறினார். அதனை செவிமடுத்த அமைச்சர் சந்திப்பது தேர்தலில் உதவுவது என்பதற்கு முதல் ‘நாடற்றோருக்குப் பிரஜா உரிமை வழங்கும் சட்டமூலத்தை நாடாளு மன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றுவதற்கு ஆவண செய்வதாக இருந்தால் தேர்தலில் ஆதரவளிக்கத் தயார்.இந்த உறுதி மொழியை வழங்கினால் சந்திப்பதற்கும் தயார்‘ என்று தெரிவித்தார்.
அந்தச் செய்தியுடன் திரு அரங்கலகே பிரதமரைச் சந்தித்ததையடுத்து
பிரதமர் அமைச்சரைத் தொடர்பு கொண்டு உறுதி மொழியை வழங்கியதுடன் அன்று இரவே இருவரும் சந்தித்துக் கொண்டனர்.
அவ்வேளையில் ‘நாடற்றோருக்குப் பிரஜா உரிமை‘ வழங்குவதை அப்போதைய அமைச்சர்களான அத்துலத்முதலி மற்றும் காமினி திசாநாயக்கா போன்றோர் கடுமையாக எதிர்த்து நின்றனர். பிரதமர் ரணசிங்க பிரேமதாச அமைச்சர் அத்துலத்முதலியைக் கொண்டே ‘நாடற்றோருக்கான பிரஜா உரிமை‘ சட்டமூலத்தை நாடாளுமன்றில் கொண்டுவர வைத்து நிறைவேற்றினார்.
இவ்வாரான ‘கிங் மேக்கர்‘ அரசியலே மலையகத்திற்குத் தேவை.மாறாக அமைச்சுப் பதவிகளுக்கான அரசியல் அல்ல என்பதை மலையகம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
– தொழிலாளர்களுக்கு எதிராக வழக்குகள்
தோட்டக் காணிகள் அபிவிருத்தி என்ற போர்வையிலும் பல்வேறு தேவைகளுக்காகவும் அபகரிக்கப்படும் போது தோட்டத் தொழிலாளர்கள் காணிகளைக் கையகப்படுத்தியுள்ளதாக அவர்களுக்கு எதிராக பல வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளதாக சட்டத்தரணி இ.தம்பையா தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். அந்தளவுக்கு தோட்டத்துறை சார்ந்தோரை தேசிய நீரோட்டத்துடன் இணைத்துக் கொள்வதற்கான எந்தவொரு வேலைத் திட்டத்தையும் இலங்கை ஆட்சியாளர்கள் கட்சி வேறுபாடுகளுக்கப்பால் பிரகடனப்படுத்தப்படாத தேசியக் கொள்கையாக கொண்டுள்ளனர்.
– நீட்வூட் தோட்ட வேலை நிறுத்தம்
தோட்டத் தொழிலாளர்களை சொந்தக் காலில் நிற்க வைப்பதற்கான எந்த ஒரு வேலைத் திட்டமும் அரசாங்கத்திடமும் இல்லை தொழிற்சங்கங்களிடமும் இல்லை.
1990களில் ஹப்புத்தலை நீட்வூட் தோட்டத் தொழிலாளர்கள் சம்பள உயர்வு கோரிக்கையை முன் வைத்து வேலை நிறுத்தத்தில் இறங்கினர். இந்த வேலை நிறுத்தம் முழுக்க முழுக்க நீட்வூட் தோட்டத் தொழிலாளர்களினாலும் தோட்டக் கமிட்டிகளாலும் தீர்மானம் எடுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை உடைத்துவிட பல்வேறு சக்திகள் முயற்சித்தன. இதில் ஆச்சரியத்துக்குரிய விடயம் என்னவெனில் குறிப்பாக தொழிற் சங்கங்கள்; வேலை நிறுத்தப் போராட்டத்தை முடக்கிவிட பகீரதப்பிரயத்தனங்களை மேற் கொண்டன.பேச்சுவார்த்தைக்கென கொழும்புக்கு அழைக்கப்பட்ட தோட்டக் கமிட்டி தலைவரும் கமிடடி உறுப்பினர்களும் கொழும்பில் வைத்து வேலை நிறுத்தத்தைக் கைவிடுமாறு பயமுறுத்தப்பட்டனர்.
இந்த வேலை நிறுத்தப் போராட்டம் சுமார் 6 மாதங்கள் நடைபெற்றன. இறுதியில் தொழிலாளர்கள் வெற்றிபெற்று சம்பள உயர்வையும் பெற்றனர்.
இந்த வெற்றிக்குப் பின்னால் இருந்தது தொழிலாளர்களின் ஒற்றுமை மாத்திரமல்ல தொழிலாளர் குடும்பங்களில் பெரும்பாலானவர்கள் பொருளாதார ரீதியில் சொந்தக்காலில் நின்றமையாகும். அதாவது பெரும்பாலான தொழிலாளர் குடும்பங்கள் தோட்ட வேலையுடன் மரக்கறி செய்கையிலும் ஈடுபட்டுவந்தமையால் சம்பள உயர்வு போராட்டத்தில் வெற்றி பெற்றனர்.
இப்பொழுதாவது தோட்டத் தொழிலாளர்களை சொந்தக் காலில் நிற்பதற்கு வழி செய்யுங்கள் என்பதுதான் தோட்டத்துறை சார்ந்த தொழிலாளர்களுக்காக உழைக்க முன்வந்துள்ள மலையக தொழிற்சங்கத் தலைமைகளுக்கு மலையகத்தின் சார்பில் விடுக்கம் கோரிக்கையாகும்.
ஆயிரம் ரூபா சம்பள உயர்வுப் போராட்டத்தில் தொழிற்சங்கத் தலைமைகளான நீங்கள் பிளவுபட்டு நின்று தொழிலாளர்களை தோற்கடித்துவிட்டீர்கள். தனக்கு மூக்கு போனாலும் பரவாயில்லை எதிரிக்கு சகுனம் பிழைக்க வேண்டுமென்றவாறு நடந்து கொண்டு தொழிலாளர்களின் வயிற்றில் அடித்து விட்டீர்கள்.
ஆனால் சந்தா விடயத்தில் ஓரணியில் திரள முன் வந்தீர்கள்.
தற்போது தொழிலாளர்களின் வயிற்றில் அடி விழத் தொடங்கிவிட்டது. தொழிற்சங்கத் தலைமைகளே தெழிலாளர்களைக் காப்பாற்ற ஓரணியில் திரண்டெழுங்கள். இல்லையேல் அவர்களது சவங்களின் மீதுதான் தெழிற்சங்க அரசியலை நடத்த வேண்டிவரும். நீங்கள் முன் வராவிட்டால் தொழிலாளர்களே தலைமையேற்று காணி பகிர்ந்தளிக்குமாறு வீதியில் இறங்க வேண்டி வரும். தொழிலாளர்கள் வீதியில் இறங்கினால் அந்நியச் செலவாணியின் இறுதி மூச்சும் நின்றுவிடும்.