கனடா நக்கீரன்
உரலுக்கு ஒரு பக்கம் இடி. மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி என்பார்கள். தமிழ்மக்கள் மத்தளத்தின் நிலையில் உள்ளார்கள்.
இலங்கை வரலாறு காணாத பொருளாதார, அரசியல் நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. நாடு உத்தியோக பூர்வமாக ஒட்டாண்டி நாடாக அறிவிக்கப்பட்டு விட்டது. மக்கள், மண்ணெண்ணை, வாகன எரிபொருட்களுக்கு மணித்தியாலக் கணக்கில் நீண்ட வரிசைகளில் நிற்கிறார்கள். விவசாயிகள், மீனவர்கள் தங்கள் தொழிலுக்குப் பயன்படுத்தும் டீசல், மண்ணெண்ணை இல்லாததால் தொழில் செய்ய முடியாமல் அல்லாடுகிறார்கள். மக்கள் மூன்று நேர உணவுக்குப் பதில் இரண்டு நேரம் சாப்பிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.
இந்தியாவும் சீனாவும்தான் இலங்கை மூழ்கிவிடாது நிதி மற்றும் அரிசி, பால்மா போன்ற பொருள் உதவிகளை வழங்கிவருகின்றன. இந்த நாடுகளது உதவியில்லாவிட்டால் இலங்கை மக்கள் முழுப் பட்டினியோடு வாழ வேண்டி இருந்திருக்கும்.
இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடன் அ.டொலர் 51 பில்லியனாகும். கடந்த ஏப்ரில் மாதத்தில் இந்த ஆண்டில் திருப்பிக் கொடுக்க வேண்டிய அ.டொலர் 7 பில்லியன் கடனை திருப்பி அடைக்க முடியாது என இலங்கை அறிவித்தது.
இன்றைய நிலையில் ஒரு 10 அல்லது 15 பில்லியன் டொலர் கடன் மேலதிகமாகக் கிடைத்தாலே இலங்கை மீண்டு விடும். இதுவரை இந்தியா கொடுத்த 3- 4 அ.டொலர் 4 பில்லியளை இலங்கைக்கு கொடுத்துள்ளது. வேறு நாடுகள் இந்தளளவுக்கு உதவி செய்யவில்லை. இது இலங்கை அரசின் வெளியுறவுக் கொள்கை தோல்வி அடைந்ததைக் காட்டுகிறது.
பணக்கார நாடான அமெரிக்கா அ.டொலர் 6 மில்லியனை தருவதாகச் சொல்லியுள்ளது. அரசியல், மனிதவுரிமை போன்றவற்றில் இலங்கை முன்னேற்றத்தைக் காட்டினால் மட்டுமே நிதியுதவி வழங்க முடியும் என அமெரிக்காவின் இராசாங்க அமைச்சர் அண்டனி ஜே.பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
இப்படி இலங்கை உத்தியோக பூர்வமாக ஒட்டாண்டியாகி விட்ட நிலையில் சிங்கள – பவுத்த பேரினவாதிகள் மட்டும் பவுத்த விகாரைகளையும் புத்தர் சிலைகளையும் வட கிழக்கில் நிறுவும் முயற்சியில் மட்டும் தொடர்ந்து கண்ணும் கருத்துமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
குருந்தூர்மலையில் அமைக்கப்பட்ட புத்தர் சிலையை பிரதிஷ்டை செய்து வைக்கும் நிகழ்ச்சி கடந்த யூன் 12 இல் தமிழர்களின் பூர்வீக வழிபாட்டு இடமான முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர்மலையில் இடம்பெற இருந்தது. அதனையொட்டி தென்னிலங்கையில் இருந்து நூற்றுக் கணக்கான பவுத்த பிக்குகள், பவுத்தலோக நற்பணி மன்றத்தினர், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் பேருந்துகளில் வந்து இறங்கினார்கள். இந்த நிகழ்ச்சியை சிறிலங்கா இராணுவம் ஒழுங்குபடுத்தியிருந்தது.
ஏற்கனவே முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளைகளை மீறி, இராணுவத்தினரின் பூரண ஒத்துழைப்போடு “கபோக்’ கல்லினாலான புத்தர் சிலை ஒன்றைப் பிரதிஷ்டை செய்வதற்கும், அங்குபுதிதாக நிர்மாணிக்கப்பட்ட பவுத்த விகாரையின் கலசத்திற்குரிய சிறப்பு பூசை வழிபாடுளை மேற்கொள்ளவும் ஏற்பாடுகள் இடம் பெற்றிருந்தன.
இந்த முயற்சி தமிழ் மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. குருந்தூர்மலை தொடர்பில் ஏற்கனவே முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்றிருந்தன. அவற்றுக்கு அமைவாக, குருந்தூர்மலையில் எவ்வித மதக் கட்டுமானங்களும் மேற்கொள்ளப்படக் கூடாதென முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றால் உத்தரவிடப்பட்டிருந்தது.
எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டார்கள்.
அங்கு தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் அனுரமானதுங்க வருகைதந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுடன் கலந்துரையாடினார். குருந்தூர்மலையையும் பார்வையிட்டார். அதன்போது கருத்துத் தெரிவித்த அனுரமானதுங்க – குருந்தூர்மலைப் பகுதியில் தொல்லியல் ஆய்வின் மூலம் கிடைத்த எச்சங்களைப் பேணிப் பாதுகாப்பதற்காகப் புனர்நிர்மாணம் செய்யும் வேலைளையே தாம் முன்னெடுப்பதாகவும், அங்கு புதிதாக கட்டுமானங்கள், கட்டடங்கள் எதனையும் தாம் கட்டவில்லை எனவும் தெரிவித்தார்.
அத்தோடு தமது திணைக்களத்துக்கும், அங்குள்ள பவுத்த பவுத்த தேரர்களுக்கும், இராணுவத்திற்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை எனவும் என்னப்பன் குதிருக்குள் இல்லை என்று சொன்னவன் பாணியில் தெரிவித்தார். ஆனால் உண்மை அதுவல்ல. அவர் தெரிவித்த கருத்திற்கு மாறாக முன்பிருந்ததைவிட குருந்தூமலையில் பாரிய அளவில் பவுத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தொல்லியல் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள குருந்தூர் மலையில் பெருமளவான பவுத்த தேரர்களும் முப்படையினரும் வழிபாடுகளுக்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தமையை அவதானிக்க முடிந்தது.
குருந்தூர்மலையைச் சூழ உள்ள வயல்நிலங்கள் தொல்லியல் திணைக்களத்துக்கு உரியது எனக் கூறி பவுத்தபிக்கு ஒருவர் தமிழ் மக்களை வயல் செய்ய விடாது தடுப்பது தொடர்பிலும் தொல்லியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் அனுரமானதுங்கவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அவ்வாறு பவுத்த பிக்குகள் தடுப்பதற்கும் தமக்கும் எவ்வித தொடர்புமில்லை என அவர் பதிலளித்திருந்தார்.
உண்மையில் குருந்தூர்மலையில் விகாரை கட்டும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டது. கடந்த மே 10, 2021 இல் குருந்தாவ அசோக புராதன பவுத்த விகாரையின் சிதைவுகள் இருப்பதாகத் தெரிவித்து அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இரவிரவாக பிரித் ஓதப்பட்டு பவுத்த விகாரை ஒன்றைப் புதிதாக அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. குருந்தூர்மலை அகழ்வாராய்ச்சிகள் தொடர்பில் வெளிப்படை தன்மை பேணப்படாது உள்ளூர் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இராணுவத்தினரின் ஏற்பாட்டில் கடந்த நான்கு மாதங்களாக தொல்லியல் திணைக்களத்தால் அகழ்வாராய்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இப்போது போலவே அப்போதும் குருந்தூர்மலையில் பவுத்த விகாரை கட்டுவதற்கு அத்திவாரம் போடப்பட்ட போது முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமைப் படை அதிகாரி மற்றும் நூற்றுக்கணக்கான பவுத்த தேரர்கள், தொல்லியல் திணைக்களத்தினர் கலந்து கொண்டனர். அந்த இடத்தில் தோரணங்கள், அலங்காரங்கள், பவுத்த கொடிகள, பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன.
குருந்தூர்மலையில் கோவிட் 19 சுகாதார விதிமுறைகளிற்கு மாறாக தேரர்கள், இராணுவத்தினர் கூடி, மத நடவடிக்கைகள் ஈடுபட்டதற்கு எதிராக கரைத்துறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் முல்லைத்தீவு காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்தார். எனினும், காவல்துறை அந்த முறைப்பாட்டை முழுமையாக பதிவு செய்யாமல், பாதியிலேயே நிறுத்திக் கொண்டு விட்டதாக கரைத்துறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் தெரிவித்தார்.
மாந்தை கிழக்கு, துணுக்காய் ஆகிய பிரதேசங்களில் பல இடங்கள் தொல்லியல் சின்னங்களைப் பாதுகாக்கின்ற இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
குருந்தூர்மலையை மட்டுமல்ல நெடுங்கேணி, ஒலுமடு பாலமோட்டை கிராமத்தில் இருந்து கிட்டத்தட்ட 3 கிமீ தொலைவில் உள்ள வெடுக்குநாறி மலையையும் தொல்பொருள் திணைக்களம் சொந்தம் கொண்டாடுகிறது. சுமார் 3000 ஆம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த மலையானது பல வரலாற்றுச் சிறப்புக்களைக் கொண்டு காணப்படுகின்றது. பண்டய காலத்தில் நாகர்கள் இங்கு வாழ்ந்ததற்கான தடயங்கள் காணப்படுகின்றன. முந்நூறு மீற்றர் உயரமான வெடுக்குநாறி மலை அடிவாரத்தின் கீழ் தமிழ்ப் பிராமி கல்வெட்டுக்கள் மற்றும் வட்டெழுத்துக்கள் போன்றவற்றைக் காணமுடியும். மலையின் உச்சியில் ஆதி லிங்கேஸ்வரர் எனும் சிவனுடைய இலிங்கம் அமைந்துள்ளது.
மே 18, 2009 இல் போர் முடிவுக்கு வந்த பின்னர் வட கிழக்கு மாகாணங்களை சிங்கள மயப்படுத்தல் மட்டுமின்றி பவுத்த மயப்படுத்தும் வேலையும் மும்மரமாக இடம் பெற்று வருகிறது. இந்தப் பணியை மார்ச் 2020 இல் சனாதிபதி கோட்டாபய அவர்களால் நியமிக்கப்பட்ட செயலணி செய்து வருகிறது. இந்தச் செயலணியின் தலைவராக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ண தலைமையில் உருவாக்கப்பட்டுள்ளது. குருந்தூர்மலை பற்றி இந்தச் சனாதிபதி செயலணியின் உறுப்பினரான எல்லாவல மேத்தானந்த தேரர் என்ன சொல்கிறார்?
“குருந்தகம என்பதே தற்போது குருந்தூர் மலையாகியுள்ளது. இதனை எம்மால் எண்பிக்க முடியும் என்கிறார். வடக்கு – கிழக்கு மாகாணங்களில் காணப்படுகிற தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் 99 விழுக்காடு பவுத்த மரபுரிமைகளுடன் தொடர்புடையவை ஆகும்.
“வடக்கு – கிழக்கில் காணப்படும் ஆயிரக்காணக்கான தொல்பொருள் இடங்கள் தொடர்பில் நான் பல சந்தர்ப்பங்களில் ஆராய்ந்திருக்கிறேன். அவற்றில் 99 விழுக்காடு பவுத்த மரபுரிமைகளுடன் தொடர்புடையவை ஆகும். இவ்வாறிருக்க குருந்தூர்மலை விவகாரத்தில் வடக்குக் கிழக்கு தமிழ் அரசியல்வாதிகள் தவறான நிலைப்பாடுகளை சர்வதேச ரீதியில் ஏற்படுத்தியுள்ளனர்.
‘குருந்தகம’ என்ற இடமே இப்போது குருந்தூர்மலை ஆகியுள்ளது. நான் இந்த இடத்துக்கு மூன்று தடவைகள் சென்று சென்றிருக்கிறேன்.
1905 ஆம் ஆண்டு ஒரு ஆங்கிலேயர் ஒருவரால் செய்த ஆராய்வின்போதும் இது பவுத்த மரபுரிமைக்கு உரியது என எண்பிக்கப்பட்டது.
அதற்கமைய இந்த இடத்துக்கு நீண்ட வரலாறு உண்டு. அத்தோடு பொலநறுவை இராசதானி காலத்தில் பவுத்த பவுத்த மன்னர்களால் இந்த இடம் புனர் நிருமாணம் செய்யப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன. எனவே குருந்தர்மலை என்ற குருந்துகம பவுத்த விகாரை என உறுதியாகக் கூறிக்கொள்கிறோம்.
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் காணப்படுகின்ற மலைகள் பவுத்த விகாரைகளை அடிப்படையாகக் கொண்டவை ஆகும். அவற்றில் பல விகாரைகள் இடிக்கப்பட்டுக் கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.�
பண்டைய தமிழர்கள் பவுத்த சமயத்தவர்களாக இருந்திருக்கிறார்கள். பவுத்தம் தமிழ்நாட்டில் 2 ஆம் நூற்றாண்டில் இருந்து 9 ஆம் நூற்றாண்டுவரை செல்வாக்கோடு இருந்திருக்கிறது. அய்ம்பெரும் காப்பியங்களில் மணிமேகலை மற்றும் குண்டலகேசி ஆகிய இரண்டும் பவுத்த சமயத்தை சார்ந்தவை. 11ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட வீரசோழியம் பவுத்தம் சார்ந்த தமிழ் இலக்கண நூல் ஆகும்.
பக்தி இயக்க காலத்தில் தமிழ் பவுத்தர்கள் அடக்குமுறைக்கு ஆளானார்கள். தமிழ்நாட்டில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டனர். அவர்களில் பலர் இலங்கைத் தீவின் வட கிழக்குப் பகுதிகளில் குடியேறினார்கள். அப்படிக் குடியேறியவர்கள் தங்கள் வழிபாட்டுக்கு விகாரைகளைக் கட்டினார்கள். திரியாவில் காணப்படும் பவுத்த விகாரை இரண்டு தமிழ் வணிகர்களால் கிபி 8 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
இன்று வட கிழக்கில் காணப்படும் பவுத்த சமய எச்சங்கள் பவுத்த சமயத்தவர்களுக்கு உரியது. இதில் பவுத்த நாகர்களும் அடங்குவர்.
இலங்கைத் தீவு முழுதையும் சிங்கள – பவுத்த மயப்படுத்துவதே சிங்கள – பவுத்த பேரினவாதிகளின் குறிக்கோளாக இருக்கிறது. கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் பெரும்பான்மையை இழந்து விட்டார்கள். திருகோணமலை மாவட்டத்தில் இரண்டாவது இடத்துக்குத் (32.01 விழுக்காடு) தள்ளப்பட்டு விட்டார்கள். அம்பாரை மாவட்டத்தில் மூன்றாவது (23.23 விழுக்காடு) இடத்துக்கு தள்ளப்பட்டுவிட்டார்கள். மட்டக்களப்பு மட்டும் (72.8 விழுக்காடு) எஞ்சியிருக்கிறது.
இலங்கைத் தீவு ஒண்டாண்டியாகப் போனாலும் பருவாயில்லை அதனை ஒரு சிங்கள – பவுத்த தீவாக மாற்ற வேண்டும் என்பதில் சிங்கள – பேரினவாதிகள் குறியாக இருக்கிறார்கள்.