யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்
“மக்கள் பட்டினியால் வாடினால், நாம் மட்டும் உண்பதில் அர்த்தம் இல்லை. ஆகவே, சென்று எதையாவது செய் எனக்கூறியே – அம்மா என்னை நாடாளுமன்றம் அனுப்பி வைத்தார். 6 மாதங்களுக்குள் உங்களாலும் முடியாவிட்டால் – பதவி துறந்து வாருங்கள் என மனைவியும் அறிவுரை வழங்கியுள்ளார். அதேபோல ‘தாத்தா கம் ஹோம்’ (அப்பா வீட்டுக்கு வாங்க) – என பதாகை ஏந்தப்படும் என பிள்ளைகளும் அறிவித்துவிட்டனர். அந்தவகையில் எனக்கான காலம் 6 மாதங்கள். அதாவது 960 மணித்தியாலங்களே எனக்கு வேலை செய்வதற்கான நேரம். அந்த காலப்பகுதிக்குள் முன்னேற்றகரமாக எதையாவது செய்யாவிட்டால், ‘தாத்தா கம் ஹோம்’ எனக்கூறி பிள்ளைகள் எனது வீட்டுக்கு முன் வந்து விடுவார்கள். அப்போது எனக்கு வீடு செல்ல வேண்டிவரும். என்னைபோல் ஒருவருக்கு 6 மாதங்களுக்குள் மக்களுக்கு முன்னேற்றகரமான – பொசிற்றிவ்வாக – எதையாவது செய்ய முடியாவிட்டால், பதவி வகித்து என்ன பயன்?”……இவ்வாறும் கூறியிருப்பவர் பசிலின் இடத்துக்கு நியமிக்கப்பட்டிருக்கும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சரான தம்மிக்க பெரேரா.
ஒரு கோஷஸ்வரரும் கொடை வள்ளலுமாகிய அவர் அரசியலுக்கு புதுசு.அவர் மீது வரி ஏய்ப்புக் குற்றச்சாட்டுக்கள் உண்டு.அவர் நினைப்பது போல நாட் கணித்து ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நிமிர்த்த முடியாது.இதே போன்ற நெருக்கடி கிரேக்கத்தில் ஏற்பட்ட பொழுது ஐந்து ஆண்டுகளுக்குள் ஏழு தடவைகள் அரசாங்கம் மாறியது.நிதி அமைச்சர்கள் மாறினார்கள். அர்ஜென்டினாவில் 5 ஆண்டுகளுக்குள் 5 தடவைகள் அரசாங்கம் மாறியது. நிதியமைச்சர்கள் மாற்றப்பட்டார்கள்.இலங்கைத் தீவைப் பொறுத்தவரை, ராஜபக்சக்களின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் இதுவரையிலும் நான்கு நிதியமைச்சர்கள் வந்துவிட்டார்கள். மூன்று தடவைகளுக்கு மேல் அமைச்சரவை மாற்றப்பட்டிருக்கிறது. எனினும் ரணில் பிரதமராக வந்த பின்னரும் பொருளாதார நிலையில் திருப்பகரமான மாற்றங்கள் எவையும் ஏற்படவில்லை.இன்னும் கூராகச் சொன்னால் ரணிலுக்கு முன்பு இருந்ததை விடவும் நிலைமை மோசமாக இருக்கிறது என்பதே சரி.ரணில் ஒரு மந்திரவாதி இல்லை.அவருடைய அமைச்சரவையில் இருக்கும் தம்மிகவும் மந்திரவாதி இல்லை.மந்திர தந்திரங்களில் தேர்ந்த ஞானக்காவே தோற்றுப்போய் விட்டார். கடனை வாங்கி எவ்வளவு காலத்துக்கு நாட்டை நிர்வகிப்பது?
எரிபொருள் நெருக்கடியால் நாடும் வாழ்க்கையும் பெருமளவுக்கு முடங்க தொடங்கிவிட்டன.பாடசாலைகள் முழு அளவில் இயங்குவதில்லை.அரசு அலுவலகங்கள் முழு அளவில் இயங்குவதில்லை.தனியார் வாகனங்கள் பெருமளவுக்கு வீதியில் இல்லை. பொதுப் போக்குவரத்து வாகனங்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஓடித் திரிகின்றன.இதனால் வாழ்க்கை பெருமளவுக்கு முடக்கப்பட்டு விட்டது. இப்பொழுது எரிபொருளுக்காக வரிசைகளில் நிற்பதுபோல எதிர்வரும் மாதங்களில் உணவுப் பொருளுக்காகவும் வரிசைகளில் நிற்கும் ஒரு நிலை வரலாம் என்று ஏற்கனவே எச்சரிக்கப்பட்டு விட்டது. அரிசி,கோதுமை மா, சீனி ஆகியவற்றின் விலைகள் தொடர்ந்து அதிகரிக்கின்றன.இதனால் நடுத்தர வர்க்கமும் அரிசியை கொள்வனவு செய்ய முடியாத ஒரு நிலைமை வரலாம். பசி வந்திடப் பத்தும் பறக்கும்.இப்பொழுது எரிபொருளுக்காக வரிசைகளில் நிற்பவர்களுக்கு இடையிலேயே வன்முறையான உரையாடல்களையும்,வன்முறைச் செயற்பாடுகளையும் காணக்கூடியதாக உள்ளது.பசியோடு உணவுப் பொருட்களுக்காக வரிசையில் நிற்கும் ஒரு நிலைமை வந்தால் அங்கே வன்முறை இதைவிடப் பாரதூரமாக இருக்கலாம்.
நடப்பு நிலைமைகளைத் தொகுத்து பார்த்தால் இப்பொழுதுதான் அதிகரித்த அளவில் போராட்டங்கள் வெடிக்க வேண்டும்.ஆனால் முன்னரை விடப் போராட்டங்கள் சோர்ந்து போயிருக்கின்றன என்பதே உண்மை. சில நாட்களுக்கு முன் ஜேவிபி ஒரு ஆர்ப்பாட்டப் பேரணியை ஒழுங்குபடுத்தியது. எரிபொருளுக்கும் எரிவாயுவுக்குமாக வரிசைகளில் நிற்பதற்கு பதிலாக அரசாங்கத்தை எதிர்த்துக்கொண்டு தெருவில் இறங்குங்கள் என்று ஜேவிபி அழைப்பு விடுத்திருக்கிறது.ஆனாலும் ரணிலுக்கு முன்பிருந்ததோடு ஒப்பிடுகையில் இப்பொழுது போராட்டங்களின் வேகமும் செறிவும் குறைந்துவிட்டன என்பதே உண்மை. காலிமுகத்திடலில் போராட்டக் கிராமத்திலும் பிற்பகல் நேரங்களில் வருபவர்களின் தொகை குறைந்து விட்டது. நாட்டை முடக்கும் விதத்தில் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு தொழிற்சங்கங்கள் தயங்குகின்றன.ஏனெனில்,ஏற்கனவே விநியோகச்சங்கிலி குலைந்து போயிருக்கிறது.தொழிற்சங்கங்களின் போராட்டத்தால் அது மேலும் சிதைவடைந்தால்,அது மக்களையே தாக்கும்.ஏற்கனவே நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் வாழ்க்கை மேலும் பாதிப்புக்கு உள்ளாகலாம் என்று ஜேவிபியின் தொழிற்சங்கம் கூறுவதாக,அண்மையில் இலங்கை ஆசிரியர் தொழிற்சங்கத்தின் செயலாளர் தெரிவித்தார்.
அரசாங்கத்துக்கு எதிராக போராடுவதில் உள்ள ஆபத்தான விடயமும் அதுதான். அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் எனப்படுவது அதன் தர்க்கபூர்வ விளைவாக பொதுமக்களைத்தான் மேலும் தாக்கும்.ஆனால்,நெருக்கடிகள் மேலும் தீவிரம் அடைந்தால் போராடினால்தான் வாழ்க்கை என்று ஒரு நிலை தோன்றலாம்.
எனினும் அவ்வாறான போராட்டங்களுக்கு ஒன்றிணைந்து தலைமைதாங்க எதிர்க்கட்சிகள் தயாராகவில்லை.கடந்த பல மாதகால நெருக்கடிகளுக்கு எதிர்க்கட்சிகளும் பொறுப்புக்கூற வேண்டும். எதிர்க்கட்சிகள் மத்தியில் எல்லா கட்சிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட,ஜனவசியம் மிக்க,மக்களுக்கு நம்பிக்கை ஊட்டக்கூடிய தலைவர்கள் கிடையாது.அப்படி யாரும் இருந்திருந்தால், கடந்த சில மாதங்களுக்குள் அவர்கள் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பியிருந்திருப்பார்கள்.அப்படி யாரும் இருந்திருந்தால்,ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்படும் ஒரு நிலைமை தோன்றியிருந்திருக்காது.அப்படி யாரும் இருந்திருந்தால் நாடு அண்மை நாட்களாக பெருமளவுக்கு முடங்கும் ஒரு நிலைமை தோன்றியிருக்காது.
இந்த விடயத்தில் எதிர்க்கட்சிகளுக்கும் கூட்டுப் பொறுப்பு உண்டு.பழியை அரசாங்கத்தின்மீது போட்டுவிட்டு எதிர்க்கட்சிகள் தப்பித்துக் கொள்ளப் பார்க்கின்றன.பொறுப்பை ஏற்று ரிஸ்க் எடுக்க எந்த ஒரு எதிர்க்கட்சித் தலைவரும் தயார் இல்லை.இந்த நேரத்தில் ரிஸ்க் எடுப்பது என்பது ஒன்றில் மக்கள் போராட்டங்களுக்கு தலைமை தாங்கி தாமரை மொட்டு அரசாங்கத்தை வீட்டுக்குத் துரத்துவதுதான்.அது சாத்தியமான ஒன்றுதான்.ஏனென்றால் தாமரை மொட்டுக் கட்சியின் பிதாவான மகிந்த ராஜபக்சபதவி விலகி விட்டார். அக்கட்சியின் மூளை என்று வர்ணிக்கப்படும் பசில் ராஜபக்ஷ பதவி விலகி விட்டார்.யாப்பின்படி அவர்கள் பதவியை விட்டு விலகவில்லை.அவர்கள் யாப்புக்கு வெளியே நடந்த போராட்டங்களின் விளைவாகத்தான் பதவிகளில் இருந்து விலக வேண்டி வந்தது.எனவே போராட்டங்களை ஒழுங்குபடுத்தி அவற்றுக்கு தலைமை தாங்கினால் தாமரை மொட்டு அரசாங்கத்தை துரத்தலாம்.ஆனால் அதற்கு எதிர்க்கட்சிகள் தயாரில்லை.
இப்பொழுது சஜித் அணியும் ஜேவிபியும் கூட்டமைப்போடு இணைந்து ஒரு புதிய கூட்டுக்குப் போக முயற்சிப்பதாக செய்திகள் கிடைக்கின்றன. இதுபோன்ற நெருக்கடிகள் ஏற்படும் பொழுது உலகின் முன்னுதாரணம் மிக்க ஜனநாயக நாடுகளில் ஒரு தீர்வுதான் ஏற்றுக்கொள்ளப்படும்.அதுதான் தேசிய அரசாங்கம். ஆனால் இலங்கைத் தீவு அப்படிப்பட்டயொரு தேசிய அரசாங்கங்கத்தை உருவாக்கக்கூடிய ஜனநாயக பாரம்பரியத்தை கொண்டிருக்கவில்லை.இலங்கைத்தீவைப் பொறுத்தவரையிலும் தேசிய அரசாங்கம் என்பது அனைத்து கட்சி அரசாங்கந்தான். மாறாக அனைத்து தேசிய இனங்களையும் பிரதிபலிக்கும் ஓர் அரசாங்கம் அல்ல.அதாவது இலங்கைத் தீவின் பல்லினத் தன்மையை ஏற்றுக் கொள்ளும் ஓர் அரசாங்கம்தான் உண்மையான தேசிய அரசாங்கமாக இருக்கமுடியும். அப்படி ஒரு அரசாங்கத்தை உருவாக்க சிங்களக் கட்சிகள் தயாரா?
அப்படி ஒரு தேசிய அரசாங்கம் என்பது தோல்விகளுக்கு கூட்டுப் பொறுப்பை ஏற்கும்.எதிர்காலத்தை நோக்கி கூட்டாக நம்பிக்கையைக் கட்டியெழுப்பும். ஆனால் அப்படி ஒரு தேசிய அரசாங்கத்தை உருவாக்கத் தேவையான செழிப்பான ஜனநாயகப் பாரம்பரியம் இலங்கையில் கிடையாது.அதனால் தான் ஒரு தேசிய அரசாங்கத்தை உருவாக்கத் தயாரற்ற ஆளுங்கட்சியானது, ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் ஆக்கியதன்மூலம் தன்னை தற்காத்துக் கொண்டிருக்கிறது.அதாவது ரணில் விக்ரமசிங்க தலைமை தாங்கும் தாமரை மொட்டு அரசாங்கம் எனப்படுவது அதன் மெய்யான பொருளில் ஒரு தேசிய அரசாங்கத்தை உருவாக்கத் தயாரற்ற ஒரு மனநிலையின் வெளிப்பாடுதான்.
அண்மைய நிலவரங்களின்படி,சஜித் பிரேமதாசவின் தலைமையிலான எதிர்க்கட்சி ஒரு இடைக்கால ஏற்பாடாக சர்வ கட்சி அரசாங்கத்திற்கு தயார் என்று தெரிகிறது.ஜேவிபியும் அதற்குத் தயார் என்று தெரிகிறது. அரசாங்கத்திலிருந்து பிரிந்து போய் இயங்கும் குழுவும் அதற்கு தயார் என்று தெரிகிறது.ராவய ஆசிரியர் விக்டர் ஐவன் போன்ற சிங்கள மக்கள் மத்தியில் உள்ள கணிப்புக்குரிய கருத்துருவாக்கிகள், இடைக்கால யாப்பு ஒன்றுக்குப் போக வேண்டும் என்று கேட்கிறார்கள்.ஒரு அரசியல் மறுசீரமைப்பை இறுதி இலக்காக வைத்து அவ்வாறு ஒரு இடைக்கால ஏற்பாட்டுக்கு போகவேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள்.அதாவது எதிர்க்கட்சிகள்,விக்ரர் ஐவன் போன்றவர்களின் முன்மொழிவு ஒரு தேசிய அரசாங்கம் அல்லது இப்போது இருப்பதை விடவும் அனைத்துக் கட்சிகளின் பங்களிப்பையும் பெற்ற ஒரு இடைக்கால ஏற்பாடுதான்.
அது இடைக்கால ஏற்பாடுதான் என்பது எல்லாருக்குமே நன்கு தெரிந்திருக்கிறது ஒரு நிரந்தர ஏற்பாடாக தேர்தலை வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கேட்கின்றன.அவ்வாறு தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கத்திடம் காசு இல்லை என்றால் அதற்கு உதவ சில வெளிநாடுகள் தயாராகக் காணப்படுவதாக சில எதிர்க்கட்சி பிரமுகர்கள் கூறுகிறார்கள்.அப்படி ஒரு தேர்தலை நடத்துவதன் மூலம் ஒரு புதிய அரசாங்கத்தை,ஒரு புதிய தலைமையை,மிகக் குறிப்பாக நாட்டு மக்கள் அனைவருக்கும் நம்பிக்கை ஊட்டக்கூடிய ஒரு தலைமையை உருவாக்கலாமா என்ற கேள்வி இங்கு முக்கியம். ஏனென்றால் இப்பொழுது அரங்கில் உள்ள சிங்களக் கட்சிகள் மத்தியில் அப்படிப்பட்ட தலைவர்கள் யாரும் கிடையாது.கட்சிகளுக்கு வெளியிலிருந்துதான் ஒருவரைக் கொண்டு வர வேண்டும்.அவ்வாறு கொண்டு வரப்பட்ட ஒருவர்தான் தம்மிக பெரேரா. பொருளாதார நெருக்கடி பற்றியும் அதற்கான தீர்வு பற்றியும் அவர் எப்படிப்பட்ட தெளிவோடு இருக்கிறார் என்பதை இக்கட்டுரையின் தொடக்கத்தில் பார்த்தோம்.அவரைப் போன்றவர்களைத்தான் வெளியில் இருந்து கொண்டு வர முடியும் என்றால் நாட்டின் நிலைமை எப்படி அமையும்?