மன்னார் நிருபர்
19-06-2022
வவுனியா 653 -ம் படைப் பிரிவின் ஒழுங்கமைப்பில் பிரிக்கேடியர் கொமாண்டர் நாமல் சேரவிங்க தலைமையில் பொதுமக்களுக்கு உலருணவு பொதிவழங்கும் நிகழ்வு இன்றைய தினம் (19) மன்னாரில் இடம் பெற்றுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியில் மக்களுக்கு உதவும் பொருட்டு LOVE WITHOUT BORDERS – Compassion Relief எனும் தொனிப்பொருளில் இலங்கையை சேர்ந்த Thalagala Sri Sriddhartha Foundation (தலகல சிறி சிறித்தார்த அறக்கட்டளை) – யுடன் Tan Ngak Buay & Kee Meng Lang Foundation Limited (Singapore) இணைந்து நாடுமுழுவதும் 63.75 மில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டில் 42,500 குடும்பங்களுக்கு உதவும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ், வவுனியா 653 -ம் பிரிவு பிரிக்கேடியர் கொமாண்டர் நாமல் சேரவிங்க தலைமையில் வவுனியா மற்றும் மன்னாரை சேர்ந்த 1500 குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கிவருகின்றனர்.
இந்நிலையில் இந் நிகழ்ச்சி திட்டத்தின் ஒரு பகுதியாக மன்னார், மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பெரியபண்டிவிரிச்சான் கிழக்கு, மேற்கு மற்றும் சின்னப்பண்டிவிரிச்சானை சேர்ந்த கிராம சேவகர்கள் பிரிவிற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பயனாளர்களுக்கும், வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பெரியதம்பனை கிராம சேவகர் பிரிவை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட பயனாளர்களுக்கும் மன்னார், மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பெரியபண்டிவிரிச்சான் பகுதியிலுள்ள பெரியபண்டிவிரிச்சான் தேசிய பாடசாலையில் உலருணவு பொதிவழங்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக 653 -ம் பிரிவின் கொமாண்டர் மேஜர் ஜெனரல் அனில் சமரசிறி அவர்களும், சிறப்பு விருந்தினராக செட்டிகுளம் பிரதேச செயலாளர் மதகுருக்கள், மடு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ராஜபக்ச, மடு ராணுவப்பிரிவின் சிவில் ஒழுங்கமைப்பாளர், மடு (பெரியபண்டிவிரிச்சான்) பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர், பெரியபண்டிவிரிச்சான் தேசிய பாடசாலையின் அதிபர், கிராம சேவகர்கள், ஆசிரியர்கள், மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.