கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு கடன் வழங்கும் திட்டங்களில் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் அமைப்பின் உயர்மட்ட அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
அனைத்து பரிவர்த்தனைகளிலும் சட்டத்தின் ஆட்சி, பொருளாதாரம், சமூகம் மற்றும் கலாச்சாரம் மற்றும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறு சர்வதேச நாணய நிதியத்திற்கு (IMF) சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது.
மே மாதம் இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் தொழில்நுட்ப கலந்துரையாடல்களை முன்னெடுத்த, பிரதிநிதிகள் குழுவொன்று விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) அண்மையில் அறிவித்துள்ளது.
தொலைநோக்குப் பார்வையற்ற பொருளாதாரக் கொள்கைகளால் மீள செலுத்த முடியாத இலங்கையின் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைக்க சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் புதிய கடன்களைப் பெறுவதற்கு கோட்டாபய – ரணில் கூட்டணி அரசாங்கம் நம்புகிறது.
கடன்களை மீளச் செலுத்தும் திட்டங்களை உருவாக்கும் போது ஏழை மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீங்கு விளைவிக்காமல் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும், சர்தேச நாணய நிதியத்தின் முன்னைய அறிக்கையை நினைவுகூர்ந்த சர்வதேச மன்னிப்புச் சபை, அந்த அறிக்கையை உண்மையாக்கும் வகையில் செயற்பட வேண்டிய பொறுப்பை கொழும்பு வதிவிடப் பிரதிநிதியிடம் வலியுறுத்தியுள்ளது.
“இந்த கடினமான காலங்களில் மேற்கூறிய வாக்குறுதிகள் உண்மையான மற்றும் பயனுள்ள பாதுகாப்பாக மாற வேண்டுமானால், சர்வதேந நாணய நிதியம் மற்றும் இலங்கைக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தப்படும் எந்தவொரு எதிர்கால பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டமும் மனித உரிமை மையமாக இருக்க வேண்டும்” என சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் யாமினி மிஸ்ரா கூறியுள்ளார்.
சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம் மற்றும் வெளிநாட்டுக் கடன் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் சாசனத்தின்படி மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டத்தை நிலைநிறுத்துவதற்கு ஐக்கிய நாடுகளின் நிறுவனமான சர்வதேச நாணய நிதியம் உறுதிபூண்டுள்ளது என மன்னிப்புச் சபை குறிப்பிடுகிறது.
இதற்கமைய மனித உரிமைகளை அனுபவிப்பதற்கு விரோதமான எந்தவொரு கொள்கையிலும் அல்லது திட்டத்திலும் முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும் என மன்னிப்புச் சபை கோரியுள்ளது.
“கடன் வாங்கும் அரசாங்கத்திற்குள் மனித உரிமைகளை மீறும் அல்லது எதிர்காலத்தில் மீறும் நடவடிக்கைகள் அல்லது திட்டங்களில் முதலீடு செய்யக்கூடாது. அதேவேளை, கடன் வாங்கும் நாடுகள் தங்கள் மனித உரிமைக் கடமைகளை நிறைவேற்றும் திறனை சமரசம் செய்யாமல் வெளிநாட்டுக் கடனைத் மீளச் செலுத்தும் திறனைக் கொண்டுள்ளன என்பதில் கடன் வழங்குபவர்கள் திருப்தி அடைய வேண்டும்.”
500 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான காற்றாலை மின்சாரத் திட்டத்தை வடக்கில் சர்ச்சைக்குரிய இந்தியாவின் அதானி குழும நிறுவனத்திற்கு வெளிப்படையான டெண்டர் கோராமல் இலங்கை வழங்கியதற்கு எதிராக கொழும்பில் உள்ள போராட்டக்காரர்கள் தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மன்னார் கடற்றொழிலாளர் சங்கத்தின் தலைவர்கள் ஆரம்பம் முதலே எதிர்ப்புத் தெரிவித்ததுடன், மீன்பிடித் தொழிலுக்கு ஏற்படும் பாதிப்பினால் தமது வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படும் என எச்சரித்தனர்.
இலங்கையுடனான பொருளாதார, சமூக மற்றும் நாணயக் கொள்கை சீர்திருத்தம் தொடர்பான அனைத்து உடன்படிக்கைகளும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொது ஆய்வுக்கு உட்பட்டவை என்பதை உறுதிப்படுத்துமாறு சர்வதேச நாணய நிதியத்தின் கொழும்பில் உள்ள கொழும்பு பிராந்திய பிரதிநிதியிடம் சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் மேலும் கோரியுள்ளார்.