நாட்டில் தற்போது மோசமாக அதிகரித்து செல்லும் உணவுப் பொருட்களுக்கான விலையேற்றம் காரணமாக இளைய பருவத்தினர் போசாக்குக் குறைபாட்டால் பாதிக்கப்படும் நிலையைக் கருத்தில் கொண்டு IMHO-USA அமைப்பு மகிழ்ச்சிகர உணவு வழங்கும் திட்டத்தை கிளிநொச்சி, மட்டக்களப்பு மேற்கு மற்றும் ஹட்டன் பகுதிகளில் செயற்படுத்தி வருகின்றது.அவ்வகையில்
கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கண்டாவளை கல்வி கோட்டத்தில் இயங்கும் 18 முன்பள்ளிகளைச் சேர்ந்த 466 பிள்ளைகளுக்கான மேற்படி திட்டத்தை IMHO-USA அமைப்பு World Vision உடன் இணைந்து செயல்படுத்தி வருகின்றது.
இதனை அடியொற்றி கண்டாவளையின் தருமபுரம் புதிய உதயம் முன்பள்ளியில் 52 பிள்ளைகளுக்கான உணவு வழங்கும் இத்திட்டத்தை IMHO-USA அமைப்பின் இலங்கைக்கான பணிப்பாளர் திரு.சு.கிருஷ்ணகுமார் அவர்கள் கிளிநொச்சி வடக்கு கல்வி வலயத்தின் முன்பள்ளி உதவிக்கல்வி பணிப்பாளர் திரு.பி.விஜயநாதன் உடன் இணைந்து பார்வையிட்டார்.
அத்துடன் இவ்விஜயத்தின் போது கிளிநொச்சி தெற்கு வலயத்தை சேர்ந்த ஐந்து பாடசாலைகளில் 700 மாணவர்களுக்கான காலையில் உணவு வழங்கும் திட்டம் தொடர்பில் அப்பாடசாலை அதிபர்களுடன் கலந்துரையாடினார்.
இத்திட்டம் வருகின்ற கிழமை தொடக்கம் இப்பாடசாலைகளில் ஆரம்பிக்கப்படவுள்ளது.