தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் இராசதானியத் திட்டத்தின்கீழ் அளவெட்டியில் விவசாயிகளுக்குத் தானியங்களை வழங்கியுள்ளது. நாட்டில் நிலவுகின்ற கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக விரைவில் உணவுப்பஞ்சம் ஏற்படலாமென பல்வேறு தரப்பினரும் எச்சரித்து வருகின்றனர். இதற்கு முகங்கொடுக்கும் விதமாகத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் தமிழ் மக்களின் உணவுப் பண்பாட்டில் இருந்து வழக்கொழிந்து போய்க்கொண்டிருக்கும் சிறுதானியங்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் இராசதானியம் என்ற திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது. சிறுதானியங்களை மீள முடிசூட்டுவோம் என்ற தொனிப்பொருளுடன் முன்னெடுக்கப்பட்டுவரும் இத்திட்டத்தின் தொடர்ச்சியாகவே அளவெட்டியில் நேற்று திங்கட்கிழமை (20.06.2022) விதைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
அளவெட்டி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்க மண்டபத்தில் விவசாயச் சம்மேளனத்தின் தலைவர் வை. சின்னப்பு தலைமையில் விதைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் இத்திட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கமளித்தார். ஓய்வுநிலைப்பிரதி விவசாயப் பணிப்பாளர் பொ. அற்புதச்சந்திரன் தானியங்களின் செய்கைமுறை பற்றி விளக்கமளித்ததோடு விவசாயிகளின் சந்தேகங்களையும் தெளிவுபடுத்தினார். இந்நிகழ்ச்சியில் அளவெட்டி மற்றும் அயற்கிராமமான மல்லாகம் கல்லாரையைச் சேர்ந்த 25 விவசாயிகளுக்குக் குரக்கன், வரகு, பயறு, காராமணி விதைகள் உடனடி விதைப்புக்கென வழங்கப்பட்டுள்ளன.
வழங்கப்படும் விதைகளின் எடையின் இரட்டிப்பு மடங்கு விதைகளைச் சுழற்சிமுறையில் வேறு விவசாயிகளுக்கு வழங்கும்பொருட்டு அறுவடையின் பின்னர் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்திடம் கையளிக்கவேண்டும் என்ற உடன்படிக்கையின் அடிப்படையில் இத்திட்டம் முன்னெடுக்கப்படுவதும் விளைபொருட்களைச் சந்தைப்படுத்துவதற்குத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் தேவையான ஏற்பாடுகளைச் செய்துகொடுக்கும் என்ற உத்தரவாதத்தை வழங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கன.