சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன்
பிளவுபடுத்தப்பட்டுள்ளார்களோ அதே போன்றுதான் ஊடகங்களும் பிளவுபட்டுள்ளன அல்லது பட்டுள்ளனர். ஊடகங்கள் பிளவுபட்டு நிற்பதால் உண்மையான செய்திகளும் நியாயமான விமர்சனங்களும் பன்னாட்டுக் கருத்துக்களும், அரசின் நிலைப்பாடும் மக்களுக்குச் சென்றடைவதில்லை. இது மும்மொழி ஊடகங்களுக்கும் பொருந்தும்.
அவ்வகையில் கடந்த வாரம்- குறிப்பாகச் சொல்ல வேண்டுமாயின் கடந்த வெள்ளிக்கிழமை (10 ஜூன்) மாலை அமெரிக்க அரசின் மிகவும் முக்கியமானதொரு அறிக்கை வெளியானது. அது அடுத்த நாள் சனிக்கிழமை இலங்கையில் அவதானிக்கப்பட்டிருக்க வேண்டும், ஆனால் அது கவனிக்கப்பட்டதா அல்லது அதை கண்டும் காணாமல் இருந்ததார்களா என்பது அந்த புத்த பகவானுக்கே வெளிச்சம்.
அமெரிக்க செனட்டின் வெளியுறவு குழுவின் தலைவர் ராபர்ட் மெனெண்டிஸ் வெளியிட்டிருந்த அந்த அறிக்கையை மேலோட்டமாகப் பார்க்கும் போது, அதற்கும் இலங்கைக்கும் பெரியளவில் தொடர்பில்லை, அது குவாட் அமைப்பு என்று அறியப்படும் அமெரிக்கா, ஜப்பான், இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர்களுக்கு எழுதப்பட்ட கடிதமாகவேத் தோன்றும். அண்மையில் இந்த நான்கு நாடுகள் பங்குபெற்ற ஒரு மாநாடு தொடர்பில் அவர்களுக்கு ராபர்ட் மெனெண்டிஸ் எழுதியிருந்தார். அதில் இந்த நான்கு நாடுகளும் இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு அவர்கள் மேலும் கூடுதலாக ஈடுபட வேண்டும் என்று கூறியிருந்தார். ஆனால் கடிதத்தில் அது முக்கியமான விஷயமில்லை.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இணையப் பாதுகாப்பு, வான்வெளி பாதுகாப்பு, மிகவும் நுட்பமான மற்றும் வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தில், மேலும் கூடுதல் ஒத்துழைப்பு ஆகியவற்றுடன் தடுப்பூசி தயாரிப்பு மற்றும் பரிமாற்றம், காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பது ஆகியவற்றில் இணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தை அவர் வெளிப்படுத்தியிருந்தார். அதிலும் குறிப்பாக இந்திய – பசிபிக் பிராந்தியத்தில் இந்த நான்கு நாடுகளும் புதிதாக ஏற்படுத்தியுள்ள கடல்சார் விழிப்புணர்வு மற்றும் கூட்டுறவு குறித்தும் பேசிய அவர் மிகவும் முக்கியமாக இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில், அண்டைநாடுகளுக்கு அவர்கள் மேலும் உதவி செய்ய வேண்டும், அதை இலங்கையிலிருந்து தொடங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
ஆனால் ஏன் இலங்கை? அதற்கான அடிப்படை காரணம் அவர்களுடைய பொது எதிரி என்று அறியப்படும் சீனா மற்றும் இலங்கையுடனான அதன் நெருக்கம் என்பது அறிந்தவொன்றே.
கடந்த 2004 ஆம் ஆண்டில் ஆசிய சுனாமி ஏற்பட்ட போது எப்படி இந்த நான்கு நாடுகளும் இணைந்து செயல்பட்டனவோ அதே போன்று இலங்கையில்தற்போது நிலவும் மனிதாபிமான நெருக்கடியிலும் கவனம் செலுத்துமாறும் வேண்டியுள்ளார். இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி வெடித்துச் சிதறி பெரியளவில் மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தி அது பிராந்திய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்று கவலை வெளியிட்டுள்ளார். ஆனால் அதிலும் பார்க்க அவர் அடுத்த பத்தியில் ராஜபக்சக்களையும் அவர்களது அரசையும் மிகக் கடுமையாகச் சாடியிருந்தார்.
“ராஜபக்சக்களின் கீழ் இலங்கை நிதிச் சீரழிவு மற்றும் மனிதாபிமான அவலத்தின் விளிம்பில் உள்ளது. மகிந்த ராஜபக்ச நாட்டை நேரடியாக கடன் வலையில் தள்ளிவிட்டார், கோத்தாபய ராஜபக்ச அரச கடன் பத்திரங்களுக்கான தொகையைத் திருப்பியளிக்க விவேகமான எந்த பொருளாதார நடவடிக்கையும் எடுக்கவில்லை. இன்று இலங்கையிலுள்ள அனைத்து மக்களும் கிளர்ந்தெழுந்து மாற்றத்திற்கான நேரம் வந்துள்ளது என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளனர்.”
அமெரிக்க செனட்டின் வெளியுறவு குழுவின் தலைவர் ராபர்ட் மெனெண்டிஸ் வெளியிட்டிருந்த அந்த அறிக்கை மிகவும் காட்டமானது. இலங்கை நிலையை அமெரிக்கா எப்படி பார்க்கிறது ; எந்தளவுக்கு ராஜபக்ச அரசு மீது அமெரிக்கா மோசமான எண்ணத்தையும் அவநம்பிக்கையையும் கொண்டுள்ளது என்பதை இந்தக் கடிதம் வெளிப்படையாக எடுத்துக்காட்டுகிறது. சீனாவுடன் பல ஆண்டுகளாக இலங்கை அரசு கொஞ்சி குலாவுவதை அமெரிக்கா எப்போதுமே கடுப்புடனேயே பார்த்துள்ளது என்றாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஜனநாயக அரசு மற்றும் அதன் தலைவர்கள் மீது பெயரிட்டு இப்படியான விமர்சனங்கள் வெளியிடுவதுஅரிதாகவே இருக்கும்.
அபிவிருத்தி என்கிற போர்வையில் சீனாவின் கடன் கொள்கை என்பது எப்போதுமே `ஒட்டகமும் கூடாரமும்` கதை தான். இதற்கு மிகச் சிறந்த உதாரணம் இன்று பல ஆப்ரிக்க நாடுகளின் கையறு நிலை. எடுத்துக்காட்டாக இன்று உகாண்டாவின் உள்ளூர் ஆட்கள் யாரும் கோழிப் பண்ணை வர்த்தகத்தில் ஈடுபட முடியாது. அது முழுமையாக சீனர்களின் வசம். நாட்டின் மிகப்பெரிய விமான நிலையமான எண்டபே விமான நிலையம் சீனாவின் கைகளுக்குச் சென்றுவிட்டது. ஆப்ரிக்காவின் பல நாடுகளில் இன்று உள்ளூர் ஆட்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை, இயற்கை வளங்கள் சீனாவின் கையில், வேலைக்கும் அங்கிருந்தே ஆட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றனர். இந்த நிலையை நோக்கித்தான் இலங்கையும் சென்று கொண்டிருக்கிறது. மூன்று தசாப்தங்கள் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தை காரணத்தைக் காட்டி பன்மடங்கு தேவைக்கு அதிகமான இராணுவத்தை உருவாக்கி அவர்களுக்குத் தீனிபோட சீனாவிடமிருந்து பல்லாயிரம் கோடி டாலர்கள் கடன். அந்த போரை ஆதரித்த நாடுகளும் அதை அப்போது கண்டுகொள்ளவில்லை. போருக்குப் பிறகு தேவைக்கும் அதிகமாக-மீள்வருமானம் இல்லாத திட்டங்களுக்காக அபிவிருத்தி என்கிற போர்வையில் மேலும் மேலும் கடன் வாங்கியது இலங்கை. அதிலும் பெரும்பாலான கடன்கள் சீனாவிடமிருந்து. இப்போது வாங்கிய கடனை அடைக்கவும் வழியில்லை, மேலதிகமாக கடனை வாங்கவும் வழியில்லாத சூழலில் நாட்டின் நிலை “ஆப்பை பிடுங்கிய குரங்கு’’ போலுள்ளது. வேறு வழியின்றி கொழும்பு துறைமுகத்தின் பசையுள்ள பகுதியை சீனாவிற்கு தாரைவார்த்துவிட்டது அரசு.அது பிராந்திய பாதுகாப்பிற்கு பெரிய அச்சுறுத்தலாக அமையும் என்று ஏற்கெனவே இந்தியாவும் அமெரிக்காவும் தெரிவித்திருந்தன. ஆசியாவில் சீனாவைக்கட்டுப்படுத்திக் கையாள வேண்டுமென்றால் அதற்கு இந்தியாவின் துணை அவசியம் என்பதை உலக நாடுகள் அறிந்துள்ளன. அதேவேளை சீனாவும் பொருளாதார ரீதியாக பலவீனமாகவுள்ள நாடுகளுக்கு உதவுவது போல் அவற்றை தனது பிடியில் கொண்டுவரும் உத்தியை கையாண்டு வருகிறது. அதாவது மறைமுகமாக நாடு பிடிப்பது.
இப்போது அமெரிக்க செனட்டின் வெளியுறவுக் குழுவின் தலைவர் எழுதியுள்ள அந்த கடிதத்தில் இலங்கை மேலும் நெருக்கடிக்குள் விழாமல் இருப்பதற்காக இந்தியா கடன்களும் மனிதாபிமான உதவிகளையும் செய்து ஆக்கபூர்வமாக ஈடுபட்டு வருகிறது என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேவேளை அமெரிக்காவும் நீண்டகால பொருளாதார ஆதரவை வழங்கத் தயாராகி வருகிறது எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்க உதவி கிடைக்கும் என்பது உறுதியாகிறது என்றாலும், சீனா விலக்கி வைக்கப்பட வேண்டும், அதற்கு முதற்படியாக ராஜபக்சக்கள் நீக்கப்பட வேண்டும் என்கிற செய்தி மிகவும் வெளிப்படையாகக் கூறப்பட்டுள்ளது. இலங்கை மக்களுக்கு உணவு உதவிகளை ஜப்பான் வழங்கி வருவதையும் பாராட்டியுள்ள அமெரிக்கா குவாட் அமைப்பிலுள்ள இந்த நான்கு நாடுகளும் இலங்கைக்கு மிகவும் தேவையான எரிபொருட்கள் மற்றும் இதர பொருட்களை அளித்து மேலும் மனிதாபிமான உதவிகளைச் செய்ய முடியும் என்று வலியுறுத்தியுள்ளது. அதாவது நாங்கள் இருக்கிறோம்-சீனா எதற்கு என்பது தான் இங்கே செய்தி.
ஜப்பானும் ஆஸ்திரேலியாவும் இணைந்து இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் மனிதாபிமான மற்றும் பேரிடர் நிவாரண வழிமுறைகளைக் காத்திரமாக முன்னெடுக்க முடியும் என்கிறது அந்த கடிதம். இலங்கையில் நிலவும் கடுமையான உணவு நெருக்கடியும் இந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தற்போது இலங்கைக்குத் தேவையான நிதி மேலாண்மை மற்றும் பொருளாதார அடிப்படைகளைக் கட்டியெழுப்பி அது நிலைத்திருக்க இந்த நான்கு நாடுகளும் ஆதரவளிக்கும் என்றும் ராபர்ட் மெனண்டிஸ் குவாட் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.
அது மட்டுமின்றி ராஜதந்திர ரீதியாக, இலங்கையின் மனித உரிமைகள் மீறல் விஷயத்திலும் ஒன்றாக நிற்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ நா மனித உரிமைகள் பேரவையில் அதன் ஆணையரின் அறிக்கை இந்தாண்டு அளிக்கப்படும் போது நான்கு நாடுகளும் ஒரே நிலைப்பாட்டில் இணைந்து நின்று குரல்கொடுக்க வேண்டும் என்றும் அவரது அறிக்கை வலியுறுத்தியுள்ளது. ராஜதந்திர ரீதியிலான ஒற்றுமை பொறுப்புக்கூறலுக்கு குவாடின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி பன்னாட்டு மனித உரிமைகள் சட்டம் மதிக்கப்படுவதை உறுதிசெய்யும் என்றும் அதிமுக்கியமான அந்தக் கடிதம் கூறுகிறது.
இதிலிருந்து ஒரு விஷயம் தெளிவாகிறது. ராஜபக்சக்களின் ஆட்சி தமக்கு ஏற்புடையதல்ல, அவர்கள் ஆட்சிஅதிகாரத்திலிருந்து வெளியேற வேண்டும் என்பதை அமெரிக்கா அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துள்ளது.சுருக்கமாகச் சொன்னால் நீங்கள் வெளியேறுங்கள் அல்லது வெளியேற்றப்படுவீர்கள் என்பதே அமெரிக்கா விடுக்கும் செய்தியாகவுள்ளது.
இதேவேளை இலங்கை பொருளாதாரம் வளர்வதற்கு அமெரிக்கா 120 மில்லியன் டாலர்கள் கடன் வழங்கி ஆதரவளிக்கும் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. தமது பன்னாட்டு வளர்ச்சி நிதி கழகத்தின் மூலம் இந்த கடன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
”இந்த கடனுதவி சிறிய மற்றும் இடைநிலை வர்த்தகங்களுக்குப் பெரிய உதவியாக இருக்கும், அதன் மூலம் அவர்கள் சமத்துவத்தைப் பேணி, புதிய வேலை வாய்ப்புகளை எதிர்காலத்தில் உருவாக்குவார்கள்” என்று கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதர் தெரிவித்துள்ளார். இலங்கையின் கமர்ஷியல் வங்கி மூலம் இதில் 100 மில்லியன் டாலர்கள் அளிக்கப்பட்டு அவை சிறு மற்றும் குறுந்தொழில்களுக்கு கடனாக வழங்கப்படும், அதிலும் பெண்களால் நடத்தப்படும் வர்த்தகங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
தாங்கள் சொல்ல வேண்டியதை அமெரிக்கா மிகத் தெளிவாகச் சொல்லிவிட்டது. “ராஜபக்சக்களே, நீங்கள் வெளியேறுங்கள் மற்றதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம், அப்படிச் செய்ய மறுக்கும்பட்சத்தில் மக்கள் மூலம் நீங்கள் நீக்கப்படுவீர்கள்” என்பதே அந்த செய்தி.
சீப்பை ஒளித்து வைத்துவிட்டால் திருமணம் நின்றுவிடும் என்று கனவு காணும் `ஒத்து ஊதும் ஊடகங்கள்” இந்த கடிதம் மற்றும் செய்தியை மக்களிடமிருந்து மறைத்தாலும், ஊதுகிற சங்கு ஊதப்பட்டுவிட்டது.
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.