சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன்
இந்தியாவில் ஜனாதிபதி அல்லது குடியரசுத் தலைவர் பதவி என்பது சம்பிரதாயமானது தான். நாட்டின் முதல் குடிமகன் என்கிற வகையில் அனைத்தும் மரியாதைகளும் அவருக்கே முதலில் அளிக்கப்படும். உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி, தேர்தல் ஆணையர், அரசுப் பணிகளுக்கான தேர்வாணைய குழுவின் தலைவர், மாநில ஆளுநர்கள் போன்று மத்திய அரசால் செய்யப்படும் அனைத்து நியமனங்களும் அவரது பெயரிலேயே நடைபெறும். பெயரளவில் அவரே முப்படைகளின் தலைமைத் தளபதியாகவும் இருப்பார். உலக வல்லரசுகளான அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளின் அதிபர்கள் இந்தியாவிற்கு விஜயம் செய்யும் போது அவர்களை விமான நிலையம் சென்று வரவேற்று, விருந்தளித்து மரியாதை செய்வதும் அவரே. நாட்டின் வளர்ச்சி, சமூக மேம்பாடு, சிறந்த நிர்வாகம், கலை மற்றும் கலாச்சாரம், விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளில் மிகச்சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கு உயரிய விருதுகளை வழங்கி கௌரவிப்பது போன்ற பல பெருமைகள் இந்தியக் குடியரசுத் தலைவருக்கு உண்டு.
அவ்வகையில் இந்தியாவின் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவர் ஆளும் கட்சி அல்லது அவர்கள் சார்ந்திருக்கும் கூட்டணியைச் சேர்ந்தவராகவோ அல்லது அவர்களால் முன்மொழியப்படுபவர்களாகவே இருப்பார்கள். நேரடியான அரசியலில் இல்லாமல் ஆளும் கட்சியால் முன்மொழியப்பட்டு ஜனாதிபதியானவர் தமிழகத்தை நேர்ந்த அப்துல் கலாம். வாஜ்பாய் பிரதமராக இருந்த போது அவருக்கு அறிவியல் ஆலோசகராக இருந்தவர் கலாம். அதே போன்று இந்தியாவின் முதல் ஜனாதிபதியாக இருந்த கலாநிதி ராஜேந்திர பிரசாத்திற்குப் பிறகு யாரும் ஒரு பதவிக் காலத்திற்கு மேல் இருந்ததில்லை. அதேவேளை சர்ச்சையில் சிக்காத ஜனாதிபதிகளும் இல்லை. தத்துவக் கலாநிதி ராதாகிருஷ்ணன், இந்திய அரசியல் சட்டத்தில் முதலாவதாக ஆய்வை மேற்கொண்டு கலாந்திதி பட்டத்தைப் பெற்றிருந்த சங்கர் தயாள் சர்மா, ஐந்து ஆண்டுகள் பதவிக் காலத்தில் நான்கு பிரதமர்களை எதிர்கொண்டு அவர்களுடன் செயல்பட்ட ஆர் வெங்கட்ராமன் போன்றவர்களும் இந்திரா காந்தியின் கைப்பாவையாக இருந்தவர்கள் என்கிற விமர்சனத்திற்கு ஆளான வி வி கிரி, ஜெயில் சிங் போன்றவர்களும் குடியரசுத் தலைவர்களாக இருந்துள்ளனர். அதே போன்று 1969 ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் கட்சியால் வேட்பாளராக நிறுத்தப்பட்ட நீலம் சஞ்ஜீவ ரெட்டி அக்கட்சியாலேயே தோற்கடிக்கப்பட்ட சம்பவமும் இடம்பெற்றது. அந்த தேர்தல் எப்படி இந்தியாவின் அரசியல் ஆட்சி அதிகாரத்தையே மாற்றியமைத்தது என்பது வரலாறு. காங்கிரஸ் கட்சி குறுக்காக பிளவுபட்டதும், ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட மூத்த தலைவர்கள் பிரிந்து சென்று `மக்கள் கட்சி` என்று அறியப்பட்ட ஜனதா கட்சியைத் தோற்றுவித்ததும் அந்த தேர்தலில் பின்னணியிலேயே நடைபெற்றது.
ஒரு பெண் ஜனாதிபதியாக வரவேண்டும், அதன் மூலம் பெண்களின் வாக்குகளை கவரவேண்டும் என்பதால், முதல் நாள் வரை யாரென்றே அறியப்படாத பிரதீபா பாட்டிலை குடியரசு தலைவர் பதவிக்கான வேட்பாளாராக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி அறிவித்து வெற்றிபெறச் செய்தார். தற்போது குடியரசுத் தலைவராக இருந்து ஜூலை மாதம் பதவி விலகவுள்ள ராம்நாத் கோவிந்த் அவர்களும் பதவிக்கு வருவதற்கு முன்னர் நாடாளவில் பெரிதாக அறியப்பட்டவர் அல்ல.
எனினும், அவர்கள் அனைவருமே பெரும்பாலும் அரசியல் யாப்பின் மாண்பை மதித்து நடந்துள்ளனர். சம்பிரதாய நாட்டின் முதல் குடிமகன் என்ற பெருமை அவருக்கு இருந்தாலும், ஆட்சி அதிகாரம் அவரிடம் நேரடியாக இல்லாததால் அவரது எண்ணங்களுக்குச் செயல்வடிவம் கொடுக்க இயலாது. மிகவும் நெருக்கடியான அரசியல் சூழ்நிலைகள் ஏற்பட்டு, நாடாளுமன்றத்தில் ஆட்சி தொடர்பில் இழுபறி நிலை உருவாகி மிகவும் இக்கட்டான ஒரு சூழல் ஏற்பட்டால் மட்டுமே குடியரசு தலைவர் அரசியல் யாப்பின்படி நடவடிக்கை எடுக்க முடியும். நாட்டில் சிறுபான்மையினராக இருக்கும் முஸ்லிம் மற்றும் சீக்கிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியிலிருந்த இஸ்லாமியர்களாக ஜாகிர் ஹுசைன் மற்றும் ஃபக்ருதீன் அலி அகமது ஆகியோரும், சீக்கியரான சர்தார் ஜெயில் சிங்கும் இந்தியக் குடியரசின் தலைவர்களாக இருந்துள்ளனர். ஆனால் துரதிஷ்டவசமாக ஜாகிர் ஹுசைன் மற்றும் ஃபக்ருதீன் அலி அகமது ஆகியோர் தமது முழுமையான ஆட்சிக்காலத்தை நிறைவு செய்யும் முன்னரே உயிரிழந்தனர். எனினும் அப்துல் கலாம் தனது முழு ஆட்சிக் காலத்தையும் செவ்வனே நிறைவு செய்தார். அதே போன்று சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குடியரசு துணைத் தலைவர்களாகவும் இருந்துள்ளனர். நாட்டின் உயர்ந்த பதவிகளான உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, முப்படைகளின் தலைவர்கள் ஆகியவற்றிலும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இருந்து சிறப்பித்துள்ளனர்.
தற்போது குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி பழங்குடி இனத்தைச் சேர்ந்த திருமதி திரௌபதி முறுமுவை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. அவர் வெற்றி உறுதிசெய்யப்பட்ட ஒன்றாகவே தோன்றுகிறது. இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 2021 ஆம் ஆண்டின் மதிப்பீட்டின்படி அவர்கள் சுமார் 12-13 % இருப்பதாக அறியப்படுகிறது. இந்தியா விடுதலையடைந்து 75 ஆண்டுகள் ஆவதை நாடு கொண்டாடத் தயாராகிவரும் வேளையில், பழங்குடியினத்தைச் சேர்ந்த திருமதி முறுமு நாட்டின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவது பல்லின சமூக ஒற்றுமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது என்று அரசியல் அவதானிகள் கூறுகின்றனர். மேலும் இந்தியாவில் மதச் சிறுபான்மையினர் மற்றும் பழங்குடிகளின் கூட்டுத் தொகையை எடுத்துக் கொண்டால் அது 30% மேல் இருக்கும்.
சரி, இதை இலங்கைச் சூழலுடன் ஒப்பிடுவோம். இந்தியா சுதந்திரம் அடைந்த அதே காலப் பகுதியில் தான் இலங்கையும் சுதந்திரம் பெற்றது. இந்தியாவைப் போல் இலங்கையிலும் மத மற்றும் மொழிச்சிறுபான்மையினர் குறைந்தது 25% மேலுள்ளனர். சரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறுமாயின் இது மேலும் கூடுதலாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. ஆனால் இதுவரை சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த யாரும் நாட்டின் உயர் பதவிகளில் அமர்ந்ததில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரம் அடைந்த பிறகு, `நரி` ஜெ ஆர் 1978 ஆம் ஆண்டில் மிகவும் சர்ச்சைக்குரிய புதிய அரசியல் யாப்பை கொண்டுவரும்வரை நாட்டின் அதிபர் என்பவர் மகாதேசாதிபதி அல்லது கவர்னர் ஜெனரல் என்றே அழைக்கப்பட்டார். சிறுபான்மைச் சமூகத்தினர் யாரும் எந்த உயர் பதவிக்கும்- ஏன் எதிர்க்கட்சித் தலைவராகக் கூட வந்துவிடக் கூடாது என்கிற உள்நோக்கத்துடன் கொண்டுவரப்பட்ட அரசியல் யாப்பு சிறுபான்மையினருக்கு நிரந்தரமாக வைக்கப்பட்ட `ஆப்பாகவே` உள்ளது.
இந்தியாவில் இருப்பது போன்று துணை ஜனாதிபதி என்கிற ஒரு பதவி இலங்கையில் இல்லையென்றாலும் நாட்டின் ஆட்சியமைப்பில் இரண்டாவது அல்லது மூன்றாவது நிலையில் முக்கியப் பதவிகளில் சிறுபான்மையினர்கள் யாரையும் அமர்த்துவதற்கான வழிமுறைகளோ அல்லது மனமோ ஜனாதிபதி மற்றும் பிரதமர்களிடம் இருக்கவில்லை. அரசியல் யாப்பில் அப்படியான வழியில்லை என்றாலும், அதை ஒரு மரபாகக் கூட சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்கள் முன்னெடுக்கவில்லை. இதன் காரணமாக சிறுபான்மை மக்கள் ஆட்சி அதிகாரத்திலிருந்து திட்டமிட்டு ஒதுக்கப்பட்டு அவர்களின் உரிமைகள் மற்றும் கோரிக்கைகள் புறக்கணிப்படுவதற்கு நேரடியாகவே வழி வகுத்தது. பல சந்தர்ப்பங்களில் சிறுபான்மை கட்சிகளே இலங்கை அரசின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தின, அதன் மூலம் குறிப்பிட்ட கட்சிகளும் அதன் தலைவர்களும் பலனடைந்தனர். மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் அரசாங்கத்துடன் நின்ற சௌமியமூர்த்தி தொண்டமான், அவருக்குப் பிறகு ஆறுமுகன் தொண்டமான், டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களுக்கு கூட ஆட்சி அதிகாரத்தில் முக்கியமான இடமளிக்கப்படவில்லை என்பது கசப்பான உண்மை.
அமைச்சரவை பொறுப்புகளில் மட்டுமின்றி உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, வெளியுறவு, பாதுகாப்பு, நிதி, வீட்டுவசதி, நகர்ப்புற மேம்பாடு, தொழில்துறை போன்ற முக்கிய அமைச்சுகளில் செயலாளர் பதவிகளில் கூட சிறுபான்மை சமூகத்தினர் எப்போதவது அத்திபூத்தாற்போன்று இருந்துள்ளனரே தவிர முக்கிய பொறுப்புகளில் அமரவைக்கப்படவில்லை. பாகிஸ்தானில் கூட இல்லாத வகையில் சிங்கள ஆட்சியாளர்கள் தமது பேரினவாதக் கொள்கைகளை தக்கவைக்கவும், வாக்குவங்கி அரசியலை முன்னெடுக்கவும் முக்கியப் பதவிகளில் முன்னாள் படைத்தளபதிகளை அமர்த்தினர். இதன் மூலம் சிறுபான்மை மக்களுக்கு மிகத் தெளிவாக ஒரு செய்தி தொடர்ந்து சொல்லப்பட்டது, அதாவது .இது சிங்கள நாடு, இங்கு சிங்களவர்களின் ஆட்சிதான் நடைபெறுமென்று`. சிறுபான்மை மக்கள் ஆட்சி அதிகாரத்தில் புறக்கணிக்கப்படுவதற்கு சிங்கள ஆட்சியாளர்கள் எந்தளவிற்கு பொறுப்போ அந்தளவிற்கு தமிழ் மற்றும் முஸ்லிம் தலைமைகளும் கட்சிகளும் பொறுப்பு என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. குறுகிய நோக்கு கொண்ட சொந்த சுயநலன்களிற்காக தமது மக்களின் நலன்களை சிங்கள ஆட்சியாளர்களிடம் அடமானம் வைத்துவிட்டனர் என்கிற குற்றச்சாட்டு தொடர்ந்து நிலவி வருகிறது.
சிறுபான்மையினர் புறக்கணிப்பு என்பது இலங்கையில் அதிகாரபூர்வமாகவும் அதிகாரபூர்வமற்ற வகையிலும் ஒரு உள்ளார்ந்த பலவீனமாகவே இருக்கிறது.
நிறைவேற்று ஜனாதிபதி அதிகார முறைமை கொண்டுள்ள நாடுகளிடமிருந்து இலங்கை எதுவும் இதுவரை கற்றுக்கொள்ளவில்லை. அவ்வகையில் சிறந்த உதாரணங்களாகத் திகழும் அமெரிக்கா மற்றும் பிரான்ஸிடமிருந்து இலங்கை பாடம் கற்க வேண்டும். நாட்டில் புதிய அரசியல் யாப்பு ஒன்றை ஏற்படுத்துவதற்கான பேச்சுக்கள் நடைபெறும் வேளையில் சிறுபான்மைச் சமூகத்தை சட்டரீதியாக அனைத்து மட்டங்களிலும் உள்வாங்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். தமிழ் முஸ்லிம் அரசியல்வாதிகள், குறிப்பாகத் தமிழர் தரப்பு, இது சிங்கள தேசத்திற்கான அரசியல் யாப்பு, தனி நாடே நிரந்திர தீர்வு என்கிற காணல் நீரிலிருந்து விடுபட வேண்டும். தமக்கான உரிமைகளை வென்றெடுக்க அவர்கள் இதயசுத்தியோடு செயல்படவில்லை என்பது யதார்த்தமான உண்மை. நாட்டிலிருக்கும் மக்கள் தொகையை ஒப்பிடும் போது தமிழ், முஸ்லிம் கட்சிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகம். இந்த கட்சிகள் தமக்குள்ளே அடித்துக் கொண்டு யார் பெரியவர்கள் என்பதற்காகப் போட்டியிட்டு தமது சமூகம் சார்ந்த நலன்களை முன்னெடுக்கவில்லை. `நீடித்திருக்கும் நிலையான அரசியல் தீர்வு` என்று மேடைதோறும் முழங்கி வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அல்லது அவர்களை எதிர்ப்பதே தமது அரசியல் கொள்கை என்று இருக்கும் இதர தமிழ் அரசியல் கட்சிகளோ தமிழ் மக்களுக்கான தீர்வு இப்படியாகத்தான் இருக்க வேண்டும் என்று பொதுவெளியில் தெரிவித்து அவர்கள் முன்னால் அதை வைக்கவில்லை.
இனியாவது காலம் தாழ்த்தாமல், புதிய அரசியல் யாப்பில் சிறுபான்மை மக்களுக்கு உயர் பதவிகளில் ஒதுக்கீடு இருக்கும் வகையில் அதில் அம்சங்கள் உள்ளடக்கப்பட வேண்டும். இந்தியா எமது `தாய் நாடு , தந்தை நாடு` என்று சவடால் பேசுவதையும், எமக்கான தீர்வு உள்நாட்டில் இல்லை அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் தான் உள்ளது என்பதையெல்லாம் கூறுவதைவிட்டு, அங்கிருக்கும் ஆட்சி முறைமையிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். அமெரிக்காவில் இருப்பதைப் போன்று ஜனாதிபதி பதவிக்கு ஒருவர் போட்டியிடும் போது, அவருடன் இணையாக சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் துணை ஜனாதிபதியாகப் போட்டியில் நிறுத்தப்பட வேண்டும் முறை, அல்லது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை மாற்றப்பட்டு நாடாளுமன்ற ஜனநாயக முறை கொண்டுவரப்பட்டால், துணை ஜனாதிபதி அல்லது துணைப் பிரதமர் போன்ற பதவி சிறுபான்மையினருக்கு என்று ஒதுக்கீடு செய்யப்பட புதிய அரசியல் யாப்பில் வழி செய்யப்பட வேண்டும். இதற்குச் சிறந்த உதாரணம் லெபனான் நாட்டின் அரசியல் யாப்பு. அதை நாட்டிலுள்ள மெத்தப்படித்த மேதாவிகள் வாசிக்க வேண்டும்.
“ஒன்று பட்டால் உண்டு வாழ்வு – நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே”
என்பதை இலங்கையிலுள்ள மூவின மக்களும் புரிந்து நடந்துகொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.