ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராசாவினது வாதப் பிரதிவாதங்களை செவிமடுத்த மேல் நீதிமன்ற நீதிபதி வழங்கிய தீர்ப்பு
பயங்கரவாதத்தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட பெரும்பான்மை இனத்தைச் சார்ந்த புலனாய்வு அதிகாரியின் இறப்புக்குப் பின்னர் அவரது மனைவிக்கு நஸ்டஈடு வழங்கப்பெற்ற சம்பவம் தொடர்பாக தென்னிலங்கையில் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது. இந்த வழக்கில் மெற்படி புலனாய்வு அதிகாரியின் மனைவியின் சார்பாக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராசாவினது வாதப் பிரதிவாதங்களை செவிமடுத்த மேல் நீதிமன்ற நீதிபதி வழங்கிய தீர்ப்பினால் தென்னிலங்கையில் அரசாங்கத்தின் அநீதியான நடவடிக்கைக்கு எதிராக நீதி கிட்டியுள்ளதாக பெரும்பான்மை இன மக்கள் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராசா அவர்களைப் பாராட்டி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் தொடர்பாக அறியப்படுவதாவது;_
பயங்கரவாதத்தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட கைதிக்கு நஸ்டஈடு வழங்கப்பட்ட முதல் வழக்கு இது எனவும் தற்போது தென்னிலங்கையில் பேசப்படும் ஒரு வழக்காக இது கருதப்படுகின்றது.
கொழும்பு – 8 பொரளை பொலிஸ் நிலையத்துக்கு அருகில் இரகசியமாக இயக்கப்பட்ட புலனாய்வுப் பிரிவில் புலனாய்வு அதிகாரியாகச் சேவையாற்றி வந்த துர்யலாகே தர்மதாச 2007ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 7ம் திகதி பயங்கரவாதத் தடைப் பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட அரச புலனாய்வுத்துறை அதிகாரியை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை நடத்திய பின்னர் அவருக்கு எதிராக RDX 23 கிராம் தனி உடமையில் வைத்திருந்தமை, 35 துப்பாக்கி ரவைகள் மற்றும் 8 சயனைட் வில்லைகளை தனி உடமையில் வைத்திருந்தமை மற்றும் பாதுகாப்பு இரகசியங்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் உளவுத் துறைக்கு வழங்கியமையென மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு அவசரகால ஒழுங்கு விதிகளின் கீழ் 2010ம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றச் சாட்டுப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
12 வருடங்களாக நடைபெற்ற விசாரணைகளின் பின்னர் அரசாங்க தரப்பினதும், எதிராளி தர்மதாச சார்பாக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராசாவினதும் வாதப் பிரதிவாதங்களை செவிமடுத்த மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டிஆராச்சி, தனது தீர்ப்பில் எதிராளி தரப்பு வாதத்தை கவனத்தில் கொண்டு எதிராளி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை அரசாங்க தரப்பு நியாயமான சந்தேகத்துக்கு அப்பால் நிரூபிக்க தவறியுள்ளமையால் எதிராளியான முன்னாள் புலனாய்வுத்துறை அதிகாரியை 2019ம் ஆண்டு விடுதலை செய்து அறிவித்தார்.
2019ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட தர்மதாச சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா பொலிஸ் மா அதிபர், களனி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஷான் டயஸ், சிறைச்சாலைப் பொறுப்பதிகாரி, சிறைச்சாலை அத்தியட்சகர், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோரை பிரதிவாதிகளாகப் பெயர் குறிப்பிட்டு அரசியலமைப்பின் 17 மற்றும் 126 ஆம் உறுப்புரைகளுக்கு அமைய தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது சிறுநீரக பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த தர்மதாஸ சிறுநீரகக் கோளாறால் அவஸ்தைப்பட்டுள்ளார். ஆனால் அதனைச் சிறை அதிகாரிகள் ஒரு பொருட்டாகவே எடுக்கவில்லை. சிகிச்சை அளிக்காமல் கைதியை நோயில் துடிக்க விடுவது கூட கோரமான சித்திரவதைதான். விளக்கமறியலில் இருந்த போது தர்மதாச அடிக்கடி சுகவீனம் அடைந்துள்ளார்.
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது உரிய சிகிச்சைகள் வழங்கப்படாமையாலேயே அவரின் நோய் தீவிர நிலைமைக்குச் சென்றுள்ளது. இப்போது அவரின் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து இரத்தச் சுத்திகரிப்புச் செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
மனுதாரருக்கு உரிய சிகிச்சையும், பராமரிப்பும் வழங்கப்பட்டிருந்தால் இவ்வாறான மோசமான நிலையை அடைந்திருக்க மாட்டார். தர்மதாசவின் இந்த நிலைக்கு பொலிஸாரும், சிறைச்சாலை தரப்பினரும், சட்ட மா அதிபருமே காரணம் எனக் குற்றம்சாட்டி நீதியான நிவாரணத்தைக் கோரி உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அத்துடன் அந்த மனுவில் ஒரு நிரபராதியான நேர்மையான பொலிஸ் உத்தியோகத்தரை 12 வருடங்கள் சிறை வைத்திருந்து அவரின் எதிர்காலத்தையே இருளாக மாற்றிவிட்டது அரசாங்கம். தர்மதாச குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்ட போதும் அவரை மீளவும் பொலிஸ் பதவியில் அமர்த்தவோ நஷ்டஈடு வழங்கவோ எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
தகுந்த சிகிச்சையின்றி மேற்படி புலனாய்வு அதிகாரி சிறையில் இருந்தபோது மாமியாரின் ஓய்வூதியப் பணமே தர்மதாசவின் பிள்ளைகளுக்கும், மனைவிக்கும் வாழ்க்கையை கொண்டு செல்ல உதவியது. தர்மதாச விடுவிக்கப்பட்ட பின்னரும் கூட பொலிஸ் வேலை மீளக் கிடைக்காமையால் தொடந்தும் அவரது குடும்பம் மாமியாரின் ஓய்வூதியப் பணத்தையே தங்கள் வாழ்வாதாரமாக நம்பியிருக்க வேண்டிய அவலம் தொடர்கின்றது என மனுத்தாக்கல் செய்யப்பட்டிருக்கையில் தர்மதாச 2021ம் ஆண்டு மார்கழி மாதம் மரணமடைந்ததையடுத்து தர்மதாசவின் மனைவியான சந்தியா தமயந்தி மனுதாரராக பெயரிடப்பட்டு தாக்கல் செய்யப்பட்ட மனு உயர் நீதிமன்றில் விசாரணைக்குத் திகதி குறிப்பிடப்பட்டிருக்கையில் இம்மாதம் 24ஆம் திகதியிடப்பட்டு தர்மதாசவின் மனைவிக்கு 55,23,808.18 ரூபாவிற்கான காசோலை அரசாங்க தரப்பால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. என்பது இங்கு குறிப்பிடத்தக்கது