மன்னார்நிருபர்
(25-06-2022)
மன்னார் – நொச்சிக்குளம் பகுதியில் இடம் பெற்ற இரட்டைக் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மன்னார் நீதிமன்றத்தில் குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று வெள்ளிக்கிழமை (24) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, நேற்று முன்தினம் வியாழக்கிழமை (23) கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் மாத்திரம் மன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
ஏனைய 18 சந்தேக நபர்களும் நேற்று வெள்ளிக்கிழமை மன்னார் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்படவில்லை.
தற்போதைய நெருக்கடி நிலை காரணமாக சந்தேகநபர்களை மன்றில் ஆஜர்படுத்த முடியாது போனதாக பொலிஸார் மன்றில் அறிவித்துள்ளனர்.
மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபரை கைது செய்தவற்கான தேவை உள்ளதாக பொலிஸார் மன்றில் தெரிவித்துள்ளனர்.
விடயங்களை ஆராய்ந்த மன்னார் நீதவான், சந்தேகநபர்கள் 20 பேரையும் எதிர்வரும் ஜூலை மாதம் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 10 ஆம் திகதி மன்னார் நொச்சிக்குளத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில், உயிலங்குளம் பகுதியை சேர்ந்த 33 மற்றும் 42 வயதான சகோதரர்கள் இருவர் கொலை செய்யப்பட்டிருந்தனர்.
இரண்டு கிராமங்களை சேர்ந்த இரண்டு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறே கொலைக்கான பின்னணி என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை 18 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பில் உயிலங்குளம்,மற்றும் தலைமன்னார் பொலிஸ் உத்தியோகத்தர்களும் மன்னார் குற்றத்தடுப்பு பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.