காத்திருப்போர் வரிசை நீண்டு சென்றும் பயனில்லை என மக்கள் விசனம்…
தங்கள் வெளிநாட்டுப் பயணங்களுக்குத் தேவையான கனடிய பயணச்சீட்டைப் பெறுவதற்காக மொன்றியால் நகரின் பல பகுதிகளில் காத்திருப்போர் வரிசை நீண்டு சென்றும் அதனால் பயனில்லை என மக்கள் விசனம் கொண்டுள்ளனர். தினமும் நூற்றுக்கணக்கான விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க முயன்றாலும் முன்னைய விண்ணப்பங்களை கவனத்திற்கு எடுக்க வேண்டும் என்பதற்காக புதிய விண்ணப்பங்களை ஏற்கத் தயாரில்லை என பதிலளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக 23ம் திகதி வியாழக்கிழமையன்று ஒட்டாவா பாராளுமன்றத்திலும் எதிர்க்கட்சி உறுப்பினர் கேள்வி எழுப்பியதில் நீண்ட நேரமாக இந்த விடயம் தொடர்பாக விவாதம் நடைபெற்றது என்றும் அறியப்படுகின்றது.
இது ◌தொடர்பாக மேலும் அறியப்படுவதாவது;_
கனடாவின் மொன்றியால் மாநகரில் சில இடங்களில் இயங்கிவரும் கனடிய கடவுச் சீட்டு வழங்கும் அலுவலகங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் மக்களால் நிரம்பி வழிவதாகவும் ஆனால் கடவும் வழங்கும் நடவடிக்கைகள் மிகவும் தாமதமாகவே இடம்பெறுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது 22ம் திகதி புதன்கிழமையன்றும்-, நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் பயணங்களுக்குத் தேவையான புதிய கடவுச் சீட்டை பெறுவோம் என்ற நம்பிக்கையில் டவுன்டவுன்மொன்றியால் கடவுச் சீட்டு அலுவலகத்திற்கு வெளியே காத்திருந்தார்கள் என்றும் அங்கு அவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களோடு சென்று காத்திருந்தார்கள் என்றும் கூறப்படுகின்றது.
இந்த வாரம் ஒவ்வொரு நாளும் அலுவலகத்திற்கு வெளியே ஏராளமான மக்கள் கூடினர், ஏனெனில் – அவர்களில் பலர் 48 மணி நேரத்திற்குள் புறப்படும் பயணத் திகதிகளைக் கொண்டுள்ளனர் – தங்கள் கடவுச்சீட்டைப் புதுப்பிக்க அல்லது முதல் முறையாக கனேடிய பாஸ்போர்ட்டைப் பெற முயற்சிக்கின்றனர். இவ்வாறு அங்கு சென்ற ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தார்.
கடவுச் சீட்டு வழங்கும் செயற்பாடுகளுக்கு பொறுப்பான கனடாவின் சமூக மேம்பாட்டு அமைச்சர் கரினா கோல்ட் ஒட்டாவாவில் பாராளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் கடவுச் சீட்டு அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் விண்ணப்பதாரிகள் பயணம் செய்து புறப்படும் தேதிகளுக்கு முன் கடவுச் சீட்டுக்களைப் பெற உறுதி மொழி வழங்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அறிவித்துள்ளார்.
ஆனால் வரிசையில் காத்திருக்கும் மக்கள், உண்மையில் அமைச்சரின் அறிவிப்பை தாங்கள் நம்பவில்லை என்றும், அதிகாரிகள் அனைவரையும் சரியான நேரத்தில் ஒன்று திரட்டி செயலாக்க முடியாது என்றும் வதந்திகள் பரவுவதாகவும் தங்களுக்கு தகுந்த நேரத்தில் கடவுச் சீட்டு பெற முடியும் என்ற நம்பிக்கை இல்லை என்றும் கூறுகிறார்கள்.
கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு காணப்படுவதாகவும், 48 மணித்தியாலங்களுக்குள் கடவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளும் “அவசர” முறையைப் பயன்படுத்துவதனால் தாமதம் ஏற்படுவதாகவும் கடவுச் சீட்டு வழங்கும் விவகாரங்களுக்கான அலுவலகத்தின் அதிகாரி ஓருவர் ஊடக நிறுவனங்களுக்கு அனுப்பிவைத்துள்ள செய்திஅறிக்கையில் தெரிவித்துள்ளார்.