மயிலாடுதுறையில், இரண்டு கைகள் இல்லாத பெண், சிறுவயதிலேயே தாய் தந்தையரால் புறக்கணிக்கப்பட்டு, ஆதரவு இல்லத்தில் வளர்ந்து, தற்போது நம்பிக்கையுடன் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி, அதில் தேர்ச்சி பெற்று தன்னம்பிக்கைக்கு உதாரணமாக திகழ்கிறார். அவரது வெற்றி, அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், கடந்த மே மாதம் 5-ம் தேதி தொடங்கி நடைபெற்றது. இதில், மயிலாடுதுறை அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், லெட்சுமி என்ற மாணவி இரண்டு கைகளும் இல்லாத நிலையில் ஆசிரியர் உதவியுடன் தேர்வு எழுதினார்.
பிறந்தபோது இரண்டு கைகளும் இல்லாத பெண் குழந்தை என்பதால், பெற்றோரால் புறக்கணிக்கப்பட்டு மயிலாடுதுறை ஆதரவற்றோர் காப்பகமான அன்பகத்தில், இரண்டு வயது குழந்தையாக இருந்ததில் இருந்து தற்போது வரை அங்கேயே வளர்ந்து வருகிறார் லெட்சுமி. இரண்டு கைகள் இல்லாத நிலையில், சிறிதும் மனம் தளராமல் தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுதிய மாணவி லட்சுமி, இத்தேர்வில் 277 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார். தேர்ச்சி பெற்ற மாணவியை, காப்பக நிர்வாகி மற்றும் சக மாணவ மாணவியர்கள் பாராட்டி இனிப்பு வழங்கினர். ” தோல்வியுறும் மாணவ – மாணவியிர் லெட்சுமி தேர்ச்சி பெற்றிருப்பதை உதாரணமாகக் கொள்ள வேண்டும். அவரது வெற்றி பாராட்டுக்குரியது” என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.