மன்னார் நிருபர்
(26-06-2022
தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் நடுக்கடலில் தவறி விழுந்து மாயமான நிலையில் இன்று ஞாயிற்றுகிழமை (26) தனுஷ்கோடி கடற்கரையில் உயிரிழந்த நிலையில் உடல் கரை ஒதுங்கியது.
உடலை கைப்பற்றிய மரைன் போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக ராமேஸ்வரம் அரசு மருத்துமனையில் வைத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 16ஆம் தேதி 7 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.
மீனவர்கள் மணப்பாடு கடற்கரை அருகிலுள்ள கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது படகில் இருந்த ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர் முகமது அலி ஜின்னா (25) படகிலிருந்து தவறி விழுந்து மாயமானார்.
மாயமான மீனவர் முகமது அலி ஜின்னாவை படகில் இருந்த மீனவர்கள் மற்றும் சக மீனவர்கள் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தேடி வந்தனர்.
இந் நிலையில் இன்று காலை தனுஷ்கோடி அடுத்த முகுந்தராயர் சத்திரம் தெற்கு கடற்கரை அருகே அடையாளம் தெரியாத ஆண் உடல் ஒன்று அழுகிய நிலையில் கரை ஒதுங்கி இருப்பதாக மரைன் போலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து மரைன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் வைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாயமான மீனவர் முகமது அலி ஜின்னாவின் உறவினர்கள் கரை ஒதுங்கிய உடல் மீனவர் முகமது அலி ஜின்னாவாக இருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் உடலை நேரில் வந்து அடையாளம் கண்டதில் கரை ஒதுங்கிய உடல் மாயமான மீனவர்கள் முகமது அலி ஜின்னா என உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து வழக்கு பதிவு செய்த மரைன் போலீசார் உடற்கூறு ஆய்வுக்கு பின்னர் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.