பொன். வேதமூர்த்தி
கோலாலம்பூர், ஜூன் 20:
இந்தியர்களுக்கு வலிமைமிக்க ஒரு தலைவர் தேவை என்றும் நாட்டின் நூறாவது மெர்டேக்கா(சுதந்திர தினக்) கொண்டாட்டம் அர்த்தமுள்ளதாகவும் தேசப்பற்றை முழுமையாக பிரதிபலிக்கக் கூடியதாகவும் அமைய வேண்டும் என்று மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி தேசியத் தலைவர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இந்திய சமுதாயத்தைப் பாதிக்கும் வகையில் நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்சினைகள் குறித்தும், அரசாங்கத்தின் தவறான கொள்கை குறித்தும் கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ள தலைவர்களை நோக்கி துணிந்து கேள்வி எழுப்பக்கூடியவர்களாகவும் இந்திய சமுதாயத்திற்காக குரல் எழுப்புவதால் ஏற்படும் சவாலை சந்திப்பவர்களாகவும் அந்தத் தலைவர்கள் விளங்க வேண்டும் என்று, இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒற்றுமைத் துறை முன்னாள் அமைச்சருமான அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் 35 ஆண்டுகளில் மெர்டேக்கா நூற்றாண்டு விழாவைக் கொண்டாட இருக்கிறோம். பி-40 தரப்பினர் உள்ளிட்ட நலிந்த இந்திய மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் அளவிற்கு மலாய்த் தலைவர்களை எந்த அளவிற்கு நம்முடைய தலைவர்கள் இசைய வைக்கிறார்களோ அந்த அளவிற்குத்தான் நம் எதிர்கால சந்தததியரின் வாழ்வும் இருக்கும். பெரும்பாலான மலேசியத் தலைவர்கள் நம்பிக்கை இழந்துள்ளதுடன் கேள்வி எழுப்பினால், எங்கே தமது பதவியும் அதிகாரமும் பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் இருக்கின்றனர். இத்தகைய தலைவர்கள்தான், மலேசிய இந்திய அரசியலில் நீண்ட காலமாகமே, ஏகபோக உரிமையைப் பெற்றுள்ளனர்.
கோலாலம்பூரில் வணிகத் தரப்பினரை அண்மையில் சந்தித்தபோது, அவர்கள் தைரியமான தலைவர்கள் வேண்டும் என்றனர். அதேவேளை, பயத்தின் காரணமாக இருக்கும் தலைவர்களை எதிர்கொள்ளத் தயங்குகின்றனர். இருப்பினும், சுயநல இந்தியத் தலைவர்கள் அரசியல் ஏகபோகமாக ஆக்கிரமித்து இருப்பதற்கு முடிவு காண வேண்டும் என்ற அவாவை அவர்கள் வெளிப்படுத்தினர்.
ஹிண்ட்ராஃப் இயக்கத்தில் இருந்து உருவான எம்ஏபி கட்சி, இந்தியர்களின் உரிமையில் எந்த சமரசத்தையும் ஏற்படுத்திக் கொள்ளாது என்று அவர்களிடம் உறுதியளிக்கப்பட்டதாக வேதமூர்த்தி கூறினார். இந்தியர்களின் மேம்பாட்டிற்கான திட்டங்களை வரைந்துள்ள எம்ஏபி, இதன் தொடர்பில் மத்தியக் கூட்டரசு அக்கறைக் காட்டினால் இணைந்து செயல்படக்கூடிய பல்துரைசார் வல்லுநர் குழுவையும் கொண்டிருப்பதாக மலேசிய இந்தியர்களுக்காக பன்னாட்டு நடுவர் நீதிமன்றம் வரை சென்று குரல்கொடுத்தத் தலைவருமான பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, தன்னலமற்று, மக்களுக்காக சேவையாற்றும் உறுதியான தலைமைத்துவத்தையும் எம்ஏபி கொண்டிருக்கிறது என்றும் நம் எதிர்கால சந்ததிக்காக எந்தத் தியாகத்திற்கும் எம்ஏபி தலைவர்கள் தயாராக இருக்கின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.